Published:Updated:

அதிமுக மந்திரிகளுக்கு திமுக உதவியாளர்கள்...கோட்டையை கோட்டைவிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி!

Vikatan Correspondent
அதிமுக மந்திரிகளுக்கு திமுக உதவியாளர்கள்...கோட்டையை கோட்டைவிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி!
அதிமுக மந்திரிகளுக்கு திமுக உதவியாளர்கள்...கோட்டையை கோட்டைவிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி!

மிழகத்தில் ஆட்சி மாற்றத்தின் மூலம் அமைந்த புதிய  அரசு நிர்வாகம், மீண்டும் முந்தைய முதல்வர் ஜெயலலிதாவின் கைக்கே திரும்பக் கிடைத்திருக்கிறது. ஆனால், சின்னதாய் ஏற்பட்ட ஒரு சறுக்கல், துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஆட்டம் காண வைத்திருக்கிறது.

அது என்ன சறுக்கல்?  ' புதியதாக அமைந்துள்ள தமிழக அரசு அமைச்சர்களின்  பி.ஏ.க்கள்,  டபேதார்கள்,  ஓ.ஏ. (ஆபீஸ் அஸிஸ்டென்ட்ஸ்)கள் ஆகிய பதவிகளுக்கு போன முறை பணியில் இருந்த  ஆட்களையே போட்டு விடுங்கள்' என்ற கார்டன் உத்தரவை பெறுவதற்குள் அந்த இடங்களுக்கு, வேறு ஆட்களை போஸ்டிங் போட்டு, ஆர்டரை ரிலீஸ் செய்து விட்டார்களாம் அதிகாரிகள்.

தமிழகத்தில் புதிய அரசு அமைக்கப் போவது, திமுக தலைமையிலான  கூட்டணிதான் என்று சிலர் கிளப்பிவிட்டதைக் கேட்டு, அந்த லிஸ்ட்டின்படி புது லிஸ்ட்டை போட்டு விட்டதாக தெரிகிறது.  

கோட்டைக்குள் இரண்டு முதல்வரா இருக்கிறார்கள் என்ற கேள்வி இதனால் எழ, ஒரு வழியாக பிரச்னை முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்படி ஒரு ஆர்டரை வெளியிட்ட  பொதுத்துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் அண்டர் செகரட்டரி ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணை பாயலாம் என்கிறது கோட்டை வட்டாரம்.

'பொதுத்துறை முதன்மை செயலாளர் பொறுப்பில்  இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி யத்தீந்திரநாத் ஸ்வேன், இதில் எப்படி கோட்டை விட்டார்? ' என்ற கேள்விக்குப் பதிலாக அவருடைய பதவிக்கு சோதனை வந்திருக்கிறது. இவ்வளவு விவகாரமும் திடீர் என வெளிக் கிளம்பியது எப்படி என கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம்.

முதல்வர் பதவியேற்பு விழாவின்போது, திமுகவின் மு.க.ஸ்டாலினுக்கு உரிய  வரிசையில் இருக்கை ஒதுக்கப்படாத பிரச்னை பெரிதாக பேசப்பட்டது. அது குறித்து முதல்வர் ஜெயலலிதா, தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டாலும், இது குறித்து ஒரு விரிவான அறிக்கையை தனக்கு அளிக்கும்படி துறை அதிகாரிகளுக்கு சத்தமில்லாமல் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

அதிகாரிகள் இது குறித்து விசாரித்தபோதுதான், 'கோட்டையில் மந்திரிகளுக்கு கீழே பணியாற்ற நியமிக்கும் பதவிகளில்  ஆள் மாறாட்ட  வேலை' நடந்த கதை வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. அடுத்ததாக, மு.க.ஸ்டாலினுக்கும், திமுக தலைவர் மு.கருணாநிதிக்கும் முறைப்படி பொதுத்துறை சார்பில் நேரில் சென்று அழைப்பிதழ் அளிக்கப்படவில்லை என்ற தகவலும் தெரிய வந்திருக்கிறது.

ஒரு பக்கம், மந்திரிகளின் உதவியாளர்கள் நியமனத்தில் குளறுபடி, இன்னொரு பக்கம் ஸ்டாலினுக்கு 'இருக்கை ஒதுக்கீட்டில்' அதிகாரிகள் செய்த மெத்தனம் என்று அத்தனையும் முதல்வர் கவனத்துக்கு 'நோட்' போடப்பட்டது.

நேற்று தலைமைச் செயலகம் வந்த வந்திருந்த முதல்வர் ஜெயலலிதா,  முதற்கட்டமாக நீக்கம் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 500 டாஸ்மாக் கடைகள் குறித்த கோப்பினை பார்வையிட்டு விட்டு, அடுத்ததாக வேறொரு கோப்பினை பரிசீலித்துக் கொண்டிருக்கும்போதுதான் கோட்டையில் நடந்த 'மந்திரிகளின் உதவியாளர்கள் பட்டியலில்  ஆள் மாறாட்டம்' குறித்த தகவல் அவர் கவனத்துக்கு வந்தது. இதில்தான் கோபத்தில் உச்சிக்கு சென்றார் முதல்வர் என்கின்றன கோட்டை வட்டாரம். அதன் எதிரொலிதான் அன்று மாலையே பொதுத்துறை முதன்மை செயலாளர் யத்தீந்திரநாத் ஸ்வேனை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க காரணமானது.

அத்துடன் சமாதானம் அடையாத ஜெயலலிதாவின் கோபத்தை பார்த்து,  'புதிய தலைமைச் செயலாளர் பொறுப்பேற்றபின் அவர்மூலம் பலரை 'களை' எடுக்கப் போகிறார்கள். நிறைய மாற்றங்கள் , அவர் மூலமாகவே இனி அடிக்கடி நடக்கப் போகுது பாருங்கள்' என்கின்றனர் கோட்டை ஏரியாவில்.

யார் அந்த புதிய தலைமைச் செயலாளர்?

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தலில் வென்று  ஜெயலலிதா முதல்வரானபோது அருகில் நின்றிருந்த ஞானதேசிகன், தலைமைச் செயலாளர் ஆனார். இப்போது வென்று முதல்வரானபோது, 'நம்பர்-டூ வைக் கூப்பிடுங்க' என்று கூப்பிட்டு முதல்வர்  ஜெயலலிதா அருகில் நிற்க வைக்கப் பட்டிருக்கிறார், ராம்மோகன்ராவ்.

ஆக, அடுத்த தலைமைச் செயலாளர் யார் என முதல்வரே டார்ச் அடித்து விட்டதால், ராம்மோகன்ராவ் இப்போது மிகுந்த மரியாதையுடன் கவனிக்கப்படுகிற நபராகி விட்டார். பளபள உடையுடன் அமைச்சர்களின் அலுவலகத்துக்கு செல்ல கனவு கண்டுகொண்டிருந்த பி.ஏக்கள், உதவியாளர்கள், டபேதார்கள் சோர்ந்து போய்விட்டனர். 

அரசியல் சதுரங்கத்தில் அதிகாரிகள் பலியான சோகத்தை சொல்லிச் சொல்லி மாய்ந்துபோகிறார்கள் நடுநிலையான அதிகாரிகள்.

- ந.பா.சேதுராமன்