Published:Updated:

இதைச் செய்தால் அரசியல் கட்சிகளைப் பணிய வைத்துவிடலாம்!

இதைச் செய்தால் அரசியல் கட்சிகளைப் பணிய வைத்துவிடலாம்!
இதைச் செய்தால் அரசியல் கட்சிகளைப் பணிய வைத்துவிடலாம்!

இதைச் செய்தால் அரசியல் கட்சிகளைப் பணிய வைத்துவிடலாம்!

ண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு விஷயத்தை சொன்னார், “இந்த அரசியல் கட்சிகள், தலைவர்கள் அனைவரின் மீதும் நம்பிக்கை இல்லை... மாற்றம் வரணும்னு விரும்புறேன்... ஆனா, என்ன பண்ண முடியும்...? கட்சி, ஆள் பலம், பண பலம் என்று மிக வலிமையாக அல்லவா இருக்கிறார்கள்... அவர்களை எப்படி வீழ்த்த முடியும்”.

இது அவர் ஒருவரின் பார்வை மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள பல லட்சம் இளைஞர்களின் பார்வையும் கூட இது தான்.  ‘என்னால் அவர்களை வீழ்த்த முடியாது...’ ஆனால், இதில் எள் முனை அளவும் உண்மை இல்லை. வரலாற்றில் என்றுமே இந்த தேர்தல், அரசியல் கட்சிகள் நாம் நினைக்கும் அளவிற்கு வலிமையாக இருந்ததே இல்லை. வலிமையாக இருப்பது போல் அவர்கள் ஒரு பிம்பத்தை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அந்த பொய் பிம்பத்தை நம்பி, சாமானிய இளைஞனும் அச்சம் கொள்கிறான். விலகி செல்கிறான். கையறு நிலையில் புலம்புகிறான்.

விலகி சென்றால் வீழ்த்தப்படுவோம்:

மங்கோலிய தலைவன் செங்கிஸ்கான், “ ‘நான்’, இறைவன் உங்களுக்கு அளித்த தண்டனை. நீங்கள் பெரிய பாவங்களை செய்திருக்காவிட்டால். இறைவன் என்னை போல்  ஒருவனை இங்கு அனுப்பி இருக்க மாட்டான்” என்றான். இதை நாம் தமிழகச் சூழலுக்கும் பொருத்தி பார்த்து கொள்ளலாம். ஆம், நாம் செய்த பாவங்களின் பயன் தான், மக்கள் நலனின் கொஞ்சமும் அக்கறை இல்லாத இந்த தலைவர்கள்.

பாவம் என்றால் நேரடியாக செய்வது மட்டும் கிடையாது, தீயவை நடக்கும்போது அமைதி காப்பதும் பெரும் பாவம் தான். நாம் ஒவ்வொரும் முறையும் விலகிச் சென்று கொண்டிக்கிறோம்.  அதனால் தான் செங்கிஸ்கான் சொன்ன தண்டனை தொடர்ந்து நமக்கு அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.  பாவங்கள் செய்தால் தண்டனை என்பது தான் பொது விதி. அதை அறியாமல் புலம்புவதில் மட்டும் என்ன பயன்.

எங்களுக்கும்  பாவங்களை தட்டி கேட்க வேண்டும் என்று விருப்பம் தான். அரசியல் கட்சிகள் துவங்கி போராட வேண்டும், தேர்தலில் பங்குகொள்ள வேண்டும் என்று விருப்பம் தான். ஆனால், மக்கள் நலனில் அக்கறை இல்லாத சில கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றும் சூட்சமம் தெரிந்து பிரமாண்டமாக வளர்ந்து இருக்கின்றன. இந்த சூழலில் அதுபோல் வளர்ந்து தேர்தலை எதிர் கொள்வது சாத்தியமா...? அதுவும் தேர்தலை அதிகம் செலவு கொண்ட விஷயமாக மாற்றி விட்டார்கள். இந்த சூழலில் நான் எப்படி தேர்தலில் பங்கு கொள்வது...? - இதுவும் அந்த நண்பரின் கேள்வி தான். பிரச்னைகள் அனைத்தும் துவங்கும் புள்ளி அது தான்.

அரசியல் என்றால் தேர்தல் மட்டும் தான் என்ற எண்ணம், நம் ஆழ்மனது வரை ஊடுருவி இருக்கிறது. உண்மை அதுவல்ல...? நாம் தினம் தினம் எதிர்கொள்ளும் விஷயங்கள், நம் உணவு, நம் தண்ணீர், வாகன நெரிசல், பிறப்பு சான்றிதழ் என அனைத்தின் பின்பும் ஒரு அரசியல் படர்ந்து இருக்கிறது. அதை நாம் நேர்மையாக எதிர்கொள்வோமாயின் நிச்சயம் இவர்களை வீழ்த்திவிடலாம்.

அரசியல் லாபமற்ற தொழில் என்பதை புரிய வைப்போம்?

ஏன் இத்தனை பேர் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள்...? ஏன் தன்மானத்தை விட்டு வயது வித்தியாசம் பார்க்காமல் காலில் விழுகிறார்கள்...?  ஏன் இத்தனை கோடிகள் தங்கள் கைகாசை செலவு செய்து அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறார்கள் ...? நமக்கு நன்மை செய்யவா அல்லது நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தவா...?    இல்லை. நிச்சயம் இல்லை. பொது சேவை செய்வதற்காக இவர்கள் இத்தனை கோடிகள் முதலீடு செய்யவில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

பிறகு ஏன் இவர்கள் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி இவ்வளவு  செலவு செய்கிறார்கள் ? அனைவருக்கும் தெரிந்த எளிமையான விடை தான். அரசியல் லாபமான தொழில். இருக்கின்ற அதிகாரத்தை வைத்து கோடிகளில் சேர்க்கலாம் என்பது மட்டுமே ஒரே காரணம். இது அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும் நாம் இது நாள் வரை இதற்கொரு தீர்வை காணாமல் பொதுமையாக அனைவரையும் தூற்றிக் கொண்டு இருக்கிறோம்.

நிச்சயம் இதற்கொரு தீர்வை காணாமல் நாம் தேர்தலில் பங்கெடுத்தும் எந்த பயனும் இல்லை.  அரசியலை ஒரு லாபமற்ற தொழில் ஆக்குவோம். ஆட்சியாளர்கள் எந்தெந்த வழிகளில் பயன் சேர்கிறார்கள் என்பதை கண்டறிந்து அந்த வழிகளை அம்பலப்படுத்துவோம். அந்த வழிகளை அடைப்போம். தேர்தலில் போட்டியிடுவதைவிட இது தான் உண்மையான அரசியல் நடவடிக்கையாக இருக்க முடியும்.

இது பார்ப்பதற்கு மலைப்பாக தெரிந்தாலும், உண்மையில் இது மிக சுலபமானது தான். இருக்கின்ற சட்டங்களை வைத்து, அரசியல் சாசனம் தம் குடிகளுக்கு வழங்கி  இருக்கிற அதிகாரத்தை வைத்து இதை நாம் செய்துவிடலாம்.

அரசியலை லாபமற்ற தொழில் ஆக்காமல், உண்மையில் நாம் எதிர் கொண்டுவரும் எந்த பிரச்னைக்கும் ஒரு நிரந்திர தீர்வை காண முடியாது என்பது தான் உண்மை. இதை செய்யாமல் தேர்தலில் பங்கெடுத்து தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நம்புவீர்களாயின், சரி செய்யப்படாத அந்த அமைப்பு உங்களையும் ஊழல்வாதி ஆக்கிவிடுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
 
உங்கள் தெரு கவுன்சிலர் பேர் என்ன ?

உண்மையில் பெருமையாக இருக்கிறது. நமக்கு எல்லாம் தெரியும், சமூக ஊடகங்களில் அனைத்து சமூக பிரச்னைகளையும் அலசி ஆராய்வோம்.  அனைவரையும் கேள்வி கேட்போம். இந்திய பிரதமர், அமெரிக்க அதிபர், தமிழக கட்சிகள் என எதுவும், யாரும் நம் விமர்சன பார்வையிலிருந்து தப்ப முடியாது. மகிழ்ச்சி.

ஆனால், இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் சமூக பிரச்னைகளை கண்டு சீறி எழும் எத்தனை பேருக்கு உங்கள் பகுதி கவுன்சிலர் பேர் தெரியும்?  ஒரு மாவட்ட நிர்வாகம் எந்த படிநிலையில் இயங்குகிறது என்று தெரியுமா? மாவட்ட நிர்வாகத்தில், வி.ஏ.ஓ, தாசில்தார், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியர் இவர்களின் பங்கு என்ன என்று தெரியுமா ?

ஒரு பிரதமருக்கு நிகரான சில அதிகாரங்கள் பஞ்சாயத்து தலைவருக்கும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? நாம் இது குறித்து என்றாவது விவாதித்து இருக்கிறோமா? வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடக்கிறது என்று நமக்கு தெரியுமா?  இந்த கேள்விகளுக்கு நம்மில் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை, தெரியாது என்பதாக தான் இருக்கும். ஆனால், இது அனைத்தும் ஊழல்வாதிகளுக்கு நன்கு தெரியும், ஒரு காண்டராக்ட் எடுத்தால்\கொடுத்தால்  யாரிடம் எவ்வளவு பெற வேண்டும், யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும். அதிகாரிகளை சமாளிப்பது எப்படி என்பது அனைத்தும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆனால், மாற்றத்தை விரும்பும் நமக்கு, இது எதுவும் தெரியாது என்பது முரண் இல்லையா...? இதை எதையும் தெரிந்து கொள்ளாமல் அரசியலை லாபமற்றதாக மாற்றுவது என்பது முடியாத காரியம். ஆம், வேர் வரை விஷம் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.  நாம் வேர்களில் தான் வேலை செய்ய வேண்டும்.

நாம் நம்பிக்கையுடன் வேர்களில் வேலை செய்வோமாயின், அரசியலை லாபமற்றதாக மாற்றிவிட முடியும். அரசியல் லாபமற்றதாக ஆகும் பட்சத்தில், தீயவர்கள் ஒதுங்கி விடுவார்கள். பிறகு, அரசியல் களம் நல்லவர்களுக்கு இடையேயான போட்டியாக மாறும். உண்மையான, நாம் விரும்பும் மாற்றம் வரும்.

பிளாட்டோ, “அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருப்பதற்கான தண்டனைகளில் ஒன்று, நீங்கள் மோசமானவர்களால் ஆளப்படுவது...?” என்றார்.

விடுதலையை உண்மையில் விரும்புகிறோமா...? அல்லது தண்டனைக்கு நம்மை நாமே தகுதிப்படுத்தி கொள்கிறோமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!

- மு. நியாஸ் அகமது

 

அடுத்த கட்டுரைக்கு