Published:Updated:

மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி: ஊரையே கலக்கிய போஸ்டர் ஓட்டு வாங்கவில்லை.!

Vikatan Correspondent
மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி: ஊரையே கலக்கிய போஸ்டர் ஓட்டு வாங்கவில்லை.!
மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி: ஊரையே கலக்கிய போஸ்டர் ஓட்டு வாங்கவில்லை.!

'மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி' என்ற வசனமும், அன்புமணி மேல அன்னார்ந்திருப்பது போன்ற புகைப்படமும் தாங்கிய போஸ்டரை  பா.ம.க வெளியிட்டு. தமிழக சுவர்களை நிரப்பிய அதேவேளையில், நம் ஒவ்வொருவரின் செல்போன்களிலும் மாற்றம்... ஏமாற்றம்... அன்புமணி என்கிற ‘வாட்ஸ் அப் கார்டு’ வந்து விழுந்தது. தேர்தல் முடிவில் இதுதான் நடந்திருக்கிறது.

முதல்நாள் முதல் கையெழுத்து. ஏழாம் நாள் சிப்காட் கையெழுத்து என்று டிசைன் டிசைனாக ஹைட்டக் மேடையில் பேசிய பேச்சுக்கள், போட்ட ‘மேக்கப்கள்’ எல்லாம் சேர்ந்து எப்படியாவது தன் தலையெழுத்தை மாற்றிவிடும் என்று நினைத்த அன்புமணிக்கு பா.ம.க ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்பது சாதாரண ஏமாற்றம் இல்லை. மகா... மெகா... ஏமாற்றம். அன்புமணியே தோல்வியடைந்து விட்டார். அதுவும் 18,446 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் இன்பசேகரனிடம் படுதோல்வி அடைந்திருக்கிறார். தருமபுரியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இன்பசேகரன்தான். இது  அன்புமணிக்கு எவ்வளவு பெரிய அடி?

என்னதான் மாற்றம் முன்னேற்றம் என்று புரூடா விட்டாலும். ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக வன்னியர்கள் வாழும் தொகுதியான  பென்னாகரத்தை தேர்வு செய்ததிலயே தெரிந்துபோனது இவரின் மாற்றம். அங்கும் வெற்றி பெற முடியவில்லை என்பது ஏமாற்றம்தானே. பா.ம.க வீழ்ந்தது இருக்கட்டும், அன்புமணி வீழ்ந்தது எதனால்..?

அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனயே வெடித்த பட்டாசுகள், கூடிய இளைஞர்கள் எல்லாவற்றையும் பார்த்தபோது அன்புமணி வெற்றி பெற்று விடுவார் என்ற தோன்றத்தை தந்தது. ஏனென்றால், பா.ம.க.வினர் பென்னாகரம் தொகுதியில் பல மாதங்களுக்கு முன்பே வீடுவீடாக திண்ணைப்பிரசாரங்களை முடித்திருந்தார்கள். பெண்களிடம் ஆதரவு திரட்டியிருந்தார்கள்.  அன்புமணியின் மனைவி செளமியா பென்னாகரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கேயே தங்கியிருந்து வாக்கு சேகரித்தார். அதுமட்டுமல்லாது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் மட்டும் 89,654 வாக்குகள் பெற்றோம். இந்த தேர்தலில் எளிதாக ஒரு லட்சம் வாக்குகள் பெற்றுவிடுவோம் என்றெல்லாம் கடந்த கால வரலாற்றோடு பா.ம.க.வினர் ப்ளான் சொன்னார்கள். ஆனால், கடைசியில் வெறும் 58 ஆயிரத்து சொச்சம் வாக்குகள்தான் அன்புமணிக்கு கிடைத்திருக்கிறது. தி.மு.க வேட்பாளர் இன்பசேகரன் 76848 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் கே.பி.முனுசாமி 51687 வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க ஒழிந்துவிட்டது, அ.தி.மு.கவுக்கும் பா.ம.கவுக்கும்தான் போட்டி என்று பேட்டி கொடுத்த அன்புமணிக்கு, தன் வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் தி.மு.க வேட்பாளர் இன்பசேகரன்.

ஐம்பது சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்கும் வன்னியர்களை நம்பியும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பென்னாகரத்தில் கிடைத்த வாக்குகளை மனதில் வைத்தும் பா.ம.க போட்ட கணக்கு பலிக்கவில்லை. காரணம், நாடாளுமன்றத்தேர்தலில் நத்தம் காலணி  கலவரத்தை மனதில் வைத்து அனைத்துக்கட்சி வன்னியர்களும் பா.ம.க.வுக்கு மறைமுகமாக அதரவு தெரிவித்தார்கள். அதனால்தான், அ.தி.மு.க.வில் கே.பி.முனுசாயின் பதவி பறிக்கப்பட்டது.  தி.மு.க.விலிருந்து இன்பசேகரன் விலக்கப்பட்டார். முல்லைவேந்தன் ஒதுக்கப்பட்டார் (பின்னர் இன்பசேகரன் சேர்க்கப்பட்டார்). அதை அன்புமணி தனக்கு கிடைத்த வாக்காக நினைத்து செயல்பட்டது மிகப்பெரிய தவறு.

அதுமட்டுமல்லாது, முதல்வர் வேட்பாளரான அன்புமணி தன்னை முதல்வராகவே நினைத்து செயல்பட ஆரம்பித்தார். அவர் நோக்கம் முழுக்க முதல்வர் பதவியிலும், முதல் கையெழுத்திலும் இருந்ததே தவிர, முதல்வராவதற்கு முதலில் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்பதை மறந்துவிட்டார். பென்னாரத்தில் எப்படியும் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் வாக்கு சேகரிக்க தன் மனைவியை அனுப்பி வைத்தார். தொகுதியில் அன்புமணியின் பிரசாரம் அதிகமாக இல்லை. அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார் இன்பசேகரன். ஓட்டு கேட்கவே அவரால வரமுடியல, ஜெயிச்ச பின்னாடி இங்க வருவரா யோசிங்க. நான் வருஷம் முழுவதும் உங்க கூடவே இருப்பவன். அ.தி.மு.க.வுல நிக்கிற கே.பி.முனுசாமியும் வெளியூரு. உங்களுக்கு ஒரு பிரச்னைன்னா ஓடி வர என்னாலதான் முடியும். என்று பேசிய இன்பசேகரனின் மண்ணின் மைந்தன் செண்டிமெண்ட் மக்களிடம் எடுபட்டுவிட்டது. இன்பசேகரனின் தந்தை பெரியண்ணன் இறந்துவிட்டாலும், இன்னமும் அவருக்கான செல்வாக்கு குறையவில்லை. அதுவும் கைகொடுத்ததால்தான் முதல் சுற்றில் இருந்தே லீடிங்கில் இருந்தார் இன்பசேகரன்.

அதற்காக இதுமட்டுமே இன்பசேகரன் வெற்றிக்கான காரணமல்ல, வெகுவாக பணம் செலவு செய்திருக்கிறார். பென்னாகரத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று தங்கி வேலை பார்ப்பவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்து ஓட்டுப்போட வைத்திருக்கிறார். வன்னியர்களின் ஓட்டை குறி வைத்த பா.ம.க.வுக்கு வன்னியர்கள் ஓட்டே முழுமையாக கிடைக்கவில்லை எனும்போது மீதமிருக்கும் வன்னியர் அல்லாதோரின் ஓட்டுக்களைப்பற்றி சொல்லத் தேவையில்லை. இப்படி சின்னச் சின்ன இடங்களில் கூட  இன்பசேகரன் ஸ்கோர் செய்துவிட்டார். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் முதல் தவணை, இரண்டாம் தவணை என பணம் கொடுக்க... மக்கள் பணத்துக்கு விலைபோக மாட்டார்கள். இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று பேட்டி கொடுத்தார் அன்புமணி. அதற்காக  பணம் வெற்றி பெற்றுவிட்டது என்று சொல்லிவிட முடியாது. ஆனால்,  சாதி வெற்றி பெறவில்லை என்பதை அழுத்திச் சொல்ல முடியும்.

ஒரே ஒரு போஸ்டர் ஊரையே கலக்குது என்று ராமதாஸ் ஒருமுறை சொன்னார். ஆனால், அந்த போஸ்டர் ஓட்டு வாங்கவில்லை என்று அவர் காதில் சொல்லுங்கள்!

-எம்.புண்ணியமூர்த்தி