Published:Updated:

'ரஜினியையே விரட்டுனவங்க நாங்க, ராமதாஸ் எம்மாத்திரம்!’ - ஆனந்தராஜ் அட்ராசிட்டி

Vikatan Correspondent
'ரஜினியையே விரட்டுனவங்க நாங்க, ராமதாஸ் எம்மாத்திரம்!’ -  ஆனந்தராஜ் அட்ராசிட்டி
'ரஜினியையே விரட்டுனவங்க நாங்க, ராமதாஸ் எம்மாத்திரம்!’ - ஆனந்தராஜ் அட்ராசிட்டி

பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தையே கட்டி வச்சு தோல உரிச்சவங்க நாங்க, எங்களுக்கு ராமதாஸ் எல்லாம் சர்வ சாதாரணம் என்று திருவாரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் அதிரடியாக பேசினார்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி எல்லா தொகுதிகளும் பரபரப்பாகி வருகின்றன. இதில் குறிப்பிடத்தகுந்த வி.ஐ.பி தொகுதியாக விளங்குவது முன்னாள் முதல்வர் கருணாநிதி இப்போது போட்டியிடும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி.  திருவாரூரில் கடந்த 25ம் தேதி கருணாநிதி பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அதன் அடுத்த கட்டமாக நேற்று அதிமுக சார்பில் பிரசாரப் பொதுக்கூட்டம் பனகல் சாலையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் தொகுதி அதிமுக சட்டமன்ற வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் பேசுகையில், கருணாநிதி மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மீண்டும் வெற்றி பெறும் ஆசை அவருக்கு இருந்திருந்தால் மக்களே ஒரு வேளை நீங்கள் ஓட்டு போட்டு மே 19ம் தேதி ஓட்டு எண்ணும் போது வெற்றி பெற்று அந்த வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலே இறந்து போய் விட்டால் மீண்டும் இங்கே இடைத்தேர்தல் வந்துவிடும். இதெல்லாம் நடக்காது. இப்படி ஒரு நிலைமை வர வேண்டும் என்பதற்காக வாக்களிக்க வேண்டுமா? உலகத்திலே யாருமே செய்யாத ஒரு சாதனையை கருணாநிதி செய்ய இருக்கிறார். உலகத்திலே 92 வயதிலே உலகிலே யாரும் போட்டி போட்டது கிடையாது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தங்களை வைத்துக் கொண்டு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவதூறாக பேசுகிறார். நீங்கள் கண்டித்திருக்க வேண்டாமா? வயதில் மூத்தவர், முதியவர் ஆயிற்றே நீங்கள்? சொல்லி இருக்க வேண்டாமா? தமிழகத்தின் முதலமைச்சர், மூத்த முதலமைச்சர், ஐந்து முறை அல்ல ஆறாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள முதலமைச்சரை பேசாதே இளங்கோவா என்று சொல்லி இருக்க வேண்டாமா? செய்தி என்னவென்றால்? பேசுவதற்காகவே அவரை வரச் சொல்லி இருக்கிறார்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஞானதேசிகன் இருந்தபோது கருணாநிதி கேட்டிருக்கிறார், தாக்கிப் பேச முடியுமா அம்மாவை என்று? நான் நல்ல குடும்பத்திலே பிறந்தவன் என்னால் பேச முடியாது என்று அவரே தொலைக்காட்சியில் தெரிவித்தார். ஆக, இவர் தேர்வு செய்தவர்தான் இளங்கோவன். தன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை நாய் என்று அழைக்கும் இப்படிப்பட்ட தலைவரை நாம் நாய் என்று சொல்லக் கூடாது, பின், நாய் நம்மை கோபித்துக் கொள்ளும்.

அம்மா தனது காரில் இருந்து தானே இறங்கி, அவரே வேட்புமனு தாக்கல் செய்து, அவரே திரும்ப வந்து, அவரே காரில் திரும்ப சென்றாரே அவரைப் பார்த்து நீங்கள் சென்னை ஆர்.கே.நகர் வெள்ளம் பாதித்த பகுதிகளை இறங்கி பார்வை இடவில்லை என்று எப்படிக் கேட்க முடியும். மாணவன் பாட்டிலுக்கு செம்மொழியில் எப்படி அழைப்பது என கேட்கிற போதெல்லாம் உங்களுக்கு மதுவிலக்கு பற்றி எண்ணம் வரவில்லையா.? அவரது மகன் சொல்கிறான் அரசாங்கமே டாஸ்மாக் நடத்துகிறது என்று.. கஜானாவை காலியாக்கி விட்டு நீங்கள் சென்ற பிறகு, அதிகமாக திமுகவைச் சேர்ந்த தனியாருக்கு பணம் ஏன் சேர்கிறது? அதில் முக்கியமான ஒன்று மணல், இன்னொன்று மது, இரண்டையும் சட்டம் போட்டு அரசு கஜானாவை நிரப்பி அதை மக்களுக்கே மீண்டும் தரும் அம்மாவை கேலி செய்வதா?

காலை திருவாரூரில் இருந்து திருத்துறைப் பூண்டி சென்று வந்தேன். செல்லும் வழியெங்கும் புளிய மரங்கள் இருந்தன.  புளிய மரத்தைக் கண்டாலே எனக்கு ராமாதாஸ் ஐயா தான் நியாபகத்துக்கு வருகிறார்.  அவர் தான் சொன்னார், இந்த சாதி சங்கத்தை நான் கட்சியாக மாற்றுகிற போது, என் கட்சியைச் சார்ந்தவர்கள் யாராவது பொறுப்பிற்கு வந்தால் புளியமரத்தில் கட்டி வைத்து என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னார். நான் இன்று புளிய மரங்களை பார்த்தேன். ஆளை நான் தள்ளிக் கொண்டு வருகிறேன். மரத்தை நீங்கள் செலக்ட் பண்ணுங்க. மரத்துக்கு ஒரு நாள் கட்டி வச்சு அடிச்சா கூட ஒன்றைரை வருடத்திற்கு இங்கேயே இருக்க வேண்டும். அடிக்கிறதுல நாங்க கில்லாடி. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தையே கட்டி வச்சு தோல உரிச்சவங்க நாங்க., எங்களுக்கு ராமதாஸ் எல்லாம் சர்வ சாதாரணம்.

விஜயகாந்தைப் பற்றி பேசுவதற்கு என்னைத் தவிர சிறந்தவன் இருக்க முடியாது, நாலு பேரு சுத்திகிட்டு கிடந்தாங்க, வைகோ, திருமா, இராமகிருஷ்ணன், முத்தரசன், நாலு பேரு சரியா இருக்கோமே. யார், யாரைத் தூக்குவது என்று? மூன்று பேர் தூக்கக் கூடாது, நான்கு பேர் தான் தூக்கணும். மேல படுக்க ஆள் வேணும் எனும் போது தான் சரியாக மாட்டினார் விஜயகாந்த், நான்தான் முதலமைச்சர், என்னைத் தான் தூக்கணும், வாயா ராசா நீ தான் தலைவன், இந்த சவாரி நல்லா போய்க்கொண்டிருந்தது. திடீர்னு விஜயகாந்துக்கு ஞானோதயம் நிறுத்து, நிறுத்து, முன்னாடி கொள்ளி தூக்கணும்ல, அதையும் நீங்களே சொல்லுங்க, என்னிடம் ஒரு ஆள் இருக்கிறார் ஜி.கே.வாசன், நானே அழைச்சுட்டு வர்றேன். சரி, பின்னால யாராவது கத்தனுமே என்று விஜயகாந்த் கேட்டதற்கு, பின்னால் உங்க மனைவி கத்திக் கொண்டு தான் வருகிறார், என் கணவர், என் கணவர், என் கணவர் என்று...
 
நீங்கள் அம்மாவை கிண்டல் செய்கிறீர்கள், நேற்று தனியாக எங்கள் அம்மா வேட்புமனு தாக்கல் செய்தார், இதே சவால், உங்களுக்கு. காரில் வந்து தனியாக இறங்கி, தனியாக நடந்து, படிகட்டு தனியாக ஏறி, உங்கள் இருக்கையில் அமர்ந்து, அங்கிருந்து  மைக்கை பிடித்து, உங்கள் கூட்டணியில் இருக்கக் கூடிய ஐந்து கட்சித் தலைவர்களின் பெயரைச் சொல்லி, ஐந்து கட்சிகளைச் சொல்லி, அவர்களின் சின்னங்களைச் சொல்லி ஓட்டு கேட்டுப் பார் நான் எனது ஒரு பக்கத்து மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று சவால் விட்ட ஆனந்தராஜ், அனைத்து விதங்களிலும் தன் பாணியில் தாக்கிப் பேசியதோடு, இறுதியாக இரட்டை இலைக்கு வாக்குகளைத் தாருங்கள் என்று கேட்டு, தனது உரையை நிறைவு செய்தார்.

செய்தி, படங்கள்:
த.க.தமிழ் பாரதன்