Published:Updated:

மதுக்கடைக்குச் செல்கின்றவர்கள் தீண்டத்தகாதவர்கள்! -நம்புங்கள்... சொல்வது கருணாநிதிதான்

Vikatan Correspondent
மதுக்கடைக்குச் செல்கின்றவர்கள் தீண்டத்தகாதவர்கள்! -நம்புங்கள்... சொல்வது கருணாநிதிதான்
மதுக்கடைக்குச் செல்கின்றவர்கள் தீண்டத்தகாதவர்கள்! -நம்புங்கள்... சொல்வது கருணாநிதிதான்

தஞ்சாவூர்: மதுக்கடைக்கு செல்கின்றவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்க வேண்டும் என்று தஞ்சையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தஞ்சையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ''உங்களை எல்லாம் மகிழ்ச்சியோடு நினைவு கூரும் வகையில் இன்னொரு கூட்டத்தில் பேச வேண்டுமா, என்ற கேள்வி தான் என்னை துளைத்தெடுக்கிறது. தஞ்சையில் தான் பல நேரங்களில் உங்களையெல்லாம் காணுகிற வாய்ப்பை பெற்று இருக்கிறேன்.

தஞ்சை தரணியில் தி.மு.க.வின் எழுச்சியை ஒன்றல்ல, இரண்டல்ல, நூறு தடவைக்கு மேல் கண்டு உள்ளேன். ஆனால் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற எழுச்சியை இதுவரை நான் கண்டதில்லை. இதுவரையில் தஞ்சை மாநகரில் கூடாத கூட்டம், இன்றைக்கு கூடி இருக்கிறது என்றால் எப்போதும் ஒரு புதுமையை, ஒரு புதிய எழுச்சியை காணுகிற வகையில் இங்கே நீங்கள் உங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறீர்கள்.

இன்று வளர்ந்து இருக்கிற கழகத்தை பேரறிஞர் அண்ணா 1949-ம் ஆண்டு உருவாக்கினார். தி.மு.க. அரசியல் இயக்கம் அல்ல. சமுதாய இயக்கம். திராவிட சமுதாயத்தை காப்பாற்ற ராஜராஜசோழன், செங்குட்டுவன் போன்றவர்கள் மீண்டும் உருவாக வேண்டும். அதுவரை தமிழகத்திற்கு எழுச்சி இல்லை. தமிழனுக்கு மதிப்பு இல்லை. மரியாதை இல்லை. அதை உணர்ந்துள்ள கட்சி தி.மு.க.

தமிழ்நாடு இந்த 5 ஆண்டுகாலத்தில் எந்த அளவுக்கு சீரழிந்து போய் இருக்கிறது. தமிழகத்தை இன்று ஆள்கிறவர்கள் எந்த அளவுக்கு சீரழித்து இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டும். கழக ஆட்சியில் விலைவாசி என்ன? இந்த ஆட்சியில் விலைவாசி எப்படி உள்ளது என்பதை தாய்மார்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஏதோ, இந்த தேர்தலில் வெற்றி அடைந்தால் உயர்ந்த இடத்துக்கு போய் விடுவோம், உங்களை எல்லாம் மதிக்க மாட்டோம் என்று எண்ணுகிறவர்கள் அல்ல நாங்கள். இந்த கூட்டத்தில் நாம் எடுத்துவைக்கிற எந்த கருத்துகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதைப்போல ஒரு அறிக்கையை இனி யாரும் வெளியிடப்போவது இல்லை.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடாமல் மக்களை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு அறிக்கை தேவையில்லை. தி.மு.க. ஒவ்வொரு தேர்தலிலும் அறிக்கை வெளியிட்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் என்று கூறி அதை நிறைவேற்றி வருகிறோம். தி.மு.க. தமிழ்நாட்டில் ஆற்றி இருக்கிற பணி சிறந்த பணி. பொதுவுடமைக்காரர்கள், கம்யூனிஸ்டுகள் எந்த தத்துவத்தை சொல்கிறார்களோ, அந்த தத்துவத்தை செயல்படுத்தி காட்டுகிற இயக்கம் தி.மு.க., அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் எல்லாம் நாளைக்கு ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால், அந்த ஆட்சிப்பொறுப்பை பயன்படுத்தி ஏழை, எளிய மக்களுக்கு நிறைய வசதிகள், என்னென்ன செய்யலாம், என்னென்ன உதவிகளை செய்யலாம் என்று அந்த அளவில் தான் கழகம் பணியாற்றும்.

ஆனால் இன்றைக்கு நாட்டில் பணம் தண்ணீரைப்போல இறைக்கப்படுகிறது. தண்ணீரைப்போல என்றால், தண்ணீர் கூட இன்று கிடைப்பது இல்லை. அதற்கு மேலாக வாரி இறைத்து இந்த தேர்தலை நடத்த அ.தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகிறார்கள். பணத்தை தண்ணீர் போல செலவழித்து இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற வேண்டும். மீண்டும் முதலமைச்சராக இருக்க வேண்டும். தாங்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாட்டில் ஒரு கூட்டம் நடமாடுகிறது. இந்த நாட்டை அண்ணா ஆண்டார். பெருந்தலைவர் காமராஜர் ஆண்டார்.

இன்னும் பல பேர் ஆண்டார்கள். நான் கூட குறிப்பிட்ட காலத்திற்கு முதலமைச்சராக இருந்து இருக்கிறேன். இன்றைக்கும் வாக்குகேட்டு வந்து இருக்கிறேன். ஆனால் இன்று நாடு அழிந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டைப்பற்றி கவலைப்படாதவர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது. சிக்கிய ஆட்சியை மீட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். என்னுடைய மக்களை காப்பாற்ற வேண்டும். திராவிட இயக்கத்தின் குறிக்கோளையே, திராவிட இயக்கம் ஏன் தோன்றியது என்ற நோக்கத்தை குழி தோண்டி புதைத்தவர்கள் இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்பிக்க இது தான் சரியான தருணம்.

தி.மு.க.வை நடத்தி செல்கின்ற பெரும் பொறுப்பு வாய்ந்த பேரியக்கமாக நான் கருதுகிறேன். அதற்கு யாராவது ஊறு விளைவித்தால் அவர்களை நான் சும்மா விடமாட்டேன். அவர்களின் கருத்துகளை எதிர்த்து, எழுத்துக்கு, எழுத்து, பேச்சுக்கு பேச்சு என்று அந்த நாள் முதல் இந்த நாள் வரை போராடுகிறேன். அண்ணாவின் தம்பிகளான எங்களை யாரும் வீழ்த்த முடியாது. கடைசி மூச்சு இருக்கும்வரை இயக்கத்திற்காக பாடுபடுவேன். இங்கு இளைஞர்கள் கூட்டத்தை பார்க்கிறேன். இளைஞர்கள் தான் இந்த சமுதாயத்தின் ஆணி வேர்கள். அவர்களால் தான் இந்த உலகத்தில் பல புரட்சிகள் நடைபெற்றன. இளைஞர்கள் தான் நாட்டை ஆள கூடியவர்கள். என்னால் நடக்க கூட முடியவில்லை. அப்படி இருந்தாலும் கூட நீங்கள் காட்டுகிற உணர்வு, என் உள்ளத்தில் உள்ள அன்பு, ஆர்வம் இவைகளுக்கு ஈடு இணை கிடையாது. இவைகளையெல்லாம் பொக்கிஷமாக கருதுகிறேன்.

இந்த தேர்தலில் எதிரிகள் வெற்றி பெற்று விட்டால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்சமுதாயத்துக்கு விடுதலை, சுதந்திரம் கிடையாது. எனவே தேர்தலில் நாம் சீரோடும், சிறப்போடும் நடப்போம். உங்கள் அன்பால், உதவியால் தான் நான் கடைசி மூச்சை கூட விட்டு கொண்டு இருக்கிறேன். என்னை நீங்கள் ஆதரிப்பது என்பது தனிப்பட்ட கருணாநிதியை அல்ல. கருணாநிதி கொண்டிருக்கிற கொள்கை, அந்த உணர்ச்சியை, அந்த வேகத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடக்குமுறை ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். கடமை, கண்ணியம் கட்டுப்பாடு போதித்த அண்ணா, பெரியார், காந்தியடிகள் வழியில் நடந்தவர்கள் இதையெல்லாம் நாம் மறக்கக்கூடாது.

தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிற ஒரு சட்டமாக மதுவிலக்கு சட்டத்தை தி.மு.க. அரசு தோன்றியதும் மறுநாளே சட்டமாக ஆக்குவோம். ஜெயலலிதா கூட படிப்படியாக நாங்கள் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார். படிப்படி என்றால் எனக்கு புரியவில்லை. படிப்படியாக என்றால் தஞ்சையில் இருப்பவர்களுக்கு தெரியும். படிப்படியாக இருந்தாலும், மரக்கா, மரக்காவாக கொண்டு வந்தாலும் அதை ஏற்க தயாராக இல்லை. மதுவிலக்கு என்றால் யாரும் மதுவை தொடக்கூடாது. அந்த மதுக்கடைக்கு யாரும் செல்லக்கூடாது. மதுக்கடைக்கு செல்கின்றவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்க வேண்டும். மது நம்மை கெடுக்கிறது. நாட்டை குலைப்பது அது. அதை மறந்து விடாமல் மதுவிலக்கு திட்டத்தை வெற்றிகரமாக நடத்த எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

நாம் சொல்கிற கருத்துக்கு தலையசைத்து விட்டு, மதுவிலக்கை பற்றி கவலைப்படாமல் இந்த நாட்டில் வேண்டும் என்றே தி.மு.க.வை பழி சொல்கின்றவர்கள் சில பேர் உள்ளனர். மதுவிலக்கு என்றால் அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட தியாக உள்ளத்தோடு, உறுதியான உள்ளத்தோடு, மதுவிலக்கை சட்டமாக ஆக்கினால் தான் அது நிலைக்கும். இல்லையெனில் நேற்று என்று, இன்றைக்கு என்று என வர்ணித்துக்கொண்டே போனால் அந்த திட்டத்தை வெற்றிகரமாக யாரும் நிறைவேற்ற முடியாது. எனவே அந்த திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. உறுதியோடு சபதம் எடுத்துக்கொண்டு, சத்தியம் செய்கிறேன். உறுதி அளிக்கின்றேன். மதுவிலக்கு மதுவிலக்கு தான். கடையை மூடினால் யாரும் மது அருந்த முடியாத அளவுக்கு என்னென்ன சட்டத்தை விதிக்க வேண்டுமோ? அதை எல்லாம் செய்து மதுவை ஒழித்தே தீருவோம்" என்றார்.