சென்னை: தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழிவாங்க மாட்டோம். ஜெயலலிதாவும் பயப்பட வேண்டாம் என்று தேர்தல் பிரசார நிறைவு பொதுக்கூட்டத்தில் கருணாநிதி உறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது நேற்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசும்போது, ''தி.மு.க.வின் வெற்றி உங்களை பார்த்தும் உறுதியாகி விட்டது. வெகுவிரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. அமைச்சரவை உருவாகுவது உறுதி. தி.மு.க. வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? என்ன நடக்காது? இப்போது நடக்கும் அராஜக ஆட்சி நடக்காது, நல்லாட்சி நடக்கும். எனக்கு எல்லோருமே ராசியானவர்கள் தான். ராசியான இடத்தில் பேசினால் அந்த ராசி மேலும் வலுப்பெற்று தி.மு.க. வெற்றி பெறும் என்றாலும், உங்களை சந்திப்பதினால் இது உறுதியாகி உள்ளது.
10 நாட்களுக்கு மேலாக வெளியூர் பிரசாரத்திற்கு சென்றுவிட்டு இன்று தான் நான் சென்னை வந்தேன். வந்தவுடன் தி.மு.க.வுக்கு அதிக இடம் கிடைக்கும் என்ற செய்தி வந்தது. சேப்பாக்கம் மக்கள் வெற்றியை தந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த சேப்பாக்கத்தில் தான் திராவிட இயக்கமே தோன்றியது. என் மேல் அக்கறை உள்ளவர்களுக்கும், இந்த இயக்கத்தை வளர்க்க பாடுபடுகிறவர்களுக்கும், ஒவ்வொருவருக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் இங்கு வந்திருப்பது எனக்காக அல்ல, நமக்காக. நீங்கள் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அதிகமான வாக்குகளை அள்ளி தர வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என்பது எனக்கு தெரியும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா பயப்பட வேண்டாம். நாங்கள் யாரையும் பழி வாங்க மாட்டோம். பழி வாங்கும் எண்ணத்தை அண்ணா எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை. 2001-ம் ஆண்டு தி.மு.க.வை நசுக்க ஆளும் கட்சி என்னவெல்லாம் செய்தது?, என் வீட்டின் கதவை தட்டி, தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பி, உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம் என்று போலீசார் கூறினார்கள். நான் எதற்கு என்றேன்? தெரியாது, உத்தரவு வந்திருக்கிறது என்றனர். நான் மறுக்கவே, குண்டுக்கட்டாக தூக்கினார்கள். விஷயம் தெரிந்து முரசொலிமாறன் வந்தார்.
என்னை எவ்வளவு கொடுமைப்படுத்த வேண்டுமோ, அவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள். உயிர்நிலையை பிடித்து இழுத்தார்கள். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்தபிறகே அந்த கொடுமை அடங்க ஆரம்பித்தது. பழிவாங்குவது அவர்கள் இயல்பு. நான் யாரையும் பழிவாங்க மாட்டேன். நீங்கள் கைவிட்ட நன்மைகளை நான் செய்வதன் மூலம் பழிவாங்குவதாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. நீங்கள் கைவிட்ட, செயல்படுத்தாத, உறுதியளித்த திட்டங்களை, காரியங்களை தி.மு.க. செய்யும். இதற்கு பழிவாங்குதல் என்றால் அதை செய்வோம். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நன்மை செய்வதை பழிவாங்குதல் என்றால், அதை செய்வோம்.
தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ? இல்லையோ? என்பது எனக்கு தெரியாது, வந்தால் பழி வாங்கும் எண்ணம் எனக்கோ, தி.மு.க.வுக்கோ கிடையாது. தி.மு.க. ஜனநாயக இயக்கம், தி.மு.க. சமுதாய இயக்கம். அரசியல் பழிவாங்கும் இயக்கம் அல்ல. அரசியலில் அனைவரையும் அரவணைத்து செல்லும் கட்சி. யாருக்கும் விரோதி அல்ல. முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என சாதி வேறுபாடு பார்க்காமல் அனைவருக்காகவும் பாடுபடும் இயக்கமாக தி.மு.க. உள்ளது.
மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுதந்திரமான தமிழகத்தை உருவாக்கப்பாடுபடுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் என்ன நடக்கிறது. மக்களுக்கு எதுவும் செய்யாமல், தனக்காக மட்டும் ஜெயலலிதா பாடுபட்டு வருகிறார். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை அனைவரையும் கைக்குள் போட்டுக்கொண்டு தன்னுடைய எண்ணங்களை ஈடேற்ற நினைக்கிறார். அதற்கு நீங்கள் இடம் கொடுக்கலாமா? அவருக்கு நீங்கள் விடை கொடுக்க வேண்டாமா? ஜனநாயகத்தை கொலை செய்து ஆட்சி நடத்தும் அவர்களுக்கு வழி விடாதீர்கள். அவர்களை விரட்டுங்கள்.
தமிழகம் இன்றைக்கு சீரழிந்து கிடக்கிறது. தமிழ்நாட்டை காப்பாற்ற எல்லோரும் உறுதி அளிக்க வேண்டும். வெற்றி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி தமிழகத்தை காப்பாற்ற வீறு கொள்ளுங்கள். புறநானுறை படைத்த பெண்கள் இன்றைக்கு இங்கு அதிகளவில் கூடியிருக்கிறார்கள். அவர்கள் வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும்" என்றார்.