Published:Updated:

இடைத்தேர்தல்: ஜெ. சவாலுக்கு விஜயகாந்த் பதில்

இடைத்தேர்தல்: ஜெ. சவாலுக்கு விஜயகாந்த் பதில்
இடைத்தேர்தல்: ஜெ. சவாலுக்கு விஜயகாந்த் பதில்
இடைத்தேர்தல்: ஜெ. சவாலுக்கு விஜயகாந்த் பதில்

சென்னை: ஆளுநர் ஆட்சியின் கீழ் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடந்தால், அங்கு தனித்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாக, முதல்வர் ஜெயலலிதாவின் சவாலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று தேமுதிகவுக்கு பதில் அளிக்கையில், "சங்கரன்கோவில் தொகுதியில் தனித்துப் போட்டியிட திராணி உள்ளதா?" என்று முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்தார்.

பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து நிருபர்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுகையில், "சட்டப் பேரவையில் அமைச்சர்கள் பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் அதிமுகவால்தான் தேமுதிக வெற்றி பெற்றதாக கூறினர். அதற்கு எனது கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஊர் கூடி தேர் இழுத்தால்தான் வெற்றி பெற முடியும். அதனால்தான் கடந்த தேர்தலில் அவர்களுடன் சேர்ந்து தேர் இழுத்தோம். ஆனால், அதிமுக தயவில்தான் நாங்கள் வெற்றி பெற்றதாக தொடர்ந்து கூறுகின்றனர்.

இப்படி பேசுகிறவர்கள், கடந்த ஆட்சியில் ஏதாவது ஒரு இடைத்தேர்தலிலாவது வெற்றி பெற முடிந்ததா? பென்னாகரம் இடைத்தேர்தலில் தோல்வி, பர்கூர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவே போட்டியிட்டு தோல்வியை சந்தித்த வரலாறுகள் உள்ளது.

முதல்வருக்கு அடுத்தபடியா எதிர்க்கட்சி தலைவரைதான் சொல்வார்கள். நான் எழுந்து பேசும்போது கூட, அமைச்சர் பேச்சில் குறுக்கிடக்கூடாது என்று சபாநாயகர் சொல்கிறார். இது எந்தவிதத்தில் நியாயம்? அப்போதுநான் எதிர்க்கட்சி தலைவரா இருந்து என்ன பயன்?

அமைச்சர் எல்லாரும் கை நீட்டி பேசுகிறார்கள். அப்படி பேசினால் யாருக்குதான் கோபம் வராது. எங்கள் உறுப்பினர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்.

மைனாரிட்டி திமுக அரசு என்று பேசுகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதியும் அதை ஒப்புக்கொண்டுள்ளார். அப்புறம் எதற்கு, சட்டப்பேரவையில் அதிமுகவினர் அதையே நோண்டுகிறார்கள். அவர்கள் தேவை இல்லாமல் பேசுகிறார்கள். ஆனால், நாங்கள் உருப்படியாக ஏதாவது சொன்னால் பேச விடமாட்டேன் என்கிறார்கள்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திராணி இருந்தா தனியா போட்டியிடு என்று சவால் விடுகிறார்கள். கடந்த ஆட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வைத்து போட்டியிட்டது. அப்போது அவர்களால் டெபாசிட் வாங்க முடியவில்லை.

கடந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி நடந்ததாக புகார் சொன்னார்கள். இப்போது புகார் கூறியவர்களே, அந்த மின்னணு இயந்திரம் மூலம் நடந்த தேர்தலில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதைப் பற்றி இப்போது எதுவும் பேசமாட்டார்கள்.

ஆறு மாத காலத்துக்கு ஆளுநர் ஆட்சி வரட்டும். அப்போது, சங்கரன்கோவில் இடைத்தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ எதையும் தனியாக சந்திப்போம். அப்போது எங்களுக்கு திராணி இருக்கிறதா என்று காட்டுவோம்.

இந்த ஆட்சியில் அறிக்கை மட்டுமே விடுகின்றனர். ஆனால், எந்த வேலையும் நடக்கவில்லை," என்றார் விஜயகாந்த்.