Published:Updated:

தமிழகம் கைநழுவ, தலைநகரத்தை மீண்டும் கைப்பற்றியது தி.மு.க.!

தமிழகம் கைநழுவ, தலைநகரத்தை மீண்டும் கைப்பற்றியது தி.மு.க.!
தமிழகம் கைநழுவ, தலைநகரத்தை மீண்டும் கைப்பற்றியது தி.மு.க.!

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகளினால், 'இந்த முறை ஆட்சியை பிடிப்பது நாம்தான்' என திடமான நம்பிக்கையில் இருந்த திமுகவுக்கு, தேர்தல் முடிவுகள் பெரும் அங்கலாய்ப்பையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தி விட்டது. கொஞ்சம் கூடுதல் இடங்கள் கிடைத்திருந்தால் ஆட்சியமைத்திருக்கலாமே என்ற தவிப்பில் இருக்கும் அக்கட்சிக்கு,  வேதனையிலும் ஒரு ஆறுதலாக கடந்த தேர்தல்களில் அதிமுகவிடம் இழந்த தனது கோட்டையான சென்னையை திரும்பவும் மீட்டதுதான்.

திமுகவுக்கும் சென்னைக்குமான பந்தம்,  தாய்க்கும் பிள்ளைக்குமான தொப்புள்கொடி உறவைப்போன்றது என்றே சொல்லலாம். ஏனெனில், திமுகவின் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் மூல வேரான நீதிக்கட்சி வேரூன்றி வளர்ந்தது சென்னையில்தான். பின்னர் வந்த நாட்களில், அதாவது  செப்டம்பர் 18, 1949 ம் ஆண்டு, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா,  சென்னை ராபின்சன் பூங்காவில் திமுகவை தொடங்கியதிலிருந்தே சென்னைக்கும் திமுகவுக்குமான உறவு பின்னிப்பிணைந்த ஒன்றாக ஆகிவிட்டது.

தொடர்ந்து 1957 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதன்முதலில் தேர்தல் களத்தை சந்தித்த திமுக, படிப்படியாக வளர்ந்து,  1967 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்  138 இடங்களை வென்று,  முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தபோதிலிருந்து மாறியது சென்னை, திமுகவின் கோட்டையாக.

அதனைத் தொடர்ந்து வந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் திமுக பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தபோதும், சென்னை மட்டும் திமுகவின் கோட்டையாகவே திகழ்ந்தது. குறிப்பாக திமுகவை வனவாசம் அனுப்பிய எம்.ஜி. ஆர் கூட,  சென்னையை திமுகவிடமிருந்து பறிக்க என்னென்னவோ செய்து பார்த்தும் முடியாமல் போனது. பின்னர் 1991 ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் வீசிய அனுதாப அலையும், விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான கட்சி திமுக என்று மக்களிடையே அப்போது ஏற்பட்ட வெறுப்பும் ஒன்று சேர்ந்து அதிமுக - காங்கிரஸ் கூட்டணியை அமோகமாக வெற்றி பெற வைத்தது.

வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்று அந்த தேர்தலில் தோல்வி அடைந்த திமுக, சென்னையை அதிமுக - காங்கிரஸ் கூட்டணியிடம் இழந்தது. ஆனாலும் கூட ஒட்டுமொத்தமாக அந்த தேர்தலில் திமுக ' வாஷ் அவுட்' ஆகாமல் மானம் காத்தது சென்னைதான். பரிதிஇளம்வழுதியும், கருணாநிதியும் மட்டுமே வெற்றி பெற்ற அந்த 2 தொகுதிகளுமே சென்னைக்கு உட்பட்ட தொகுதிகள்தான்.

இவற்றுக்கெல்லாம் அப்போது கூறப்பட்ட காரணங்கள், " சென்னை படித்தவர்கள் அதிகம் நிறைந்த நகரம். அவர்கள் திமுகவுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள். மேலும் அரசு ஊழியர்களிலும் பெரும்பாலானோர் திமுக ஆதரவாளர்கள்" என்பதுதான். இது ஓரளவுக்கு உண்மையாகவும் இருந்தது.

தொடர்ந்து வந்த  1996 மற்றும் 2001 தேர்தலில் சென்னை தனது கோட்டைதான் என நிரூபித்த திமுகவால், 2006 மற்றும் 2011 தேர்தல்களில் அந்த பெருமையை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் இந்த தேர்தல்களில் இருந்துதான், சிங்கிள் டீயை குடித்துக்கொண்டு கட்சியின் வெற்றிக்காக களமாடிய திமுகவின் உண்மையான தொண்டர்கள் காணாமல் போகத் தொடங்கினர்.

2006 தேர்தலில், திமுக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைத்தபோதிலும், சென்னையின்  14 தொகுதிகளில் 8 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. இதன் மூலம் திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட சென்னையில், அதிமுக ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.

அடுத்து வந்த 2011 தேர்தலில், சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 14 தொகுதிகள் கிடைத்தன. அதில் அதிமுகவுக்கு மட்டும் 11 தொகுதிகள் கிடைத்தன. மற்ற 3 தொகுதிகளில் 2 தொகுதிகளை தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும் பிடித்தன.

திமுகவுக்கு சென்னையில் கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

அதிமுக கூட்டணி சென்னையில் 1. சைதாப்பேட்டை -செந்தமிழன் (அ.தி.மு.க.) 2. மயிலாப்பூர் - ராஜலட்சுமி (அ.தி.மு.க.) 3. தியாகராய நகர் - வி.பி. கலைராஜன் (அ.தி.மு.க.) 4. ராயபுரம் - ஜெயக்குமார் (அ.தி.மு.க.) 5. துறைமுகம் - பழ. கருப்பையா (அ.தி.மு.க.) 6. திருவி.க.நகர் - நீலகண்டன் (அ.தி.மு.க.) 7. ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி (அ.தி.மு.க.) 8. வில்லிவாக்கம் - ஜே.சி.டி.பிரபாகரன் (அ.தி.மு.க.) 9. அண்ணாநகர் - கோகுல இந்திரா (அ.தி.மு.க.) 10. ஆர்.கே.நகர் - வெற்றிவேல் (அ.தி.மு.க.) 11. வேளச்சேரி - அசோக் (அ.தி.மு.க.) 12. விருகம்பாக்கம் - பார்த்தசாரதி (தே.தி.மு.க.) 13. எழும்பூர் - நல்லதம்பி (தே.மு.தி.க.) 14. பெரம்பூர் - ஏ.சவுந்தரராஜன் (மார்க்.கம்யூ.) ஆகிய இடங்களை கைப்பற்றியது.

இதனால் சென்னை திமுகவின் கோட்டை என்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது என்றும், அது தங்கள் வசம் வந்துவிட்டது என்றும் அதிமுகவினர் சொல்லத்தொடங்கினர்.

இந்நிலையில்தான் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலை உருவாகி உள்ளபோதிலும், சென்னையை மீண்டும் தன்வசமாக்கிக் கொண்டுள்ளது திமுக. மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 11 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

ஆனாலும், 'தமிழகம் முழுவதும் இந்த வெற்றி கிடைக்காமல் போய்விட்டதே..!' என்று தலைநகரில் கிடைத்த இந்த வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கிறார்கள் சென்னை உடன் பிறப்புகள்!

- பா. முகிலன்