Published:Updated:

மக்கள் நலக் கூட்டணி மண்ணைக் கவ்வ காரணம் என்ன?

மக்கள் நலக் கூட்டணி மண்ணைக் கவ்வ காரணம் என்ன?
மக்கள் நலக் கூட்டணி மண்ணைக் கவ்வ காரணம் என்ன?

மக்கள் நலக் கூட்டணி மண்ணைக் கவ்வ காரணம் என்ன?

மக்கள் நலக் கூட்டணி மண்ணைக் கவ்வ காரணம் என்ன?

2016 சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி, தே.மு.தி.க. தலைமையிலான   கூட்டணி. பெரும் பரபரப்பை உருவாக்கிய இந்த ஆறு கட்சிகளின் கூட்டணி, ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல், படுதோல்வியை சந்தித்துள்ளது. இதற்கான காரணங்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. வெற்றியை பாதிக்கும் கூட்டணி:


40 சதவிகிதத்துக்கு மேல் வாக்கு வங்கி உள்ள அதிமுகவுக்கும், 35 சதவிகிதத்துக்கு மேல் வாக்கு வங்கி உள்ள திமுகவுக்கும் வெறும் 12 சதவிகிதத்துக்குள் வாக்குவங்கி இருந்த தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா எப்படி மாற்றாகும். இது வெற்றிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. அடுத்தவரின் வெற்றியை பாதிக்க உருவான கூட்டணி என கிளம்பிய விமர்சனம் மக்களிடம் அக்கூட்டணி மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியது.

2. வைகோவின் தனிப்பட்ட கோபம்:

வைகோ தனது தனிப்பட்ட கோபங்களை தீர்த்துக்கொள்ளும் களமாக இந்தத் தேர்தலை பார்த்தார். அதனால்தான் அவர் அதிமுகவை விமர்சித்ததைவிட திமுகவை அதிகமாக விமர்சித்தார். அதன் உச்சபட்சமாக  கருணாநிதியின் சாதியை குறிப்பிட்டு கிண்டலடித்ததும் நடந்தது. அதை அவரின் கூட்டணி கட்சிகளே விரும்பவில்லை என்பது வேறு விஷயம். விஜயகாந்த்,  தான் என்ன செய்கிறோம், பேசுகிறோம் என்று அறியாமலேயே மேடையில் பேசிக்கொண்டு இருந்தபோது, அவை அனைத்தையும் வைகோ அறிந்தே செய்தார். அதனால்தான் இவர்களின் ஒவ்வொரு பிரசார மேடையும் ரணகளமானது.

3. விஜயகாந்தின் உடல்நிலை:


இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்த் மனதளவிலும் உடலவிளவிலும் தளர்ந்து போயிருந்தது தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அவர் ஏதோ சிகிச்சையில் இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்து,  அவரை மேடை ஏற்றியது அவரை பரிதாபமாகப் பார்க்கவைத்தது. விஜயகாந்தைவிட வயதில் மூத்த முதல்வர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதாவை நகைச்சுவையாக விமர்சிக்காத மீடியாவும் மக்களும், அவரை குறிவைத்து கலாய்த்ததற்கு அவரின் மேடை செயல்பாடுகளே காரணம். ‘இவரை முதல்வராக ஏற்று நாம் எப்படி வாக்களிப்பது?’ என்று மக்கள் சிந்தித்ததும் அவர்கள் தோல்விக்கான காரணம்.

4. இடதுசாரிகளின் இரட்டைநிலை:

பொதுவாகவே இடதுசாரிகள், ஹீரோயிச துதிக்கு எதிரான மனநிலையை கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்கள் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்று, அவர் பின்னால் சென்றதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், தேர்தல் சமய சந்தர்ப்பவாத கூட்டணியாகவே இந்தக் கூட்டணியை பார்த்தனர். இதையெல்லாம் மனதில் வைத்துதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஒதுங்கி இருந்தாரோ என்னவோ தெரியவில்லை. குறிப்பாக எந்த கொள்கை பின்னணியும் இல்லாத விஜயகாந்தை, முதல்வராக ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை மக்கள் ரசிக்கவில்லை.

5. தொண்டர்களின் மனநிலைக்கு நேர்எதிராக எடுத்த முடிவு:

தே.மு.தி.க., ம.தி.மு.க, த.மா.க என இந்தக் கூட்டணிக் கட்சி தொண்டர்களில் பெரும்பாலானோர் தி.மு.க உடன் கூட்டணி அமைக்கவே விரும்பினர். அதுவே தங்கள் மனநிலைக்கு நேரான கூட்டணியாக அவர்கள் கருதினர். தே.மு.தி.க,, த.மா.கா உடைந்ததும் ம.தி.முக.வில் இருந்து பலர் வெளியேறியதுமே இதற்கு சான்று. மேலும் ‘திமுகவோடுதான் கூட்டணி’ என்று விஜயகாந்த், தன் கட்சியின் 2ம் கட்ட தலைவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை கூறி வந்திருக்கிறார். இதை நம்பி, தேமுதிகவில் பலர் வேட்பாளராக நிற்க கட்சிக்கு நிதி அளித்தும் இருக்கிறார்கள். தவிர, அதிமுக  கூட்டணியிலிருந்து விலகிய பின்னர்,  தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் தாக்கிப்பேசிக்கொண்டபிறகு  மீண்டும் அந்தக் கூட்டணிக்கு போக முடியாது. அப்படி இருக்கையில், அவரின் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ள கூட்டணி தி.மு.க கூட்டணிதான். அவரும் அதைத்தான் தன் கட்சியினரிடம் சொல்லி வந்தார்.

ஆனால் திடீரென தனித்துப் போட்டி என்று அறிவித்தார். இந்த முடிவால் அதிருப்தி அடைந்த சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி, புதிய கட்சியை உருவாக்கி தி.மு.க கூட்டணியில் இணைந்தனர். இதனால், தேமுதிக வேட்பாளர்கள் நம்பிக்கை இன்றியே தேர்தலை சந்தித்தனர். அப்போதே அந்தக் கட்சிக்கான எதிர்பார்ப்பு குறைந்து போனது. தனித்துப் போட்டி என்ற முடிவை முன்னரே அறிவித்திருந்தாலும் பலமாக இருந்திருக்கும். இடையில் கூட்டணி பேரம், அதுஇது என்று இழுத்தடித்து கடைசியில் தனித்துப் போட்டி, பிறகு மக்கள் நலக்கூட்டணி என்று குழப்பியடித்ததும் அந்தக் கூட்டணியின் மைனஸாக அமைந்துவிட்டது. இதேபோல அதிமுக அழைக்கும் என காத்திருந்து ஏமாந்த த.மாகாவும் கூட்டணியில் சேர்ந்தபோது, சந்தர்ப்பவாத கூட்டணியாக பார்க்கப்பட்டது.

--த.ஜெயக்குமார்

அடுத்த கட்டுரைக்கு