Published:Updated:

கஜானாவைக் காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடு யார்? - உளவுத்துறை தயாரிக்கும் பட்டியல்

Vikatan Correspondent
கஜானாவைக் காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடு யார்?  - உளவுத்துறை தயாரிக்கும் பட்டியல்
கஜானாவைக் காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடு யார்? - உளவுத்துறை தயாரிக்கும் பட்டியல்

அ.தி.மு.க தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது அடுத்தடுத்து பிடிபடும் பணக்குவியல்கள். 'ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்கட்சிக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளை பட்டியலிடும் பணிகளை தொடங்கிவிட்டது' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

கரூர், அய்யம்பாளையத்தில் அ.தி.மு.க பிரமுகர் அன்புநாதனின் குடோனில் நடத்தப்பட்ட ரெய்டுகள் அரசியல் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த ரெய்டுக்கு முக்கியக் காரணம் எனச் சொல்லப்படும், கரூர் எஸ்.பி வந்திதா பாண்டேவுக்கு நேற்று அனுப்பப்பட்ட துப்பாக்கி பார்சல், அதிகாரிகள் வட்டாரத்தை கலங்க வைத்திருக்கிறது.

"பறக்கும் படையில் ஈடுபாட்டோடு உழைக்கும் வடமாநில அதிகாரிகளை குறிவைத்தே இந்தப் பார்சல் அனுப்பப்பட்டது. இது மற்ற அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை" என்கிறார் தேர்தல் கண்காணிப்பு அதிகாரி ஒருவர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அவர், " அன்புநாதனின் குடோனில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பணம் அனுப்பப்படுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரிலேயே ரெய்டு நடத்தினோம். ரெய்டில் பிடிபட்ட பல விஷயங்களைப் பற்றி வெளியில் சொல்ல எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அந்தக் குடோனின் ரகசிய அறைகளைப் பார்த்து மலைத்துப் போய்விட்டோம். அன்புநாதனின் பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டோம். ரகசிய தகவலைச் சொன்னதே அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்தான். அவர் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லவில்லை. வந்த தகவல் உண்மையா? என்பதை விசாரிக்கப் போய்த்தான் கணக்கில் வராத தொகையை பறிமுதல் செய்தோம். அதற்காக, எங்களை மிரட்டுவதற்குத் துப்பாக்கி அனுப்பியது எந்த வகையில் நியாயம்?" என வேதனைப்பட்டார்.

கரூரை அடுத்து எழும்பூரில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் விஜயகுமாரின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ஐந்து கோடி ரூபாயை பறிமுதல் செய்தது வருமானவரித்துறை. தற்போது வரையில் மாநிலம் முழுவதும் 57 கோடி ரூபாய் வரையில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதில், கோவையில் தங்க மூக்குத்திக்காக ஆர்டர் செய்யப்பட்ட இரண்டரை கிலோ தங்கமும் அடக்கம். தொடர் ரெய்டுகள், தி.மு.கவின் புகார், பணப் பரிவர்த்தனைகள் கசிவது போன்ற விஷயங்களால் கடும் அப்செட்டில் இருக்கிறார் ஜெயலலிதா.

இதுபற்றிய ரகசிய விசாரணைக்கும் கார்டன் உத்தரவிட்டிருக்கிறது. 'தேர்தல் முடிவுக்குப் பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்கிறார் கார்டன் நிர்வாகி ஒருவர்.

" அ.தி.மு.க தலைமைக்கு கெட்ட பெயரை உருவாக்கும் இதுபோன்ற சம்பவங்களால் அம்மா ரொம்பவே வேதனைப்படுகிறார். இதுபற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவருவது நல்ல அறிகுறியல்ல என்றும் அவர் நினைக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும், பறக்கும் படைக்குத் தகவல் கொடுக்கும் கட்சிக்காரர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதற்கு முக்கியக் காரணமே, அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்த முன்னாள் இளம் அமைச்சர் ஒருவர்தான். அவருடன் நட்பை முறித்தபிறகு, மூத்த அமைச்சர்கள் சிலரோடு நட்பில் இருந்தார் அன்புநாதன். கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதிகளுக்கு பணவிநியோகம் செய்யும் சென்டர்களில் அன்புநாதனும் ஒருவர்.

அவரது குடோனின் அத்தனை விஷயங்களையும் அத்துப்படியாகத் தெரிந்த நபர்தான் இந்த முன்னாள் அமைச்சர். அவர் மூலம்தான் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் போனது. இத்தனைக்கும் அந்த முன்னாள் மாண்புமிகுவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் கடும் போட்டி நடக்கிறது. 'வெற்றி பெறுவதே சந்தேகம்தான்' என்ற நிலையில், பிரசாரத்திலும் அவர் ஆர்வம் காட்டுவதில்லை. தி.மு.கவில் நட்பு பாராட்டிய புள்ளியோடு மோதுவதையும் அவர் விரும்பவில்லை. 'தன்னை நெருக்கடிக்கு ஆளாக்கியது மூத்த அமைச்சர்கள் சிலர்தான்' என்ற கோபத்தில் தகவல்களை கசிய விட்டிருக்கிறார் என கார்டனுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்திருக்கிறது. இதுபற்றிய எச்சரிக்கையும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்றவர்,

" இதுதவிர, எழும்பூரில் விஜயகுமார் வீட்டைக் காட்டிக் கொடுத்ததிலும் சீனியர் அமைச்சர்கள் சிலருக்குத் தொடர்பிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு சீனியர் அமைச்சர்கள் சிலரது வீடுகளில் கார்டனின் உளவுத்துறை டீம் அதிரடி ரெய்டு நடத்தியது. இதில் கணக்கில் வராத சொத்துப் பத்திரங்களும், ஏராளமான தொகைகளும் பிடிபட்டன. அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை கார்டன் டீமில் காட்டிக் கொடுத்த சிலர்தான், இப்போது பறக்கும்படைக்கும் தகவல்கள் கொடுத்திருக்கிறார்கள். சீட் கிடைக்காத ஆத்திரம்,  தொகுதி மாறி போட்டியிடும் கோபம், தன்னிடம் வளர்ந்தவர்களே தன்னைக் காட்டிக் கொடுக்கும் அவலம் போன்றவைதான் பணப் பரிவர்த்தனைகள் வெளியில் வரக் காரணம் என பல விஷயங்கள் கிடைத்திருக்கிறது. இதுபற்றிய விரிவான பட்டியலை உளவுத்துறை அதிகாரிகள் தயாரித்துவிட்டார்கள். 'காட்டிக் கொடுக்கும் கறுப்பு ஆடுகளை தேர்தல் முடிவுக்குப் பிறகு கவனித்துக் கொள்ளலாம்' என அம்மா முடிவெடுத்திருக்கிறார். மே 19-ம் தேதிக்குப் பிறகு கார்டனின் ஆப்ரேஷன் தொடங்கிவிடும்" என்றார் அவர்.

கட்சிக்குத் துரோகம் செய்யும் சீனியர்களைப் பற்றி கார்டனுக்கு தினம் தினம் புகார் கடிதங்கள் வந்து குவிகிறதாம். இவை அனைத்தையும் தொகுக்கும் வேலைகளும் ஜரூராக நடந்து வருகிறது. கார்டனின் அடுத்த அதிரடியை கலவரத்தோடு எதிர்நோக்குகிறார்கள் சீனியர் அமைச்சர்கள் சிலர்.

-ஆ.விஜயானந்த்