Published:Updated:

புகார் கொடுக்க தி.மு.கவுக்கு தகுதி இருக்கிறதா? -கொந்தளிக்கும் கோபாலசுவாமி

Vikatan Correspondent
புகார் கொடுக்க தி.மு.கவுக்கு தகுதி இருக்கிறதா? -கொந்தளிக்கும் கோபாலசுவாமி
புகார் கொடுக்க தி.மு.கவுக்கு தகுதி இருக்கிறதா? -கொந்தளிக்கும் கோபாலசுவாமி

தமிழக சட்டமன்ற  தேர்தலுக்கு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கரூர் மற்றும் எழும்பூரில் பிடிபட்ட பணம் எண்ணற்ற கேள்விகளை மக்கள்முன் எழுப்பியிருக்கிறது. 'இதன்பேரில் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்' என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை நேற்று சந்தித்த தி.மு.கவின் டி.ஆர்.பாலுவும் காங்கிரஸின் குலாம்நபி ஆசாத்தும், அ.தி.மு.கவின் பண விநியோகம் குறித்து விசாரணை நடத்துமாறு புகார் மனுவைக் கொடுத்தனர்.

அதிலும், 'தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும்' குற்றம் சாட்டினர். ' வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகித்து ஜனநாயகத்தை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபட்டுள்ளது' என கூட்டங்களில் தொடர்ந்து பேசி வருகிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

" தி.மு.கவின் புகார் மீது ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?" என்ற கேள்வியை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமியிடம் கேட்டோம்.

" (பலமாக சிரித்தவர்) தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுக்கப் போனவர்களிடம் கேளுங்கள். 'நீங்கள் எவ்வளவு பணம் கொடுக்க இருக்கிறீர்கள்' என்று? அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருப்பதால் தேர்தல் ஆணையரிடம் அவ்வளவு எளிதில் செல்ல மாட்டார்கள். அதனால் இவர்கள் முன்னாடியே போய் புகார் கொடுக்கிறார்கள். இவர்கள் முன்கூட்டியே புகார் கொடுப்பதால் அதுமட்டும்தான் உண்மை என்றால், இந்த உலகத்தில் நியாயம் என்று எதுவுமே மிஞ்சாது. தி.மு.கவினரின் வெற்று பாவ்லா இது. கரூர் மற்றும் எழும்பூரில் பிடிபட்ட பணத்திற்கும் அ.தி.மு.கவின் நிர்வாகிகள் சிலருக்கும் தொடர்பிருக்கிறது என வெளியில் தெரிகிறது. அதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால், தி.முகவின் திருமங்கலம் பார்முலா உலகுக்கே தெரிந்த ரகசியம். இவர்கள் வாக்காளர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து கொண்டுதான் இருப்பார்கள். என்னுடைய நம்பிக்கை எல்லாம் புதிய வாக்காளர்கள் பக்கம்தான். அவர்கள் இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு ஓட்டுப் போட இருக்கிறார்கள். இந்த தலைமுறை மீது என்னால் நம்பிக்கை வைக்க முடியவில்லை. திருமங்கலம் தேர்தலில் இருந்து இப்போது வரையிலான தேர்தல்களில், 'தமிழ்நாடு என்றாலே கை நீட்டுபவர்கள்' என்ற கெட்ட பெயரை யார் உருவாக்கிக் கொடுத்தார்கள்? வேறெந்த மாநிலத்திலும் இதுபோன்ற அசிங்கங்கள் நடப்பதில்லை. ஆணையரிடம் புகார் மனுவைக் கொடுத்து ஒற்றை விரலைக் காட்டி அ.தி.மு.கவை குற்றம் சாட்டுகிறார்கள். சரி...ஆனால், மீதி மூன்று விரல்களும் தி.மு.கவை நோக்கித்தானே நீள்கிறது. 'எங்கள் ஆட்கள் கொடுத்தாலும் பணம் வாங்காதீர்கள்' என யாராவது அறிக்கைவிட்டார்களா? 'கொடுப்பதை வாங்கிக் கொண்டு எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்' என்றுதான் சொல்கிறார்கள். ' பணத்தை வழங்கும் வேட்பாளரை நீக்குவோம்' என்று இவர்கள் உறுதி கொடுப்பார்களா? அனைத்தும் திசைதிருப்பும் செயல்தான்.

ஒருத்தரும் பணம் கொடுக்கவில்லை, யாரும் வாங்கவில்லை என்ற சூழல் வந்தால்தான், ஆணையத்தின் நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கும். அவர்களை குற்றம் சொல்லி என்ன இருக்கிறது? நாம்தான் தன்மானமிக்க தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிறோமே? அந்தத் தன்மானம் உண்மையில் இருந்தால் பணம் வாங்காமல் இருக்கட்டும். ஐம்பது வேட்பாளருக்கு ஒரு கண்காணிப்பாளரை நியமித்திருக்கிறார்கள். ஐந்து கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. நாங்கள் ஒருபக்கம் பொய்ப் பல்லைக் காட்டுவோம் என்று புகாரைக் கொடுப்பார்கள். அதைக் கடைபிடிக்க இவர்கள் தயாராக இல்லை. 'ஹாத்தி கே தான்' என்று இந்தியில் சொல்வார்கள். யானைக்கு உள்ளுக்குள் ஒரு பல்லும் வெளியில் காட்ட தந்தமும் இருக்கும். சட்டங்களை தேர்தல் ஆணையம் இயற்றவில்லை. 'ஓட்டுக்குப் பணம் கொடுக்கக் கூடாது' என சட்டம் இயற்றியது இந்தப் பிரநிதிகள்தான். 'செலவு இவ்வளவுக்கு மேல் போகக்கூடாது' என பரிந்துரைக்கிறது ஆணையம். நிறைவேற்றுவது மக்களால் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள். தமிழக அரசியலில் இப்போது பொம்மலாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 'நாங்கள் பணம் வாங்க மாட்டோம். குடும்பத்தில் வாங்கவும் விட மாட்டோம்' என புதிய வாக்காளர்கள் முடிவெடுத்தால், மாற்றத்தை நோக்கித் தமிழகம் முன்னேறும்" என்றார் ஆதங்கத்தோடு.

என்ன செய்யப் போகிறார்கள் புதிய வாக்காளர்கள்?

-ஆ.விஜயானந்த்