Published:Updated:

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெயலலிதா சொல்லும் புது விளக்கம்!

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெயலலிதா சொல்லும் புது விளக்கம்!
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெயலலிதா சொல்லும் புது விளக்கம்!

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெயலலிதா சொல்லும் புது விளக்கம்!

கோவை: தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்றுதான் பொருள் என முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தில் புது விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பேசும்போது, ''உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளை போராடி பெற்ற பொன்னான மே தினத்தில் எனது மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர் நிலை உயர பல்வேறு நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு எடுத்துள்ளது.

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் உருவாக்கி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ரூ.568 கோடிக்கு நல உதவிகள் கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று பல்வேறு திட்டங்களை எனது அரசு நிறைவேற்றி உள்ளது. இனிவரும் காலங்களிலும் தொழிலாளர் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை நிறைவேற்றிட பாடுபடுவேன்.

கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின்போது,  நான் அளித்த வாக்குகளை நிறைவேற்றியதோடு மட்டும் இல்லாமல், நினைத்து பார்த்து இருக்க முடியாத பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். ஆனால், கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. கொடுத்த தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. அதன்படி, தமிழகத்தில் மண்டல தாவரவியல் வாரியம், தேசிய அளவிலான தாவரவியல் பயிற்சி மையம் நிறைவேற்றப்படவில்லை.

பதப்படுத்தப்பட்ட உற்பத்தி மையம், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள் இயற்கை மரணம் அடைந்தால் அவர்கள் செலுத்த வேண்டிய கடன் தள்ளுபடி, கூட்டுறவு சங்க தேர்தல் உடனடியாக நடத்தப்படும் என அறிவித்தனர். ஆனால், இவற்றை எதுவுமே அவர்கள் செய்யவில்லை. நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் ஆகிய இடங்களில் கேபிள் கார் அமைக்கப்படும், சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் இப்படி நிறைவேற்றப்படாத திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதேபோல், குக்கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சூரிய ஒளி மூலம் இயங்கும் விளக்குகள் எரிய வைக்கப்படும் என்ற தி.மு.க. வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்படி ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அவர்களுக்கு கட்டணம் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. அரசுதான் செயல்படுத்தியுள்ளது.

தனக்கும் தனது குடும்பத்துக்கும் பயன் தராத எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற மாட்டார் கருணாநிதி. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது நான்தான். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்றுதான் பொருள். நிலக்கரி, 2ஜி, ஆதார்ஸ் என பல்வேறு ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட கூட்டணி. காமன்வெல்த் விளையாட்டில்கூட விளையாடிவர்கள் என்றால் அவர்கள் எப்படிபட்ட கூட்டணி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கும் ஊழல் என்ற நிலையில் மத்திய, மாநிலத்தில் நடத்தி வந்தனர். தற்போது அவர்கள் உத்தமர்கள்போல் பேசி மக்களை மாற்றி விடலாம் என பகல் கனவு காண்கின்றனர். இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கருணாநிதி வல்லவர் என சர்க்காரியாவிடம் இருந்து அந்த காலத்திலேயே பெயர் பெற்றவர்.

வீராணம் ஊழல், நில அபகரிப்பு, மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல் என அவர்களின் கொள்ளை பரந்து விரிந்து இருந்தது. 2ஜி இமாலய ஊழலை புரிந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதைபற்றி அவர் என்ன சொன்னார். காங்கிரஸ் கட்சி தங்களை பழிவாங்குகிறது என்றார். காங்கிரஸ் எதற்காக தி.மு.க.வை பழிவாங்க வேண்டும்?. காங்கிரசுக்கான உரிய பங்கு கொடுக்கப்படவில்லை என்பதை பொருள் கொள்ளலாமா?.

அப்படி பழி வாங்கியவர்களுடன் தற்போது ஏன் கூட்டணி அமைத்துள்ளது தி.மு.க. .ஏழை மக்கள் பயன் அடைவதற்கு தொலைத்தொடர்பு துறையில் பயன் அடைய வேண்டும் என்பதற்காக புரட்சியை ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள். ஏழை மக்கள் என்பதை யாரைக் குறிப்பிடுகிறார்கள். அவர்களது குடும்பத்தையா?. ஊழலுடன் பின்னி பிணைந்துள்ள அவர் ஊழல் அற்ற ஆட்சி வழங்குவாராம். இதை கேட்க என்ன நாம் ஏமாளிகளா. அவர்கள் வாக்கு கேட்டு வரும்போது விரட்டி அடியுங்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு பல்வேறு சாதனைகளை நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றிக் காட்டியதுதான். முந்தைய தி.மு.க. ஆட்சியில் எப்படிப்பட்ட மின்வெட்டுக்கு ஆளாக்கபட்டிருந்தீர்கள் என்பதை மறக்க முடியாது. அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். ஒட்டு மொத்த தமிழகமே மின்பற்றாக்குறை காரணமாக சின்னபின்னமாகி இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இருண்ட தமிழகம் ஒளிமயம் ஆக்கப்படும் என வாக்குறுதி அளித்தேன்.

அதன்படி, இன்று மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அனைவருக்கும் எவ்வித தடையின்றி தரமான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் மின்வெட்டு அறவே இல்லை என்ற நிலையை எய்துள்ளோம். தி.மு.க.வினர் உங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது, அ.தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்று கூசாமல் பொய் சொல்வார்கள். அப்போது மீண்டும் மின்வெட்டு வருவதற்கா? என்று கேள்வி கேட்டு துரத்தி அடியுங்கள்.

கருணாநிதி, ஸ்டாலினும் தொழில் வளர்ச்சி இல்லை என கூறி வருகின்றனர். அதுவும் தனது ஆட்சி மூலமாகத்தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டது எனக் கூறுகிறார்கள். 10 மணி நேரம் மின்வெட்டு இருந்த தி.மு.க. ஆட்சியில்,  எப்படி தொழில் வளர்ச்சி அடைய முடியும். அவர்கள் சொல்லி வருவது குடும்ப தொழில் வளர்ச்சிதான். தொழில் வளர்ச்சி என்பது புதிய தொழிற்சாலை தொடங்குவதும், வேலைவாய்ப்புகள் ஏற்படுவதும்தான். தனிப்பட்ட குடும்பத்தின் வளர்ச்சி தொழில் வளர்ச்சி ஆகாது" என்றார் ஆவேசமாக.

- ச.ஜெ.ரவி

படங்கள்:
தி.விஜய்

அடுத்த கட்டுரைக்கு