Published:Updated:

ஒரு வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன்!

ஒரு வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன்!
ஒரு வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன்!

ஒரு வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன்!

ஒரு வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன்!

பிரசாரத்தில் கலக்கிய ஸ்டாலின்
 

மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்றுவது பற்றி தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் தொடர்ந்து பேசும் முயற்சியாக மு.க.அழகிரி சென்னையில் முகாமிட்டு இருந்த நேரத்தில், மதுரையில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

ஒரு வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன்!

வேட்பாளர் பட்டியலை அறிவித்த உடன் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு முன்பே, தனது பரப்புரையைத் தொடங்கத் திட்டமிட்டார் ஸ்டாலின். மதுரையில் இருந்து பரப்புரையைத் தொடங்க வேண்டும் என்று விரும்பிய ஸ்டாலின், தன் மனைவி சகிதமாக கடந்த 14-ம் தேதி இரவு மதுரைக்கு வந்தார். சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்த ஸ்டாலினை தென் மாவட்ட தி.மு.க வேட்பாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். 15-ம் தேதி மாலை 3.30 மணி அளவில், மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடையில் பிரசாரம் செய்தார்.

அங்கு பேசிய ஸ்டாலின், ‘‘அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே... கண்ணகி நீதி கேட்ட ஊரில் நான் உங்களைத் தேடி, நாடி, நம்பி வந்துள்ளேன். வெறும் தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல... தமிழ்நாட்டைக் காப்பாற்ற, உங்களைக் காப்பாற்ற இங்கு வந்துள்ளேன். சினிமாவில் ஒரு வில்லனிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவது போல, இங்கு ஒரு வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன். மே 16-ல் ஒரு போர்க்களத்தைச் சந்திக்க உள்ளோம். அந்தப் போர்க்களத்துக்கு இன்று பூமிபூஜை போட வந்திருக்கிறேன்.

2006-ல் தலைவர் கலைஞர் வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான் ஹீரோவாக பார்க்கப்பட்டது. அதுபோல, இப்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, சூப்பர் ஹீரோவாக பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிக்கை என்பது, வெறும் வாய்ச்சொல் அறிக்கை இல்லை. இந்த அறிக்கையில் உள்ளதை கலைஞர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதா? (‘நிறைவேற்றுவார்’... என்று கட்சியினர் கோஷமிடுகிறார்கள்). இது மிகப் பெரிய பொக்கிஷம். 501 உறுதிமொழிகளுடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. எல்லாவற்றையும் என்னால் இப்போது சொல்ல முடியாது. அதனால், சில முக்கிய வாக்குறுதிகளை மட்டும் சொல்கிறேன்.

ஒரு வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன்!

தாய்மார்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மதுவிலக்கு. மதுவிலக்கை நாங்கள் அமல்படுத்துவோம். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு கரும்பு விலையில் மேலும் 650 ரூபாய் அதிகப்படுத்திக் கொடுக்கப்படும். மின் கட்டணம் குறைக்கப்படும். மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்துவது போல் திட்டம் மாற்றி அமைக்கப்படும். அதனால், ஆண்டுக்கு 2,000 ரூபாய் அனைவருக்கும் சேமிப்பாகும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எனது தலைமையில் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்த இருந்தோம். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தருகிறோம் என்று மத்திய அரசு உறுதியளித்து, போராட்டம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. அதை நம்பி போராட்டத்தை விலக்கிக்கொண்டோம். ஆனால், மத்திய அரசு தி.மு.க-வுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாது என்று அப்படி செய்துவிட்டது. இருந்தபோதிலும், ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் தி.மு.க எடுக்கும். வேலைக்காகப் பதிவுசெய்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 94 லட்சம். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். கிரானைட் குவாரி, மணல் மற்றும் கனிமவளம் போன்றவை அரசுடைமை ஆக்கப்பட்டு முறையாக நடத்தப்படும். அதன்மூலம், வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

ஜெயலலிதா ஆட்சி, ஊழல் மிகுந்த ஆட்சி. முட்டையில்கூட ஊழல் செய்தவர்கள், கோட்டைக்குக்கூட வருவதில்லை. வந்தாலும் முறையாக வேலை செய்யாமல் ‘ஓபி’ அடிக்கிறார்கள். மக்களின் வரிப்பணம் சூறையாடப்படுகிறது. பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டணம் உயர்வு எனப் பல இன்னல்களைத் தமிழகம் சந்தித்தது. ஆனால் ஜெயலலிதாவோ, கொடநாடு சென்று ஓய்வெடுப்பதையே வேலையாகக் கொண்டு உள்ளார்’’ என்றார்.

மேலூர் பகுதியில் வேட்பாளர் ரகுபதிக்கு வாக்குச் சேகரித்தார் ஸ்டாலின். அப்போது, “சூரியன் கிழக்கில் உதிக்கும். அதனால்தான் கிழக்குத் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கி மேலூரை மேம்படுத்த வந்திருக்கிறேன். சசிபெருமாள் ஒரு காந்தியவாதி. மதுக்கடைகளுக்கு எதிராக அவர் போராட்டம் நடத்தினார். அவருடைய மரணம் மறக்க முடியாதது. அரசு நினைத்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு இருந்ததால்தான் அவரின் உயிர் பிரிந்தது’’ என்றார்.

மதுரை தெற்குத் தொகுதி வேட்பாளர் பாலசந்திரனை ஆதரித்து முனிச்சாலையில் பேசியபோது, சௌராஷ்ட்ரா மக்கள் அதிகம் என்பதால், அவர்கள் மொழியில் வணக்கம் சொன்னார். கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர். அங்கு நெசவாளர்களின் பிரச்னைகள் பற்றிப் பேசினார். அங்கேயே காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட மதுரை வடக்குத் தொகுதிக்கும் சேர்த்து வாக்குக் கேட்டார்.

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் பி.டி.ஆர்.பி.தியாகராஜனை ஆதரித்து ஆரப்பாளையத்திலும், அதைத்தொடர்ந்து மேற்குத் தொகுதி வேட்பாளர் கோ.தளபதிக்கு பழங்காநத்தத்திலும், திருப்பரங்குன்றம் வேட்பாளர் மணிமாறனுக்கு திருப்பரங்குன்றத்திலும், சோழவந்தான் வேட்பாளருக்கு சோழவந்தானிலும், திருமங்கலம் காங்கிரஸ் வேட்பாளருக்கு செக்கானூரணியிலும் வாக்குச் சேகரித்துப் பேசினார். கடைசியாக, உசிலம்பட்டியில் தி.மு.க வேட்பாளர் இளமகிழனுக்கு வாக்குக் கேட்டுப் பேசிவிட்டு, அப்படியே தேனியை நோக்கிச் சென்றார்.

தேனி பங்களா மேட்டில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளின் தி.மு.க வேட்பாளர்களை அறிமுகம் செய்துவிட்டுப் பேச ஆரம்பித்த ஸ்டாலின், ‘தென்மண்டல தி.மு.க காவலரே....’ என்று
ஐ.பெரியசாமியின் பெயரைச் சொல்லி அழகிரியைக் காலி செய்தார். “நான் தேர்தல் நேரத்தில் மட்டும் வரவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். முதல்வராக இருக்கும் ஜெயலலிதா அம்மையார் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை வந்து பார்ப்பார். அவர், கோட்டைக்கே ஒழுங்காக வருவதில்லை. பிறகு எப்படி இங்கு வருவார்? தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அம்மையார் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்ததாகப் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில், கடன் சுமையால் 2,300 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகப்  புள்ளி விவரங்கள் சொல்கின்றன. கருணாநிதியின் மகன் பொய் சொல்லமாட்டேன். வாய்க்கு வந்தபடி பேச மாட்டேன். விவசாயிகளின் டிராக்டர்களைப் பறிமுதல் செய்யும் ஆட்சி, இந்த ஆட்சி. விவசாயிகளைக் கொடுமைப்படுத்தும் ஆட்சி, இந்த ஆட்சி.

இந்த ஆட்சியில், ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக இருப்பவர் நிதி அமைச்சர் ‘ஓ.பி’ எனும் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பி என்றால் மருத்துவமனையில் ‘அவுட் பேஷன்ட்’. உள்ளே வரமுடியாது. அதுபோல, ஓ.பி-யின் நிலைமை மாறியிருக்கிறது. நான் அவரின் தரத்தைக் குறித்துப் பேசவில்லை. அவர் நல்லவர், நாணயமானவர். அவரை நான் எங்கு பார்த்தாலும் வணக்கம்வைப்பேன். ஆனால், அதை அவர் கண்டுகொள்ளாமல் போய்விடுவார். உள்ளுக்குள் அவருக்கும் ஆசை இருக்கும். ஆனால், பயம் இருப்பதால் அமைதியாகப் போய்விடுவார். சில வாரங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ்-தான் தலைப்புச் செய்தி. திடீரென்று அவர் காணாமல் போய்விட்டார். அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவருக்கும், அவரது கட்சித் தலைமைக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஓ.பி-க்கும், அ.தி.மு.க-வுக்கும் இடையே என்ன பிரச்னை என்பதை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

‘கலர் கலர் சட்டை போடுகிறார்... ஷூட்டிங் போகிறார்’  என்று என்னைப் பற்றி விமர்சனம் செய்கிறார்கள். ‘63 வயதில் கலர் சட்டை போடுகிறேன்’ என்றால், அது எனக்கு வசதியாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் இளமையாகவும் இருக்கிறேன். எனக்கே ஒரு நப்பாசை எண்ணம் இருப்பதால், நான் கலர் கலர் சட்டைகளைப் போடுகிறேன். மேலும், நிற்கவும் நடக்கவும் சைக்கிள் ஓட்டவும் என எல்லாத்துக்கும் வசதியாக இது இருக்கிறது” என்றார்.

முக்கியமான விஷயங்களையும், அந்தந்தப் பகுதி பிரச்னைகளையும் சுருக்கமாகப் பேசி, வேட்பாளரை அறிமுகம் செய்துவிட்டு அடுத்த பாய்ன்ட்டுக்கு குறிப்பிட்ட நேரத்தில் போய்ச்சேரும் வகையில், பக்காவாக ப்ளான் பண்ணி பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின்.

- சண்.சரவணக்குமார், செ.சல்மான், சே.சின்னதுரை

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, வீ.சதீஷ்குமார்

அடுத்த கட்டுரைக்கு