Published:Updated:

விடிய விடிய தூங்காமல் தவித்த வைகோ...! -கடைசி நிமிட சமாதானக் காட்சிகள்

விடிய விடிய தூங்காமல் தவித்த வைகோ...! -கடைசி நிமிட சமாதானக் காட்சிகள்
விடிய விடிய தூங்காமல் தவித்த வைகோ...! -கடைசி நிமிட சமாதானக் காட்சிகள்

விடிய விடிய தூங்காமல் தவித்த வைகோ...! -கடைசி நிமிட சமாதானக் காட்சிகள்

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடாமல் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ விலகியதால், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவர்கள், விடிய விடிய வைகோவை சமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கினர்.

கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட வடக்கு திட்டங்குளத்தில் உள்ள தேவர் சிலைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கச் சென்றார் வைகோ. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் தி.மு.கவினர் சிலர் கலவரத்தில் ஈடுபட, கொதித்துப் போனார் வைகோ.

"எனக்கு எதிராக மிகப் பெரிய கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட தி.மு.க திட்டமிட்டிருக்கிறது. தி.மு.க வேட்பாளர் சுப்ரமணியம் குறிப்பிட்ட சமூகத்து மக்களைத் தூண்டிவிடுகிறார். தேர்தல் நடப்பதற்குள் சாதி கலவரத்தை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்" எனக் கொந்தளித்தார். இதன்பின்னர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போயிருக்கிறார். அன்று இரவு ஊரில் உள்ள சமூகத்து தலைவர்கள் வைகோவை சந்தித்துள்ளனர். இரு பிரிவு மக்களுக்குள் கலகம் ஏற்படுத்தும் வேலைகள் நடப்பதாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட வைகோ, "சொந்தத் தொகுதி மக்களிடையே கலவரம் ஏற்படுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அப்படி நான் வெற்றி பெற்று என்ன சாதித்துவிடப் போகிறேன்?"  என்றவாறு தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

அன்று இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்தவர், அதிகாலையில் தனது உறவினர்களிடம், "இரவு முழுவதும் யோசித்து உறுதியாக முடிவெடுத்துவிட்டேன். நான் போட்டியிடப் போவதில்லை"  எனச் சொல்ல, அவரை சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. மறுநாள் தனக்கு மாற்று வேட்பாளராக நியமிக்கப்பட்ட விநாயகா ரமேஷ் என்பவரை வேட்பு மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார் வைகோ. வைகோவின் இந்த முடிவு பற்றி மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுக்குச் சொல்லப்படவில்லை. அவர்கள் உடனே, வைகோவை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்களிடம் தன்னுடைய முடிவைப் பற்றி விளக்கியிருக்கிறார். ராஜபாளையத்தில் இருந்த சி.பி.ஐ கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவும் வைகோவை சமாதானப்படுத்த விரைந்திருக்கிறார்.

அவரிடம் வைகோ, " இத்தனை ஆண்டுகாலம் எனக்கு வாழ்வளித்த மக்களிடையே கலவரம் ஏற்படுவதைக் கண்கொண்டு பார்க்க முடியாது. எத்தனையோ தேர்தல்களைப் பார்த்துவிட்டேன். கலவரத்தின் மூலம் வெற்றி பெற்று ஒன்றும் ஆகப்போவதில்லை. மக்கள்தான் முக்கியம்" என மீண்டும் காரணத்தை விளக்கியிருக்கிறார். நேற்று இரவு முழுவதும் வைகோவை சமரசப்படுத்தும் வேலைகள் நடந்தன. ஆனால் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்துவிட்டார் வைகோ.

இதுபற்றி சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். " நேற்று இரவுதான் வைகோவைத் தொடர்பு கொள்ள முடிந்தது. கோவில்பட்டியில் தேவர் சிலைக்கு மாலைப் போடப் போகும்போது நடந்த சண்டைகள், தி.மு.கவின் தூண்டுதலால்தான் நடந்திருக்கிறது. நம்மை வைத்தே சாதி மோதலை நடத்தப்பட வேண்டுமா? என்ற நல்லெண்ணம்தான் அவரது விலகலுக்குக் காரணம். இரவு முழுக்க அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்திருக்கிறார். தேர்தல் நாள் வரையில் மிகப் பெரிய கலவரத்தை நடத்தவும் தி.மு.க திட்டமிட்டிருக்கிறது என்ற உறுதியான தகவலும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதனால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவரிடம், 'மக்கள் நலக் கூட்டணி கடந்த வருடம் ஜூலை மாதம் உருவாக்கினோம். தே.மு.தி.க, த.மா.காவைக் கொண்டு வந்ததில் உங்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அதனால் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' எனக் கூறியிருக்கிறோம். இன்றைக்கு கோவையில் உள்ள நிர்வாகிகளைச் சந்திக்கப் போகிறார். விரைவில் மறுபரிசீலனை செய்வார் என நம்புகிறோம்" என்றார் நம்பிக்கையோடு.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனிடம் பேசினோம். " தேவர் சிலைக்கு மாலை போடப் போகும்போது எதிர்ப்பு கிளம்பியதைக்கூட பெரிதாக அவர் எடுத்துக் கொள்ளவில்லை. மறுநாள் காலையிலும் கறுப்புக் கொடி காட்டி பிரசாரம் செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, தி.மு.கவின் சதிவேலைகள்தான் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. ' நான் எல்லா சமூகத்தையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன்' என வேதனைப்பட்டார் வைகோ. அவர் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கும் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. அவருடைய முடிவு வரவேற்கத்தகுந்த ஒன்றாகத்தான் கருதுகிறேன்" என்றார்.

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களின் சமாதானத்தை வைகோ ஏற்பாரா? என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

-ஆ.விஜயானந்த்
 

அடுத்த கட்டுரைக்கு