ஸ்பெஷல் 1
Published:Updated:

'இந்திய முதல்வர்' திவ்யதர்ஷினி !

'இந்திய முதல்வர்' திவ்யதர்ஷினி !

நிக்கேத்தனா,
வே.கிருஷ்ணவேணி

 ஜெயலலிதா, மம்தா பானர்ஜி பெற்ற மாபெரும் வெற்றிகளின் நடுவே, சென்னைப் பெண் திவ்யதர்ஷினியின் சாதனை, சிலருக்கு முழுமையாகத் தெரியாமல் போய்விட்டது. சுமார் இரண்டரை லட்சம் பேர் எழுதிய ஐ.ஏ.எஸ். தேர்வில், 'அகில இந்திய அளவில் முதல்வர்' என வெற்றிபெற்று, தமிழகத்துக்கும் பெருமைத் தேடித்தந்துள்ளார் திவ்யதர்ஷினி!

'இந்திய முதல்வர்' திவ்யதர்ஷினி !

அத்தனை சேனல்களும் திவ்ய தர்ஷினியின் வெற்றிச் செய்தியை ஒளி பரப்ப, நாட்டின் அனைத்து மொழிப் பத்திரிகைகளிலும் திவ்யதர்ஷினி தலைப்பு செய்தியானதில் பூரிப்பு அடைந்த நாம், 'ஐ.ஏ.எஸ் கனவோடு இருக்கும் இளம் வாசகிகளுடன் ஒரு சந்திப்பு ப்ளீஸ்!’ என்று போனில் டேட் ஃபிக்ஸ் செய்தோம்.

##~##

அவர் கொடுத்த நன்னாளில்... சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் இருக்கும் அவருடைய அபார்ட்மென்ட் வீட்டின் கதவை... ஜனனி, ஜானகி, ரிமோனா, ஸ்ருதி, சாதனா ஆகிய அந்த ஐந்து யூத் எனர்ஜிகளும் தட்டினர். மெள்ளத் திறந்து எட்டிப் பார்த்த திவ்யாவை... 'யூ ஆர் அண்டர் அரெஸ்ட்!’ என்று உரிமையுடன் பக்கத்திலிருந்த ஹோட்டல் பிலிட்ஸுக்கு அழைத்து வந்தனர். பேப்பர், மீடியாக்கள் மூலமாக திவ்யதர்ஷினியை தெரிந்திருந்த ஹோட்டல் ஊழியர்கள், ராஜமரியாதையோடு வரவேற்றனர்!

டேபிளில் வரிசையாக புதுப்புது அயிட்டங்கள் வந்து நிறைந்து கொண்டே இருக்க, அந்த விசேஷ விருந்தினூடே... ''சரி, இப்பச் சொல்லுங்க திவ்யா... எப்படி படிச்சீங்க? உங்கள ஃபாலோ பண்ணி நாங்களும் வருவோம்ல..?!'' என்று அண்ணா பல்கலைக்கழக மாணவி சாதனா, நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார்.

''எனக்கு யாராச்சும் அட்வைஸ் பண்ணினா பிடிக்காது. இப்ப என்னையே அட்வைஸ் பண்ணச் சொல்றீங்களே'' என்று சின்னச் சிரிப்புடன் ஆரம்பித்த திவ்யா, ''விழுந்து விழுந்து படிக்கற பழக்கமெல்லாம் கிடையாது. எக்ஸாம் சமயத்துல மட்டும் தீவிரமா படிப்பேன். எழுபது, எழுபத்தி அஞ்சு சதவிகிதம்தான் மார்க்ஸ். பி.எல். பைனல் இயர் படிச்சுட்டிருந்தப்ப... ஐ.ஏ.எஸ் ப்ரிலிம்ஸ் எக்ஸாமும் வந்துது. முழுக்கவனம் செலுத்த முடியாததால, ஐ.ஏ.எஸ்-ஸுக்கான முதல் முயற்சியில தோல்வி. அதைப் பத்தி கவலைப்படாம, அடுத்த அட்டெம்ப்ட்ல...'' என்று திவ்யா சொல்வதற்குள்,

'இந்திய முதல்வர்' திவ்யதர்ஷினி !

''சொல்லி வெச்சி, கில்லி மாதிரி நீங்க ஜெயிச்சதுதான் நாட்டுக்கே தெரியுமே...'' என்று கோரஸ் பாடினர் மாணவிகள்.

தொடர்ந்த திவ்யா, ''முழுக்க முழுக்க ஒரு வருஷத்தை ஒதுக்கி, யு.பி.எஸ்.சி எக்ஸாமுக்குப் படிச்சேன். ஆனா, என் நேரம்... பிரிலிம்ஸ் (முதல்நிலை) தேர்வு நடத்தப்போ ஐ.பி.எல் மேட்ச் வந்துடுச்சு. நேர்முக தேர்வு நடந்தப்போ, வேர்ல்ட் கப் மேட்ச் வந்துடுச்சு. மேட்சை என்னால் விட முடியல! அதனால, ரெண்டு மணிநேரம் டி.வி. பார்த்தா... அதை ஈடுகட்ட கூடுதலா நாலு மணிநேரம் படிக்கணும்னு தீர்மானம் போட்டுக்கிட்டேன். விடிகாலை ரெண்டு மணி, மூணு மணிக்கெல்லாம்கூட எழுந்து படிப்பேன்'' என்றவரை,

''பேய், பிசாசெல்லாம் வாக்கிங் போற நேரத்துல படிப்பீங்களா?!'' என்று ஆச்சர்யமாகப் பார்த்த ஜனனி, ''ஐ.ஏ.எஸ் எக்ஸாம்னா... ஒரு வேள்வி, யாகம், தவம்னு பயமுறுத்தறாங்க. நீங்களோ விளையாட்டு மாதிரி டீல் பண்ணியிருக்கீங்களே?'' என்று இன்னும் ஆச்சர்யம் காட்ட,

''விரும்பிச் செய்யறதுதானே விளையாட்டு? படிப்பையும் விரும்பிப் படிச்சுப் பாருங்க. விளையாட்டு மாதிரி இன்ட்ரஸ்டிங்கா ஆயிடும்!''

- சாக்ரடீஸ் ரேஞ்சுக்கு திவ்யா பேசுவதைக் கேட்ட கேர்ள்ஸ் உற்சாக 'ஓ!’ போட்டார்கள் சந்தோஷத்துடன்.

அதைத் தொடர்ந்து... ஐ.ஏ.எஸ். பிரிபரேஷன், கோச்சிங், எக்ஸாம், பர்சனாலிட்டி டெஸ்ட் என்று அத்தனை படிகளையும் கடந்தது பற்றி கேர்ள்ஸ் கேள்விகளாக அடுக்க, கிட்டத்தட்ட கோச்சிங் போல பதில்களை அடுக்கினார் திவ்யதர்ஷனி!

பிறகு, ''ஓகே... இப்போதைக்கு இதுபோதும்'' என்று திவ்யா கிளம்பத் தயாராக... ''இந்தியாவுலயே முதல்வரா வந்து, நாட்டையே திரும்பிப் பார்க்க வெச்சுருக்கீங்க. ஜஸ்ட் ஒரு பார்ட்டியோட விட்டுடுவோமா?! கிளம்புங்க'' என்று திவ்யாவை அத்தனை கேர்ள்ஸும் 'ஹைஜாக்’க...

''ஒரு அரசாங்க அதிகாரியை எங்கப்பா கடத்துறீங்க?!'' என்று ஜெர்க்கானார் திவ்யா. ஐந்தாவது நிமிடம்... தி.நகர் 'குளோபஸ்’ஸில் ஆஜரானோம். அங்கேயும் அவரை ஊழியர்கள் அடையாளம் கண்டு வாழ்த்துச் சொல்ல, இன்ஸ்டன்ட் டிசைனராக மாறிய ரிமோனா, திவ்யாவின் உயரத்துக்கும் உடல் அமைப்புக்கும் ஏற்ற உடைகளைத் தேர்ந்தெடுத்தார்.

பச்சை இந்தியச்சியான திவ்யா, ''வெஸ்டர்ன் டிரெஸ் வேண்டவே வேண்டாம்'' என்று மறுத்து, மயில் கழுத்து கலரில் இருந்த சுடிதாரை டிரை செய்தார். அவருடைய தோழிகளாகிப் போன மாணவிகள், ''சூப்பர்!'' என்று சர்டிஃபிகேட் கொடுக்க... ''நான் செலக்ட் பண்ணியிருக்கும் சிவப்பு நிற காட்டன் சுரிதார்தான் உங்களுக்கு இதைவிட நல்லா இருக்கும்'' என்று ரிமோனா அடம்பிடித்தார்.

இறுதியாக, சிவப்பு நிற சுடிதாரோடு டிரயல் ரூமிலிருந்து வெளியே வந்த திவ்யாவைப் பார்த்து, ''வாவ்... சூப்பர்!'' என்று குஷியான ரிமோனா, ''இந்த டிரெஸ்ஸுக்கு முடியை இப்படி இறுக்கி பின்னக்கூடாது. லூஸா விட்டா இன்னும் அழகா இருக்கும்!'' என்று பியூட்டி டிப்ஸ் கொடுக்க, திவ்யாவை... எதிரிலிருந்த 'அனுஷ்கா’ பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றோம்.

''லேசா ஃபவுண்டேஷன் போட்டா இந்த ஹேர் ஸ்டைலுக்கு உங்க முகம் மேட்சாகிடும்!'' என்று பியூட்டிஷியன் ஷிபானி தன் கைவரிசையை காட்ட... அவருடன் சேர்ந்து ஆறு மாணவிகளும் தங்களின் ஆசை தீர திவ்யாவுக்கு அலங்காரம் செய்து பார்த்தார்கள்!

திடீரென வாட்சைப் பார்த்த திவ்யா, ''பெங்களூர்ல வேலை செய்யற அக்கா பிரியதர்ஷினிக்கு ஒன்பது மணிக்கு டிரெயின்'' என்று சொல்ல...

அடுத்த பத்தாவது நிமிடம் திவ்யா, அவரது வீட்டு காலிங் பெல்லை அடித்தார். கதவைத் திறந்த அம்மா பத்மாவதி, ''ஏய்... ஆளே மாறிட்டே!'' என்று சந்தோஷ சர்ப்ரைஸாக, அப்பா சண்முகம், தம்பி கோபால்நாத், அக்கா பிரியதர்ஷினி ஆகியோரும் ஆச்சர்யத்துடன் ஆமோதித்தனர்!

ஐ.ஏ.எஸ். பாஸ் செய்ய தேவைப்படும் பல தகுதிகள், வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ நினைக்கும் அத்தனை பேருக்குமே தேவைப்படும் தகுதிகள்தான். அதைப் பற்றியெல்லாம் அந்த மாணவிகளுக்கு திவ்யா எடுத்த கோச்சிங் கிளாஸ்... அடுத்த இதழில்...

படங்கள்: பொன்.காசிராஜன்