Published:Updated:

அய்யம்பாளையம் ஆதாரத்தை அழிக்கும் காவல்துறை! கருணாநிதி பகீர்

Vikatan Correspondent
அய்யம்பாளையம் ஆதாரத்தை அழிக்கும் காவல்துறை! கருணாநிதி பகீர்
அய்யம்பாளையம் ஆதாரத்தை அழிக்கும் காவல்துறை! கருணாநிதி பகீர்
அய்யம்பாளையம் ஆதாரத்தை அழிக்கும் காவல்துறை! கருணாநிதி பகீர்

அய்யம்பாளையம் சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாமல், கடும் குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக உலா வருவதற்கும், குற்றங்கள் சம்பந்தமான ஆதாரங்களைக் காவல்துறையில் உள்ள சிலருடைய உதவியோடு மறைப்பதற்கும், அழிப்பதற்கும் அனுமதித்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க வைச் சேர்ந்த மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் முதலமைச்சரும்; தற்போதைய நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவரும், அவர்களுடைய அனைத்து விவகாரங்களையும் உடனிருந்து கவனித்து வருபவருமான கரூர் - அய்யம்பாளையத்தைச் சேர்ந்த அன்புநாதன் என்பவரின் வீடு மற்றும் கிடங்கு ஆகியவற்றில் சோதனை நடத்தியவர் கரூர் மாவட்டக் காவல் துறை பெண் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே என்பவராவார். அவர் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இதுவரை மறைத்து  வைக்கப்பட்டிருந்த இப்படிப்பட்ட தகவல்கள் வெளியுலகக் கவனத்தை  ஈர்ப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் வந்திதா பாண்டே என்ற பெண்மணி ஆவார். ரெய்டுக்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளி வந்திருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று (26-04-2016) கரூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு ஒருவர் வேகமாக ஓடி வந்து எஸ்.பி.யைப் பார்க்க வேண்டுமென்று அவசரப்பட்டிருக்கிறார். மிகுந்த பதற்றத்தோடு  காணப்பட்ட அவர், எஸ்.பி.யின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அந்த நபர் எஸ்.பி.யிடம் கொடுத்த பையில் துப்பாக்கி ஒன்று இருந்திருக்கிறது. அப்போது எஸ்.பி.யிடம் அந்த நபர், “உங்களைச் சுட்டுக் கொல்லும்படி முகமூடி அணிந்திருந்த இரண்டு பேர் தெரிவித்தனர். எஸ்.பி.யைச் சுட்டுக் கொன்றால் பத்து லட்சம் ரூபாய் தருகிறோம்; அப்படிக் கொல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவோமென்று மிரட்டினர். அதனால் நான் பயந்துவிட்டேன். என்னைக் காப்பற்றுங்கள்” என்று கூறி எஸ்.பி.யிடம் அந்த நபர் கதறி அழுததாகவும், அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் இன்று நாளேடுகளில் செய்தி வெளியாகியிருக்கிறது.

மேலும் எஸ்.பி. வந்திதா பாண்டே நேர்மையுடனும் துணிச்சலாகவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் அவரைச் சுட்டுக் கொல்ல அனுப்பிய அதே நேரத்தில், வந்திதா பாண்டே தற்கொலைக்கு முயன்றதாக அன்புநாதனின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு வதந்தி ஒன்றைப் பரப்பியிருக்கிறார்கள்.

கரூர் - அய்யம்பாளையத்தில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவமும், நேற்று கரூர் எஸ்.பி.யைச் சுட்டுக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் சாதாரணமான நிகழ்வுகள் அல்ல. அய்யம்பாளையம் சம்பவம் இந்திய தேசக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எஸ்.பி.யைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தமிழக காவல் துறைக்கு, தனி நபர்கள் சிலரால் விடப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவாலாகும். எனினும் இந்த நிகழ்வுகளில் இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது வேடிக்கையாகவும் விநோதமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

மது விலக்குப் பிரசாரம் செய்ததற்காக, பாடகர் கோவனைக் கைது செய்து சிறையில் அடைத்ததோடு, அவர் மீதும், மேலும் “மக்கள் அதிகாரம்” என்னும் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் மீதும் தேச விரோத வழக்கு தொடர்ந்திருக்கும் ஜெயலலிதா அரசு; தொடர்பில்லாத சிலரிடமிருந்து எழுத்துப் பூர்வமான புகார் வந்திருப்பதாகச் சொல்லி, முதல் தகவல் அறிக்கை கூடத் தாக்கல் செய்யாமல், குற்றமேதும் புரியாதவர்களைக் கூட அவசரம் அவசரமாக, கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஜெயலலிதா அரசு; அய்யம்பாளையம் சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாமல், கடும் குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக உலா வருவதற்கும், குற்றங்கள் சம்பந்தமான ஆதாரங்களைக் காவல்துறையில் உள்ள சிலருடைய உதவியோடு மறைப்பதற்கும் அழிப்பதற்கும் அனுமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இந்திய நாட்டின் பொருளாதாரத்தையும் அதன் சட்ட விதி முறைகளையும் கேலிப் பொருளாக்கும் அய்யம்பாளையம் சம்பவம் போன்றவற்றின் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்து வரும் தேசிய அமைப்புகளின் அணுகுமுறை வேதனை அளிப்பதாகும். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் பார்த்து அறிந்துகொண்டிருக்கும் நாட்டு மக்கள், உரிய நேரத்தில் தக்க தீர்ப்பினை வழங்குவதற்குச் சிறிதும் தயங்கமாட்டார்கள்; தயங்கவும் கூடாது!" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.