Published:Updated:

கருணாநிதி சொன்னது அதிமுகவுக்கு பொருந்துகிறது? குமரி மாவட்ட களேபரம்!

Vikatan Correspondent
கருணாநிதி சொன்னது அதிமுகவுக்கு பொருந்துகிறது? குமரி மாவட்ட களேபரம்!
கருணாநிதி சொன்னது அதிமுகவுக்கு பொருந்துகிறது? குமரி மாவட்ட களேபரம்!

கன்னியாகுமரி: முன்பு ஒரு முறை தி.மு.க. தலைவர் கருணாநிதி சொன்னார் 'நெல்லை எனக்கு எல்லை குமரி எனக்குத்  தொல்லை' என்று அந்த வாக்கியம் தற்போது அதிமுகவிற்கு பொருந்தியுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவினர் குமுறுகின்றனர்.

அதற்கு காரணம் ஒன்றுமல்ல குமரிமாவட்டத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து பெறும் வெற்றி தான் அதிமுகவினரை இப்படி குமுறச் செய்துள்ளது.கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக -காங்கிரஸ் கூட்டணி 6சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றி அதிமுகவுக்கு  அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தது.அதே போல அதனை தொடர்ந்து 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொதியை திமுக கைப்பற்றியது .திமுகவின் ஹெலன் டேவிட்சன் எம்.பி.ஆனார்.அதன் பின் 2011சட்டமன்ற தேர்தலில் குமரியில் உள்ள 6 தொகுதிகளில் 4 தொகுதியை திமுக- காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றி  மீண்டும் குமரியில் நாங்களே பலமானவர்கள் என நிருபித்தனர்.

தற்போது நடந்த முடிந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் குமரியில் பிரச்சாரத்திற்கு  ஜெயலலிதாவும் வரவில்லை,கருணாநிதியும் வரவில்லை.ஸ்டாலின்,வைகோ,திருமா,விஜயகாந்த் போன்ற முக்கிய தலைவர்கள் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.குமரியில் 6 தொகுதியையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றி மீண்டும் குமரி திமுக- காங்கிரஸ் கோட்டை என நிருபித்தது.2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.விற்கு 3 வது இடத்தை கொடுத்தது.

நடந்து முடிந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக 'வாஷ்அவுட்' ஆனது.தற்போது ராஜ்ய சபா வேட்பாளராக அதிமுக சார்பில் ஜெயலலிதாவால் அறிவிக்கப் பட்டுள்ளவர் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரான விஜயகுமார் என்பவர்.

நீண்டகாலமாக கட்சியில் இருக்கும் அதிமுகவினருக்கே இவரை பற்றி தெரியவில்லை." இது வரை கட்சி பேனரோ,போஸ்டரோ ஒட்டியது கிடையாது.கட்சி மீட்டிங்குகளில் தலை கூட காட்டியது கிடையாது. தேர்தல் நேரத்தில் வேலை செய்ததும் கிடையாது.ஏற்கெனவே குமரிமாவட்டத்தில் அதிமுக அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது .இதில் கட்சிக்கு உழைக்காத ,கட்சியுடன் தொடர்பு வைக்காத வழக்கறிஞர்  விஜயகுமாரை அம்மா ராஜ்ய சபா வேட்பாளராக அறிவித்துள்ளார்.இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் குமரியில் ஒரு கவுன்சிலர் சீட் கூட கிடைக்காது" என்று குமுறுகிறார்கள் குமரி அதிமுகவினர்.

முதலில் ராஜ்ய சபா வேட்பாளர்கள் பட்டியலில் குமரிமாவட்டத்தை சேர்ந்த தளவாய்சுந்தரம், நாஞ்சில்.பி.சி.அன்பழகன்,சேவியர் மனோகரன் போன்றவர்களின் பெயரே இருந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தோற்றதால் ஓரங்கட்டப்பட்டிருந்த தளவாய்சுந்தரத்தை மாவட்ட செயலாளர் ஆக்கினார் ஜெயலலிதா.அதன் பின் 2016 சட்டமன்றதேர்தலிலும் குமரிமாவட்டத்தில் 6 தொகுதியிலும் அதிமுக தோற்றது. அதன் எதிரொலியாக தளவாய்சுந்தரமும் ராஜ்ய சபா வேட்பாளர் லிஸ்டில் இருந்து தூக்கப்பட்டார்.

விரைவில் மாவட்ட செயலாளரும் மாற்றப்படுவார் என்று தகவல் பரவுகிறது. இந்த வேளையில் ஆளும் அதிமுக  'வாஷ்அவுட்' ஆனது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக பிரபலங்களையும் தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்னொரு பக்கம் பாஜக தொடர்ச்சியாக தனது வாக்கு வங்கியை,குமரியில்  உயர்த்திக் கொண்டுவருவதன் மர்மம் பலரையும்  புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.இதற்கு காரணம் எளிதில் சந்திக்க முடிகின்ற  பாஜக தலைவர்கள் ,தொண்டர்கள் என தனது அடித்தளத்தை பலமாக்கி கொண்டிருப்பது தான் .

தி.மு.க. உள்கட்சி பூசல் வெட்டுக் குத்து என்கிற அளவுக்கு போனாலும் தேர்தலில் ஒற்றுமையாக இருந்ததே தொடர் வெற்றிக்கு காரணம். குமரி அதிமுகவில் கோலோச்சிய தளவாய்சுந்தரம்,பச்சமால்,நாஞ்சில் முருகேசன் போன்ற முக்கிய புள்ளிகளை பல ஒன்றிய செயலாளர்களே ' உள்ளடி' வேலைகளை பார்த்து தோற்க வைத்து,  அந்த தோல்வியை மதத்தின் மேல் தூக்கி வீசியுள்ளனர் என்கிறார்கள் குமரியின் அதிமுக பிரமுகர்கள்.

அதிமுக தலைமை என்ன செய்யப்போகிறது என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். 

- த.ராம்