Published:Updated:

ஜெ.வியூகத்திற்கு முன்னால் எடுபடாமல் போன சமூக வலைத்தள யுக்திகள்!

ஜெ.வியூகத்திற்கு முன்னால் எடுபடாமல் போன சமூக வலைத்தள யுக்திகள்!
ஜெ.வியூகத்திற்கு முன்னால் எடுபடாமல் போன சமூக வலைத்தள யுக்திகள்!

ஜெ.வியூகத்திற்கு முன்னால் எடுபடாமல் போன சமூக வலைத்தள யுக்திகள்!

மிழ்நாடு 2016 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அதிமுக,திமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் சமூக வலைத்தள பிரசார யுக்திகளை புறந்தள்ளி,சமூக வலைத்தள கணிப்புகளை தவிடு பொடியாக்கியுள்ளது.

காரணம், கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் பாஜக வென்று மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததற்குக் காரணமாகவும்,முக்கிய பலமாகவும் கூறப்பட்டது ஃபேஸ்புக்,ட்விட்டர் போன்ற சமூக வளைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட பாஜக விளம்பர உத்திகள்.அக்கட்சியின் மோடி தொடங்கி,தமிழ் நாட்டின் கன்னியாகுமரி எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் அவரை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள பிரசாரங்களை களைகட்ட வைத்தனர். மேலும் கடந்த அமெரிக்க தேர்தலில் ஒபாமா வென்று அந்நாட்டு அதிபராக  வந்ததும் சமூக வலைத்தள பிரசாரத்தினால்தான் என்றும் உலக அளவில் பேசப்பட்டது.

இதெல்லாம் நமக்கும் உதவும் என்று  நம்பி, தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக,பாமக,மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்தியக் கம்யூனிஸ்ட்,தமிழ் மாநில காங்கிரஸ்,தமிழக பாஜக,நாம் தமிழர் கட்சி  என்று அனைத்துக் கட்சிகளும் ஃபேஸ்புக்,ட்விட்டர்,யூ டியூப் என்று சமூக வலைத்தளங்களில் பிரவேசித்தன.         

இதற்கென திமுக தரப்பு, தகவல் தொழிநுட்ப விளம்பரக் குழு ஒன்றை அமைத்து இரவு பகலாக கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டும்,திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் பயணத்தை நினைவுப்படுத்தியும் நிறைய பதிவுகள்,வீடியோக்கள்,புகைப்படங்கள் பிரசார உரைகள்,அறிக்கைகள் என்று சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கியது.அதே போல மு.க.ஸ்டாலின்,கனிமொழி,துரைமுருகன் என்று ஏறத்தாழ எல்லோருமே வலைத்தள விளம்பர உத்திகளைக் கையாண்டனர்.

அதே போல பாமக, அன்புமணியும் ராமதாசும் தனித்தனிப் பக்கங்களை உருவாக்கி,ஃபேஸ்புக்,ட்விட்டரில் தங்களின் பிரசாரங்களை பரப்பிக் கொண்டிருந்தனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பிரசார வீடியோவை முழுமையாக  பதிவிட்டு இணையதளங்களில் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.  சந்தடி சாக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும்,தமாகா ஜி.கே.வாசனும்,திமுக கூட்டணியின்  பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கமிட்டியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன்,ஹெச்.ராஜா என்று ஒவ்வொருவரும் சமூக வலைத்தளங்களில்  பிரசாரம் செய்து லைக்ஸ் அள்ளிக் கொண்டிருந்தனர்.

ஆனால் இவை எல்லாமே,அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அரசியல் வியூகங்களுக்கு முன்னாள் சுத்தமாக எடுபடாமல் போய்விட்டது என்பதையே இன்றைய அதிமுக வெற்றி கணக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இத்தனைக்கும் அதிமுகவின் தகவல் தொழிநுட்ப பிரிவு திமுக அளவிற்கு சுறுசுறுப்புக் காட்டவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி என்று வரிந்துகட்டிக்கொண்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின்  தலைமையிலான தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி என்ன ஆனது இந்தத் தேர்தலில் என்று அளவுக்கு  இருக்கிறது. இந்தக் கூட்டணியின் எல்லா தலைவர்களின் ஃபேஸ்புக் ட்விட்டர் பக்கங்கள் கடந்த 16 ம் தேதியோடு எந்தப் பதிவுமில்லாமல் அப்படியே நிற்கின்றன. திமுக மற்றும் ஒயிட்காலர் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவாளர்கள் திடீர் 'சைலென்ட் மோடில்' சத்தமில்லாமல் இருக்கிறார்கள்.

திமுகவின் மீதான மெகா ஊழல் குற்றச் சாட்டுகளும்,இலங்கைத் தமிழர் விவகாரமும்,காங்கிரஸ் மீதான  வெறுப்பும் இன்னும் தமிழக மக்கள் மனதில் இருந்து மறையவில்லை என்பதே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மேலும், நாங்கதான் தமிழ்நாட்டு மக்களின் மாற்று சக்தி என்று கூறி,மேடை தோறும் மாஸ் காட்டிய  தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி ஜெயலலிதாவின் சக்திக்கு முன்னால் காணாமல் போய்விட்டது. இதனால் தேர்தல் முடிவு வெளிவந்த சில நாட்களிலேயே இந்தக் கூட்டணி உடையும் என்கிறார்கள்  'காம்ரேடுகள்'.

ஆக,உடைந்தது சமூக வலைத்தள அரசியல் மாயை.      

- தேவராஜன்.    
  
 

அடுத்த கட்டுரைக்கு