Published:Updated:

'200 கோடி பணத்தில் பங்கா கேட்கிறேன்...?!' -அ.தி.மு.க வேட்பாளரை கலங்கடிக்கும் தங்கை

Vikatan Correspondent
 '200 கோடி பணத்தில் பங்கா கேட்கிறேன்...?!' -அ.தி.மு.க வேட்பாளரை கலங்கடிக்கும் தங்கை
'200 கோடி பணத்தில் பங்கா கேட்கிறேன்...?!' -அ.தி.மு.க வேட்பாளரை கலங்கடிக்கும் தங்கை

'இப்படியும் ஒரு சுயேட்சை வேட்பாளரா?' என அதிர வைக்கிறார் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் பிரபாவதி. அ.தி.மு.க வேட்பாளரான சொந்த அண்ணனை எதிர்த்துக் களமிறங்குவது அ.தி.மு.கவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 '200 கோடி பணத்தில் பங்கா கேட்கிறேன்...?!' -அ.தி.மு.க வேட்பாளரை கலங்கடிக்கும் தங்கை

சிங்காநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக சிங்கை முத்து களமிறங்கி உள்ளார். கட்சியின் சீனியராகவும் தொழிலதிபராகவும் வலம் வருகிறார். இதே தொகுதியில் போட்டியிட பிரபாவதி என்பவர் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தார். "என்னுடைய குடும்ப சொத்துக்களை சிங்கை முத்து அபகரித்துவிட்டார். என் அம்மாவின் பத்து சென்ட் இடத்தையும் அவர் கைப்பற்றிவிட்டார். அவரைத் தோற்கடிக்கவே களமிறங்குகிறேன்" என சொல்லி அதிர வைத்தார்.

அவரிடம் பேசினோம். " என்னோடு பிறந்தவர்கள் மூன்று அண்ணன்கள், ஒரு அக்கா. சிங்கை முத்து இரண்டாவதாக பிறந்தார். நான் கடைசிப் பெண்ணாக பிறந்தேன். பெரிய அண்ணன் இறந்துவிட்டார். அவருக்குக் கொடுக்க வேண்டிய சொத்துக்களை எல்லாம் முத்து கொடுத்துவிட்டார். எல்லாமே எங்க அப்பா சம்பாதித்த சொத்துக்கள்தான். எனக்கென்று எதையும் கொடுக்கவில்லை.

சோழா ஓட்டல் பின்புறம் என் அம்மா குடியிருந்த பத்து சென்ட் இடம் இருந்தது. அந்த இடத்தையும் நாலு கோடி ரூபாய்க்கு விலை பேசி முடித்துவிட்டார். எங்கம்மா வாழ்ந்த வீடு அது. 'ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க முடியாது'ன்னு சொல்லி மிரட்டறார். இதற்கு முன்பு நான் தேர்தலில் நின்றதில்லை. முறைகேடாக சம்பாதித்ததால்தான் இவ்வளவு பணத்தை வைத்திருக்கிறார். அவரோட காசு ஒரு ரூபாய்கூட எனக்கு வேண்டாம். என் அம்மா சொத்தை விக்கறதை ஏத்துக்க முடியாது. இப்ப வேட்புமனுவைத் திரும்பப் பெறனும்னு மிரட்டறாங்க. அவர்கிட்ட நான் மன்னிப்பு கேட்கனுமாம். சத்தியத்தைப் பேசற நான் ஏன் மன்னிப்பு கேட்கனும்? சோழா ஓட்டல், பரம்பரை சொத்துன்னு எல்லாத்தையும் அவர் மட்டுமே அனுபவிக்கிறார். எனக்கு ஐந்து பெண் பிள்ளைகள். அத்தனை பேரையும் கஷ்டப்பட்டு வளர்த்து கல்யாணம் பண்ணினேன்.

 '200 கோடி பணத்தில் பங்கா கேட்கிறேன்...?!' -அ.தி.மு.க வேட்பாளரை கலங்கடிக்கும் தங்கை

சோழா ஓட்டலும் எங்க அப்பாவோடதுதான். அப்பாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அதனால ஏமாத்தி சொத்துப் பத்திரத்தில கையெழுத்து வாங்கிட்டார். இதைப் பத்திக் கேட்டாலே, 'கட்சியில் பெரிய ஆளாக இருக்கேன். இருக்கற இடம் தெரியாம ஆக்கிடுவேன்'னு மிரட்டறார். சொந்தக்காரங்களும், 'அவர் எம்.எல்.ஏ ஆகறது பிடிக்கலையா? வாபஸ் வாங்கு'ன்னு சொல்றாங்க. என் வீட்டுக்காரர் உடம்பு முடியாம படுத்தபடுக்கையாக இருக்கார். இவ்வளவு கஷ்டப்படறோம். உதவிக்கு யாரும் இல்லை. என்னை மத்த கட்சிக்காரங்க தூண்டிவிடறாங்கன்னு பேசறார். எனக்குப் பின்னால யாரும் இல்லை. நான் தனி மனுஷிதான். அ.தி.மு.கவிலதான் இருக்கேன். அ.தி.மு.கவுக்கு மட்டும்தான் இதுநாள் வரையிலும் ஓட்டுப்போட்டு இருக்கேன். அவரைப் பத்தி அம்மா கவனத்திற்கும் புகார் அனுப்பியிருக்கிறேன். 200 கோடிக்கும் மேல அவருக்கு சொத்து இருக்கு. இதெல்லாம் அவர் நியாயமாக சம்பாதித்த சொத்து கிடையாது. தேர்தலில் வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. எங்க அண்ணனால ரொம்பவே பாதிக்கப்பட்டேன். இதைவிட்டா எங்க அண்ணனை எதிர்த்து நிற்க எனக்கு வேற வழியில்லை. கூடப் பிறந்த தங்கச்சியையே ஏமாத்தறவர், தொகுதி மக்களை எப்படியெல்லாம் ஏமாத்துவார். நான் ஜெயிக்கணும்னு போட்டியிடலை. ஆனா எங்க அண்ணன் தோக்கணும், அவ்வளவுதான்" என்றார் ஆவேசத்தோடு.

இதுகுறித்து சிங்கை முத்துவிடம் விளக்கம் கேட்டோம். " அவருக்கும் எனக்கும் இருபது வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லை. எந்தத் தொடர்பும் இல்லை. திடீர்னு ஏன் இப்படிக் கிளம்பறார்னும் தெரியலை. நான் ரொம்ப நாகரிகமானவன். இப்படிப் போட்டியிடுவதால அவருக்கு எந்த லாபமும் இல்லை. யார் தூண்டுதலில் இப்படி பண்றாங்கன்னு தெரியலை. கொடுக்க வேண்டிய சொத்துக்களைக் கொடுத்து கையெழுத்தும் வாங்கிவிட்டேன். இப்போது அநியாயமாக பழிவாங்கப்படுகிறேன். தேர்தல் பிரசார வேலைகளைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது" என வேதனைப்பட்டார்.

தங்கையின் பிரசாரத்திற்கு எதிராக அண்ணன் என்ன வியூகம் வகுக்கப் போகிறார்? என ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் சிங்கை அ.தி.மு.கவினர்.

-ஆ.விஜயானந்த்