Published:Updated:

மெட்ராஸ் இப்படித்தான் இருந்தது என்றால் நம்புவீர்களா? | சென்னை கதை

சென்னை
சென்னை ( Twitter )

குறைந்தபட்சம், இந்த கோடைகாலத்திலாவது அனைத்து நீர் நிலைகளையும் மீட்க, புனரமைக்க, புதுப்பிக்க அரசு திட்டங்களை தீட்டி, உடனே செயல்படுத்த வேண்டும். அதற்கு மக்கள், இயக்கங்கள் நிர்பந்திக்க வேண்டும். தவறுவோமென்றால் அடுத்த மழையும் நமக்கு சாபமாகவே இருக்கும்.


ரு நிமிடம் விழிகளை மூடுங்கள். இதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இப்போது நீங்கள் ஒரு சிறிய நகரத்தில் வசிக்கிறீர்கள். அந்த நகரத்தில் மூன்று நதிகள் ஓடுகிறது. அந்த நதிகளில் நீர் வழி போக்குவரத்து நடைபெறுகிறது. அந்த நதிகளை ஒட்டிய பரப்பில் அழகான தோட்டங்கள் இருக்கின்றன. கடும் கோடை காலத்திலும் அந்த நகரத்தில் தண்ணீர் பஞ்சம் வந்ததில்லை. முப்போகம் விவசாயம் நடக்கிறது. அது மட்டுமல்லாமல், அந்த நகரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சதுப்பு நில காடுகள் இருக்கின்றன. பல தேசத்து பறவைகள் ஆண்டுதோறும் அங்கு வருகின்றன.  ஊரே மிக செழிப்பாக இருக்கிறது. கோடை வெயிலுக்கு இந்த கற்பனையே எவ்வளவு ரம்மியமானதாக இருக்கிறது. இந்த கற்பனையில் இளந்தென்றலை, பூவின் வாசத்தை, பறவைகளின் கீச்சு ஒலியை உணரமுடிகிறதல்லவா?

சரி, விழிகளை திறங்கள். வெயில் சுட்டெரிக்கும் நிகழ் காலத்திற்கு வாருங்கள். இப்போது பறவைகள், நதிகள், ஏரிகள் என நிஜத்தில் ஒன்றும் இல்லை. எங்கும் புகை வாசம் படர்ந்து இருக்கிறது அல்லவா...? ஆனால், உங்களை கற்பனை  செய்து பார்க்க சொன்ன எதுவும் வெறும் கற்பனை அல்ல. அது இறந்த காலமாகி போன சென்னையின் தோற்றம். ஒரு காலத்தில் எழில் கொஞ்சும் நிலமாக, பல்லுயிர்களின் கூடாக இருந்த பூமியை, நம் தொலைநோக்கற்ற, திட்டமிடப்படாத வளர்ச்சி கொன்றது... சிதைத்தது.

கூவமின்றி சென்னை இல்லை

கூவம் ஆற்றின் மொத்த நீளம் 72 கி.மீ. அது திருவள்ளூர் மாவட்டத்தில் 54 கி.மீ.களும், சென்னை நகருக்குள் 18 கி.மீ.களும் பயணிக்கிறது.  ஒரு காலத்தில் கூவம் நதியின் நீர் பாசனத்திற்கு பயன்பட்டது என்றால் நம்பமுடிகிறதா?  ஆம். பல லட்சம் ஏக்கர் பாசன பரப்புகள் கூவத்தை நம்பி இருந்து இருந்துள்ளது. பச்சையப்ப வள்ளல் அந்த நதியில் குளித்திருக்கிறார்.

Vikatan

இப்போதும் 70 வயதை தாண்டிய, சென்னையை பூர்வீகமாக கொண்டவர்கள் யாரிடமாவது பேசினீர்கள் என்றால், அவர்களுக்கு கூவத்துடன் ஒரு தனிப்பட்ட அனுபவம் இருக்கும். அந்த நதியில் குளித்து இருப்பார்கள், விளையாடி இருப்பார்கள், நீச்சல் பழகி இருப்பார்கள்.  ஆனால், இன்று அந்த நதி பிராணவாயு அறவே இல்லாமல் மரணித்துவிட்டது.

இது அடையாறின் கதை:

அடையாற்றின் மொத்த நீளம் 42 கி.மீ.கள். திருநீர்மலை அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் இந்த ஆற்றில்தான் கலக்கிறது. சென்னை மாநகருக்குள் உள்ள ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக பயணிக்கும் இந்த ஆறு சீனிவாசபுரம் - பெசண்ட் நகருக்கு இடையே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஏறத்தாழ, நூறு ஏரிகளின் உபரி நீர், இந்த ஆற்றில் கலக்கிறது.  இந்த ஆற்றங்கரை பல நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியதுவம் வாய்ந்த போராக கருதப்படும் ‘அடையாறு போர்’ இங்கு தான் நிகழ்ந்து இருக்கிறது. இன்று உலகம் முழுவது கிளை பரப்பி இருக்கும் பிரம்ம ஞான சபையின் தலைமையகம் இந்த ஆற்றங்கரை ஓரமாகதான்  உருவானது.

இந்த நதியைப் பற்றி உலகம் முழுவதும் பயணம் செய்த அன்னி பெசன்ட் இவ்வாறாக நினைவு சொல்லி இருக்கிறார், “பல நாடுகளை சென்று பார்பது எவ்வளவு நல்லதோ அவ்வளவு நல்லது அடையாறில் வாழ்வதும்..." என. அடையாறு வாழ்வு எவ்வளவு சிறப்பானதாக இருந்தால் இப்படி கூறி இருப்பார். அது மட்டுமல்ல, நம் தேச சுதந்திரத்தில் பங்கேற்ற, ஏறத்தாழ நம்மை ஐம்பதாண்டுகள் ஆட்சி புரிந்த,  காங்கிரஸ் கட்சியை தோற்றுவிப்பதற்கான யோசனையை அடையாறு ஆற்றங்கரையில்தான் முதன் முதலில் ஆலன் ஆக்டேவியன் ஹியூம்  முன் வைத்தார். புகழ்பெற்ற அடையாறு ஆலமர நிழலில் அமர்ந்து அன்னிபெசன்டும், ஆலனும் உரையாடி கொண்டிருக்கும்போதுதான் காங்கிரஸ் கட்சியை துவங்க வேண்டும் என்ற வித்து விழுந்தது.

இந்த பெருமைகள் மட்டுமல்ல, அடையாறு வங்கக் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் சதுப்பு நிலக் காடு இருக்கிறது. ஏறத்தாழ 150 வகையான பறவைகளின் கூடாக அந்த காடு இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த நதியில்தான் 50 இடங்களில் கழிவு நீர்கால்வாய்கள் கலக்கின்றன. மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுகின்றது. சென்னை மாநகரத்தின் 30 சதவீத கழிவுகளை நாம் இந்த நதியில்தான் கொட்டுகிறோம்.

பாரதிதாசன் பயணித்த பக்கிங்காம் கால்வாய்

Vikatan

ஆந்திர மாநிலம்,  காக்கிநாடா முதல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரம், சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய் பக்கிங்காம் கால்வாய். இந்த கால்வாய்தான் கூவத்தையும், அடையாற்றையும் இணைக்கிறது. இந்த கால்வாயில் படகு போகுவரத்து நடைபெற்றுள்ளது. ஆந்திராவிலிருந்து பொருட்கள், சென்னைக்கு படகுகளில் வந்து இருக்கிறது. அது மட்டுமல்ல, பாவேந்தர் பாரதிதாசன், ஆய்வறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, பொதுவுடைமை இயக்க தலைவர் ஜீவானந்தம், குத்தூசி குருசாமி இந்த கால்வாயில் படகில் பயணித்து இருக்கிறார்கள்.

இது குறித்து பாவேந்தர் இவ்வாறாக எழுதுகிறார், “ஒரு நாள் மாலை 4 மணிக்கு சென்னை பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி, அடுத்த நாள் காலை 9 மணிக்கு மகாபலிபுரம் சேர்ந்தோம்...வழிப்போக்கின்  இடைநேரம் இனிமையாகக் கழிந்தது’' என்கிறார்.

ஆனால். இப்போது என்ன ஆனது அந்த நதிகளுக்கும், கால்வாய்களுக்கும்...? நதிகளின் கரைகளில்தான் நாகரிகம் பிறந்தது. ஆனால், நம் நவ நாகரிகம் இந்த நதிகளையும், கால்வாய்களையும் கொன்றுவிட்டது.

வறண்ட நகரமா சென்னை...?

"சென்னையின் சராசரி மழை அளவு ஆண்டுக்கு 1300 மி.மீ. வருடத்திற்கு 550 மி.மீ மழையையே பெறும் ஜெய்ப்பூர் போன்ற நகரத்துடன் இதை ஒப்பிட்டுப்பாருங்கள்" என்கிறார் சென்னை வளர்ச்சி மற்று ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் ஜனகராஜன். பின்பு ஏன் சென்னையை வறண்ட நகரம் என்கிறோம்..? அதற்கும் அவரே விடை சொல்கிறார்.  இவர் எழுதி சென்னை ‘நீர்வழி’ அமைப்பு வெளியிட்டுள்ள குடிமக்கள் சாசனத்தில், “காஞ்சிபுரத்தில் 1942 பாசன்க் குளங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1646 பாசனக் குளங்களும் இருக்கின்றன. இவற்றில் சில மிக பெரியவை... ஆனால், துரதிர்ஷ்டமாக இந்த குளங்கள் புறக்கணிக்கப்பட்டு, தீர்ந்துபோய், மதகுகள், தகர்ந்து போய் காட்சியளிக்கின்றன.

1971 ம் ஆண்டின் நிலவரத்தின்படி,  சென்னைப் பெருநகர பரப்பிற்குள்ளேயே 142 குளங்கள் இருந்தன. இவற்றின் மொத்த கொள்ளளவு  2.45 டி.எம்.சி அல்லது 68,000 மில்லியன் லிட்டர்கள். இதில் தண்ணீர் தேங்கும் பரப்பானது 97.26 சதுர கிலோ மீட்டர்கள்" என்கிறார் ஜனகராஜன்.

ஆனால், நாம் இதில் பெரும்பாலான நீர்நிலைகளை தூர்த்து கட்டடம், வணிக வளாகங்கள் கட்டிவிட்டோம். மிச்சம் இருக்கும் குளங்களும் மரணத்தின் விளிம்பில் இருக்கிறது. சென்னையில் பெய்த அண்மை பெருமழையின் போது, வேளச்சேரியில் இருக்கும் வணிக வளாகம், பெருந்தன்மையாக வெள்ளத்தில் தத்தளித்த மக்களை, வளாகத்திற்குள் தங்க அனுமதித்தது. ஆனால், அந்த வணிக வளாகமே நீர் நிலைக்குள் கட்டப்பட்டதுதான். அதை எதிர்க்க தவறியதன் விளைவுதான், அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளம்.

ஆனால், துரதிருஷ்டமாக எந்த கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், ஏரிகளை, குளங்களை மீட்பது தொடர்பான எந்த உருப்படியான விஷயத்தையும் பார்க்க முடியவில்லை. 

சென்னையில் கடந்த முப்பது ஆண்டுகளாக, சராசரி மழை அளவைவிட அதிகமாகதான் பெய்து இருக்கிறது. நாம் கண்ணியமாக நீர்நிலைகளை மீட்டு, மழையை சேமித்து இருந்தால் சென்னைக்கு நிச்சயம் குடிநீர் பஞ்சம் வந்து இருக்காது. கூவத்தை, அடையாற்றை நாம் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டாமல் இருந்திருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும் நகருக்குள் தண்ணீர் வந்து இருக்காது. ஆனால், நாம் இதை செய்யாமல் மழையை தூற்றுகிறோம்...? வெயில் காலத்தில் தண்ணீர் பஞ்சம் என்கிறோம். பிழை அரசின் மீதா... இல்லை இயற்கையின் மீதா...?

உண்மையில் நீர் நிலைகளை புனரமைப்பது என்பது எளிமையான விஷயம், செலவு குறைவானதும் கூட. ஆனால், நாம் இதை செய்யாமல் செலவு அதிகம் பிடிக்கும், மின்சாரம் அதிகம் தேவைப்படும், சிக்கலான தொழிற்நுட்பம் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்.

குறைந்தபட்சம், இந்த கோடைகாலத்திலாவது அனைத்து நீர் நிலைகளையும் மீட்க, புனரமைக்க, புதுப்பிக்க அரசு திட்டங்களை தீட்டி, உடனே செயல்படுத்த வேண்டும். அதற்கு மக்கள், இயக்கங்கள் நிர்பந்திக்க வேண்டும். தவறுவோமென்றால் அடுத்த மழையும் நமக்கு சாபமாகவே இருக்கும்.


 

அடுத்த கட்டுரைக்கு