Published:Updated:

மனிதர்களுக்காக மட்டும் இப்புவி இல்லை...!

மனிதர்களுக்காக மட்டும் இப்புவி இல்லை...!

மனிதர்களுக்காக மட்டும் இப்புவி இல்லை...!

மனிதர்களுக்காக மட்டும் இப்புவி இல்லை...!

மனிதர்களுக்காக மட்டும் இப்புவி இல்லை...!

Published:Updated:
மனிதர்களுக்காக மட்டும் இப்புவி இல்லை...!

ழுத்தாளர் நக்கீரன், தன் காடோடிகள் நாவலில் இப்படி எழுதி இருப்பார், “மரம் என்றால் அது இலைகள் அல்ல. பூக்கள் அல்ல. காய்கள் அல்ல. கனிகளும் அல்ல. ஏன் அது மரமே அல்ல. மரம் என்றால் அது டாலர்,  ,டாலர் , டாலர் மட்டுமே .” எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள் இவை.

எப்போதுமே தன்னை மையப்படுத்தியே நினைக்கும் மனித மனம், என்றுமே மரத்தை தன் சக ஜீவராசியாக நினைத்ததில்லை. மரம் என்றால் பணம், மரம் என்றால் கட்டை, மரம் என்றால் கதவுகள்.  எவ்வளவு குரூரமான சிந்தனை இவை. துவக்கத்தில் மரத்தை பணமாக பார்க்க பழகிய மனிதன், கொஞ்சம் கொஞ்சமாக கானுயிர் எல்லாவற்றையுமே பணமாக பார்க்க பழகிவிட்டான்; பணமாக மட்டுமே பார்க்க பழகிவிட்டான்.

யானையா... அதன் தந்தம் பணம். காண்டாமிருகமா... அதன் கொம்பு பணம். எறும்புண்ணியா... அதன் செதில்கள் பணம். எதுவுமே நமக்கு இப்புவியை பங்கிட்டுக்கொள்ளும் சக ஜீவராசிகள் அல்ல. எல்லாம் தம் நலனுக்காகதான் படைக்கப்பட்டது என்று நாம் எண்ணுகிறோம். உணவுச் சங்கிலி கண்ணியில், நாம் மேலே இருக்கிறோம் என்ற மமதையால், நம் நலனுக்காக எந்த எல்லைக்கும் போகிறோம். நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்று ஆடுகிறோம். கானகத்தை வரைமுறையில்லாமல் அழிக்கிறோம். பெருமைக்காக, பணத்திற்காக வேட்டையாடுகிறோம். தானே மேம்பட்டவன்,  தம்மால் எல்லாம் செய்ய முடியும் என்று கர்வம் கொள்கிறோம்.  ஆனால், நிதர்சனம்  அப்படியாக இருக்கவில்லை.  'மனிதன் துச்சமாக நினைக்கும் தேனீக்கள் அழிந்தால், அதன் பிறகு மனிதனுக்கு மிச்சமிருப்பது நான்கு ஆண்டு கால வாழ்க்கைதான்' என்றார் ஐன்ஸ்டீன். இயற்கையில் எதுவுமே வேண்டாதது இல்லை. ஒன்றோடு ஒன்று மிக அழகாக இணைக்கப்பட்டது. மனிதன்  ஒன்றை சிதைக்கிறான் என்றால், தம்மை தாமே சிதைத்துக் கொள்கிறான் என்று தான் பொருள். நாம் இதை உணர மறுக்கிறோம். 

வளர்ச்சியும், கொசுவும்:

1970 முதல் 2000 வரையிலான காலக்கட்டங்களில் மட்டும், உலகம் முழுவதும் கானுயிர்கள் ஏறத்தாழ 40 சதவீதம் வரை குறைந்துவிட்டன. இதற்கு முக்கிய காரணம், கானுயிர்களின் வசிப்பிடங்களை அழித்து பெரிய பெரிய திட்டங்கள் கொண்டு வருவது, மற்றொன்று சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடி கானுயிர்களை விற்பது.

உண்மையில் வளர்ச்சி என்று நாம் சொல்லிக் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் செய்த நன்மைகளைவிட, தீமைகளே அதிகம். காடுகளை அழித்து நாம் கொண்டுவந்த திட்டங்கள் சிறிது காலத்திற்கு வேண்டுமானால் சில பயன்களை தந்திருக்கலாம். ஆனால், தொலைநோக்காக பார்த்தால் தீமைகளே அதிமாக இருக்கிறது. இதை அறிவியலாளர்களும் இப்போது ஏற்றுக்கொள்கிறார்கள்.  சிறிய திட்டங்கள் மூலம் நீடித்த வளம்குன்றா வளர்ச்சியை முன்னெடுக்க முடியுமென்றாலும், நாம் மீண்டும் மீண்டும் சூழலியல் கேடுகளை தரும் பெரிய திட்டங்கள் மீதே கவனம் செலுத்துகிறோம்.  இதற்காக கானகங்களை, மலைகளை அழிக்கிறோம். வளர்ச்சியும், அழியும் எதிரெதிர் திசையில் இருக்கின்றன. ஆனால் மனித மூளை, அழிவின் மூலமாக வளர்ச்சியைக் கண்டுவிடலாம் என்று துடிக்கிறது. ஒரு பக்கம் நம் அரசுகள் கியோட்டோ அறிக்கை, கோபன்ஹேகன் மாநாடு, கான்குன் மாநாடு, டர்பன் மாநாடு,தோஹா மாநாடு, வார்சா மாநாடு என்று குளிரூப்பட்ட அறையில் அமர்ந்து பருவநிலை மாற்றத்தைப் பற்றி விவாதித்துக்கொண்டே,  அழிவின் பாதையில் வெகுவேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

நமது தவறான பொருளாதாரக் கொள்கைகளால், பெரும் திட்டங்களால், கடந்த 50 ஆண்டுகளில் நமது வெப்பநிலை 0.3 லிருந்து 0.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. அடுத்த 200 ஆண்டுகளில் நமது வெப்பநிலை 2லிருந்து 3 டிகிரி அளவுக்கு அதிகரிக்கும். வெப்பநிலை அதிகரித்து வருவதால், கொசுக்களின் பெருக்கமும் அதிகமாக இருக்கும். நமது வெப்பநிலை அதிகரிப்புக்கு ஏற்ப கொசுக்களும் தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வருகின்றன. பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கும் கொசுக்கள் தாக்குப்பிடிக்க துவங்கிவிட்டன என்கிறது ஓர் ஆய்வு. கொசுக்கள் அதிகரித்தால், மலேரியா பரவும், வேறு தொற்று நோய்களும் வரும். உலகத்தையே வென்றுவிட்டதாக பிதற்றும் மனிதன், இறுதியில் ஒரு கொசுவைக்கூட வெல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இதை நாம் உணராமல், வளர்ச்சியின்  பெயரால் மீண்டும், மீண்டும் தவறு செய்கிறோம்.

வளர்ச்சி வேண்டும்தான். ஆனால், அது இயற்கையை சுரண்டுவதாக இருக்கக் கூடாது. அதனுடன் இயைந்து, அதன் லயத்தில் அதை பயன்படுத்துவதாக இருக்க வேண்டும். தவறுவோமானால் பேரழிவு நமக்குதான் ஏற்படும்.

காண்டாமிருகத்தின் அழிவும், நம் குழந்தைகளும்:

ஒரு பக்கம் வளர்ச்சியின் பெயரால் கானகத்தை சுரண்டி, கானுயிர்களை அழிக்கிறோமென்றால், இன்னொரு பக்கம் அறமற்று கானுயிர்களை அழிக்கிறோம்.  2007 ம் ஆண்டு ஆப்ரிக்காவில் 13 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டன. ஆனால், 2013 ம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 1004 ஆக உயர்ந்துவிட்டது. அதாவது, ஆறு ஆண்டு காலக்கட்டத்தில் மட்டும் 7,700 சதவீதமாக காண்டாமிருக வேட்டை உயர்ந்துள்ளது.  எங்கோ காண்டாமிருகம் அழிந்தால், நமக்கென்ன என்று சாதாரணமாக இருந்துவிட முடியாது. ஆம், காண்டாமிருகத்தின் அழிவும், நம் குழந்தைகளின் எதிர்காலமும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டது. காண்டாமிருகம், ‘குடை இனத்தை’ (Umbrella Species) சார்ந்தது. அதாவது,  பரப்பெல்லை மற்றும் வசிப்பிடத் தேவைகள் அதிகமாக இருக்கும் ஒரு இனம் பாதுகாக்கப்பட்டால், சிறிய பரப்பெல்லைகள் கொண்ட பல்வேறு இனங்களும் பாதுகாக்கப்படும் என்பது இதன் பொருளாகும். காண்டாமிருகம் பாதுகாக்கப்படும் போது, அதனுடன் தன்  இடத்தை பகிர்ந்துக் கொள்ளும், மற்ற உயிரினங்களும் பாதுகாக்கப்படும். உயிர் சங்கிலி வலுவானதாக இருக்கும். ஆனால், இது புரியாமல் அல்லது புரிந்துகொண்டே  அதற்கு எதிராக செயல்படும்போது இயற்கை கண்ணி சிதையும். இயற்கை கண்ணியில் பிணைக்கப்பட்டுள்ள மனிதனும் சிதைவான். இன்று நாம் தப்பித்தாலும், நாளை குழந்தைகள் மோசமான விளைவுகளை சந்திக்கும்.

கானகத்தை அதன் பூர்வ குடிகளிடம் ஒப்படையுங்கள்:

நாம் காடுகளையும், அதனுள் வாழும் சக உயிர்களையும் காப்பது என்பது ஏதோ இயற்கைக்கு செய்யும் சேவை அல்ல. நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் அது சுயநலமும் கூட. ஆம், தேனீயின் நல்வாழ்வு, நம் எதிர்காலத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது எனும் போது, தேனீயை காப்பது எப்படி பொது நலம் ஆகும்...? நாமும், நம் அடுத்த சந்ததியும், இப்புவியில் மகிழ்வாக வாழ வேண்டுமென்று விரும்புவோமாயின், இந்த புவி நமக்கானது மட்டுமல்ல என்பதை உணர வேண்டும். சக ஜீவராசிகளுடன் இப்புவியை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் தாண்டி, கானகத்தை அதன் பூர்வ குடிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.  

எழுத்தால் இல்லாமல், கானகத்தை அனுபவப்பூர்வமாக புரிந்து கொண்டவர்கள் அம்மக்கள். அவர்களிடம் கானகத்தை ஒப்படைக்கும்போது, காட்டழிப்பு, கானுயிர்கள் வேட்டை தடுக்கப்படும். காடு காடாக இருக்கும். 

- மு. நியாஸ் அகமது