Published:Updated:

மீம்ஸ் விஜயகாந்த் சி.எம். விஜயகாந்த் ஆவாரா? முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ்

மீம்ஸ் விஜயகாந்த்  சி.எம். விஜயகாந்த் ஆவாரா?   முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ்
மீம்ஸ் விஜயகாந்த் சி.எம். விஜயகாந்த் ஆவாரா? முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ்

மீம்ஸ் விஜயகாந்த் சி.எம். விஜயகாந்த் ஆவாரா? முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ்

''தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்!" - என்பது பழமொழி. இதை நம்பித்தான் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக நிற்கிறார். ஏனென்றால் இந்த மகாபாரத யுத்தத்தில் அவர்தான் தர்மர். அப்படித்தான் சொல்கிறார்கள்.விஜயகாந்தை தர்மராகவும் வைகோவை அர்ஜுனனாகவும், திருமாவளவனை பீமனாகவும், ஜி.ராமகிருஷ்ணனை நகுலனாகவும், முத்தரசனை சகாதேவனாகவும் உருவகப்படுத்திக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே சூடு கிளம்பியது. அடுப்புக்கு வெளியேயும் சூடு பரவியது தான் சிக்கலே!

இந்தக் கூட்டணி அழகாகத்தான் ஆரம்பம் ஆனது. விடுதலைச் சிறுத்தைகள் மீதான கவனத்தை ஈர்க்க 'ஆட்சியில் பங்கு' என்ற தண்டாயுதத்தை எடுத்தார் தொல்.திருமாவளவன். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிப் பீரோ தீர்மானம் நிறைவேற்றி இருந்ததால் வேறு மர நிழல் தேடிக் கொண்டு இருந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன். இருவரும் ஒன்று சேர்ந்து முத்தரசனை இணைத்துக் கொண்டார்கள். ஜெ.பாண்டியன் இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை. அவர் ஒதுக்கப்பட்டதாலும், தான் என்ன செய்வது என்று முத்தரசன் தெரியாமல் இருந்தாலும் திருமாவும் ராம கிருஷ்ணனும் காட்டிய பாதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருள் விலகுவதாக இருந்தது.அப்போது வைகோ, 'திமுக' வைகோவாக இருந்தார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்ணா அறிவாலயம் போய், மு.க.தமிழரசுவின் மகன் திருமணத்தில் முழங்கிவிட்டு வந்திருந்தார். கருணாநிதிக்கு மஞ்சள் சால்வையை மறக்காமல் எடுத்துப் போயிருந்த வைகோ, 'திமுக பொருளாளரும் தனது அயராத உழைப்பால் இப்போது உன்னதமான இடத்துக்கு உயர்ந்திருக்கக் கூடிய சகோதரர் ஸ்டாலின் அவர்களே!' என்று வாய் மாலை சூட்டினார். 'திராவிட இயக்கத்தை காப்பாற்ற கை கோர்ப்போம் என்றார். அவரை இவர்கள் பார்த்தார்கள். 'மக்கள் பிரச்னைகளில் போராடுவது' என்று முடிவெடுத்தார்கள். வைகோவின் உடம்புக்கே உரித்தான சந்தேகப் பார்வையும், வெளிப்புற சக்திகளின் வெளிச்சத் தூண்டுதல்களும் அவரை திமுகவில் இருந்து பிரிய வைத்து இதையே அரசியல் கூட்டணியாக மடை மாற்றம் செய்தது.

திமுக அதிமுக இல்லாத அணி என்ற மேடையில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றது. 'இந்த இரண்டு பேருமே ஒன்றுதான். வேற ஆளே கிடையாதா? இவங்க தான் மாறி மாறி வரணுமா?' என்று கேட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் மாற்று அணியாக இது இருந்தது.'நாங்கள் தான் மாற்று' என்ற கவர்ச்சிகரமான முழக்கம் இவர்களிடம் இருந்தாலும், சொல்லிக் கொள்வது மாதிரியான வாக்கு வங்கி இல்லை. விஜயகாந்த் வந்தால் மரியாதையாக இருக்கும் என்று இவர்கள் நினைத்ததிலும் தப்பு இல்லை. அவரைச் சந்தித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அது திமுகவுடன் விஜயகாந்த் பேரம் பேச மார்க்கெட் வேல்யூவை அதிகப்படுத்தியதே தவிர இவர்கள் பக்கம் கனியவில்லை. ஏனென்றால் 'இவங்க யாருக்கும் வோட்டு இல்லை' என்று விஜயகாந்த் நினைத்தார். வேட்பாளர் நேர்காணலின் போது, 'மக்கள் நல கூட்டணியுடன் கூட்டுச் சேரலாம்' என்று சொன்னவர்களிடம் விஜயகாந்த், 'அவங்களுக்கு எங்க வோட்டு இருக்கு' என்பதுதான். ஒன்றிரண்டு பேரிடம் அல்ல, பலரிடமும் இதையே சொன்னார். ஆனால் சிக்கல் என்னவென்றால் தேமுதிகவுக்கு விஜயகாந்த் மட்டுமே தலைவர் அல்ல. பிரேமலதாவும் ஒரு தலைவர். இந்த தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைப் பார்க்கும் போது பிரேமலதா மட்டுமே தலைவர்!

திமுகவுடன் கூட்டணி வைக்க நினைத்தார் விஜயகாந்த். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க நினைத்தார் பிரேமலதா. பா.ஜ.க. நம்மை மதிக்கவே இல்லை. எனவே அவர்கள் வேண்டவே வேண்டாம் என்றார் விஜயகாந்த். தனித்துப் போட்டியிட வேண்டாம் என்பதில் இரண்டு பேருமே தெளிவாக இருந்தார்கள். பா.ஜ.க. வேண்டாம் என்றால் மக்கள் நலக் கூட்டணிக்கு போகலாம் என்பது பிரேமலதா முடிவு. இதைத் தெரிந்து கொண்ட வைகோ, பிரேமலதாவை சந்தித்தார். இந்த சந்திப்பு நடந்து கொண்டிருந்த நாட்களில் தான் கருணாநிதியின் பேரனை விஜயகாந்த் சந்தித்ததும், 'பழம் நழுவிக் கொண்டு இருக்கிறது. பாலில் விழும்' என்று கருணாநிதி சொன்னது அன்றுதான். இதைத் தெரிந்து கொண்ட பிரேமலதாவும் வைகோவும் சேர்ந்து உருவாக்கிய அஸ்திரம் தான், 'முதலமைச்சர் வேட்பாளர்'!

வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்த விஜயகாந்தை மகளிரணி மாநாட்டுக்கு அழைத்துப் போய், 'தனித்துப் போட்டி' என்று அறிவிக்க வைத்த பிரேமலா, ''கேப்டனை முதலமைச்சராக ஏற்றுக் கொள்பவர்களோடு தான் கூட்டணி" என்று புது குண்டு வீசினார். ''இதோ நாங்க இருக்கோமே!" என்று வைகோ பச்சைத்துண்டு காட்டினார். ''நாங்கள் திமுக, அதிமுகவின் அதாதியாயங்களுக்கு மாற்று" என்று நியாயம் பேசியவர்கள், ''விஜயகாந்தை முதலமைச்சர் ஆக்குவதே லட்சியம்" என்று முழங்க ஆரம்பித்தார்கள். மாற்று மரணித்த இடம் இதுதான்.

திமுகவிடம் நடத்திய பேரங்கள் படியாததாலும், திமுகவுடன் சேருவதால் அடையும் பலன்களை விட சேராமல் இருப்பதால் அடையும் பலன் கூடுதலாக இருந்ததாலும் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தவர் விஜயகாந்த்.இதே போலத்தான் ஜி.கே.வாசனும் நாடு கேட்டான். ஊர் கேட்டான். தெரு கேட்டான். கடைசியில் வீடு கேட்டான். எதுவும் இல்லை என்றதும் சண்டை வந்தது அல்லவா மகாபாரதத்தில். அதுபோல 32 கேட்டார். 28 கேட்டார். 25 கேட்டார். 23 கேட்டார். 20 கேட்டார். 18 கேட்டார். 15 கேட்டார். ம்கூம் 9 தாண்டவில்லை. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்காக வாங்கிய பொக்கேகளை ஓரத்தில் வைத்து விட்டு 'மாற்றம் மாற்றம் மாற்றம்' என்று வந்துவிட்டார் ஜி.கே.வாசன்.

இந்த கூட்டணியின் பெயரை உன்னிப்பாக கவனியுங்கள். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. என்பதாகும். மக்கள் நலக் கூட்டணி என்ற பெயருக்குள் கூட பேருக்கு ஒன்று சேராத ஒற்றுமை விஜயகாந்துக்கும் ஜிகே வாசனுக்கும் இருக்கிறது. இதுவரை ஒரு அணியில் எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயக் கூட்டணி, முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி என்ற ஒரே பெயர்தான். இங்கே தான் இந்த புது காமெடி. மற்ற காமெடிகளை எல்லாம் நீங்கள் மீம்ஸீகளில் பார்த்துக் கொள்ளவும்.

விஜயகாந்தின் பலம் என்பது அவரது ரசிகர்கள், அரசியல் கட்சிகளின் மீது ஆர்வம் இல்லாமல் சினிமாவை மட்டுமே அறிந்த வாக்காளர்கள், திமுகவோ அதிமுகவிலோ போய் பதவிகளை பிடிக்க முடியாது என்று நினைப்பவர்கள், ஏதாவது ஒரு கட்சியில் சும்மா இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள், ரியஸ் எஸ்டேட், கந்து வட்டி மூலமாக திடீர் பணக்காரர் ஆனவர்கள் - என்று வரிசைப்படுத்தலாம்.

அரசியல் ரீதியாகச் சொல்ல வேண்டுமானால் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் விரும்பாதவர்கள் இருந்தார்கள். அந்த இரண்டு கட்சிகளுக்கும் வாக்களிப்பதை அவமானமாக நினைப்பவர்கள் இருந்தார்கள். தெய்வத்தோடும் மக்களோடும் தான் கூட்டணி' என்று விஜயகாந்த் சொல்லி வந்த வசனம் ஈர்ப்புக்குரியதாக இருந்தது.

விஜயகாந்தின் மைனஸ்

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததன் மூலமாக முதல் ப்யூஸ் போனது.

பொதுவாகவே விஜயகாந்துக்கு சிறுபான்மையினர் வாக்கு உண்டு. அதே போல வடதமிழ்நாட்டில் பாமகவை விரும்பாத மக்களின் ஆதரவும் இவருக்கு கணிசமாக இருந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் பாமகவுடன் சேர்ந்ததன் மூலமாக சிறுபான்மையினர் வாழ்க்கையும், வடதமிழ்நாட்டு செல்வாக்கையும் குறைத்துக் கொண்டார். இரண்டாவது பியூஸும் போனது.

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைக்காக டெல்லிக்கு மனு கொடுக்க திமுகவும் உடன் வர வேண்டும் என்று கோரிக்கை வைக்க கருணாநிதியை சந்தித்தார் விஜயகாந்த். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த சந்திப்பு நடந்தது. 'நான் இதுவரைக்கும் உங்களை திட்டி பேசியதை எல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க' என்று ஆரம்பித்து குழைந்தார் விஜயகாந்த். கடந்த மூன்று மாதகாலமாக பலகட்ட பேச்சுவார்த்தைகளை திமுகவுடன் நடத்தினார் என்பது அனைவர்க்கும் தெரியும். பிரேமலதா மறுக்கலாம். ஆனால் 'அன்புச்சகோதரர்' வைகோ தான் வெளியில் சொல்லிவிட்டாரே!

திமுகவுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் மூலமாக மூன்றாவது பியூஸும் போச்சு. த்ரி பேஸ் அவுட் ஆன நிலையில் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் முன்னிறுத்தப்படுகிறார்.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் உண்மையான மாற்று இவர்கள் தான் என்ற தத்துவார்த்த முகமும் கிடைக்காமல் -

இருந்த செல்வாக்கையும் படிப்படியாக இழந்த நிலையில் -

'முதலமைச்சர் வேட்பாளர்' என்ற மகுடம்
விஜயகாந்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தது அக்கூட்டணிக்கு பெரிய பலம். ஆனால் விஜயகாந்தை மாற்றத்தின் தலைவராக முன்னிறுத்துவது இக்கூட்டணியின் பலவீனம் ஆகிவிட்டது. அரசியல் அறிவியல் என்பதே சிக்கலான சயன்ஸ். ஒரு சதவிகிதம் கூடும் போது, இரண்டு சதவிகிதம் இறங்கும். ராஜதந்திரம் என்பது சதவிகிதம் கூடாவிட்டாலும், குறையாமல் பார்த்துக் கொள்வது தான். அதில் அந்த நாலுபேருமே வீக். அதனால்தான் விஜயகாந்தை அறிவிப்பதன் மூலமாக அடையப்போகும் எதிர்மறை சிந்தனைகளை கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டார்கள். அதைவிட கொடுமை இப்படி விமர்சிப்பவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தவும் பழகிவிட்டார்கள். விமர்சனங்கள் எதிர்கொள்ளத் தெரியாமல் உள் நோக்கம் கற்பிப்பவர்களால் உண்மைக்கு நெருக்கமாக எப்போதுமே போக முடியாது. வைகோ வாழ்க்கையில் இனி அது சாத்தியமே இல்லை!

விஜயகாந்தின் நோக்கம் தெளிவானது. அதில் அவர் வென்று விட்டார். தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் நாம் தான் என்று அவர் நம்பவில்லை. அதனால்தான் அவரும் அப்படி பேசவில்லை. அவரது நோக்கம், தமிழகத்தின் மூன்றாவது சக்தி நாந்தான் என்பதை அடுத்தவர் மூலமாக சொல்ல வைப்பது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 14 இடங்கள் கொடுத்து பாரதிய ஜனதா அதை ஒப்புக்கொண்டது. 105 இடங்களைக் கொடுத்து இன்று வைகோ, ஜிகே வாசன், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகிய ஐந்து கட்சிகள் ஒப்புக்கொண்டு விட்டன. 'கேப்டன் தான் அடுத்த முதல்வர்' என்று தமிழகத்தின் அரை டஜன் கட்சிகளை சொல்ல வைத்து விட்டது தான் விஜயகாந்தின் வெற்றி. இந்த வெற்றியை அறுவடை செய்யும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை என்பதுதான் அவருடைய தோல்வி.

உடல் நிலையைப் பார்த்து அனுதாபப்படும் ஒரு காலம் இருந்தது. இன்று அதுவும் கேலிப் பொருளாக மாறிவிட்டது. மனோபாவ மாற்றம் தான். நல்லவேளை கம்ப்யூட்டர்கள் இல்லாத காலத்தில் எம்ஜிஆர் மரணித்துவிட்டார். இல்லாவிட்டால் அமெரிக்க மீம்ஸ்கள் அதிகம் வந்திருக்கும். ஐயோ பாவம், விஜயகாந்த் சிக்கிக் கொண்டார்.

"இதையெல்லாம் நான் பார்ப்பதில்லை" என்று விஜயகாந்த் சொன்னார் ஒருமுறை. ஆனால் மக்கள் விஜயகாந்த் மிம்ஸீகளைபலமுறை பார்க்கிறார்கள். விஜயகாந்த் கூட்டணி இந்தத் தேர்தலில் எத்தனை லட்சம் வாக்குகள் வாங்கும் எனத் தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த் மிம்ஸுகளை இரண்டு கோடி பேர் பார்த்திருப்பார்கள். இதில் ஒரு தேர்தல் நடத்தினால், கேப்டன் தான் அடுத்த முதல்வர்! வெல்கம்!

-ப.திருமாவேலன்

அடுத்த கட்டுரைக்கு