Published:Updated:

குலக்கல்வி முறையை மறைமுகமாக அமல்படுத்த அரசு திட்டமா...?

குலக்கல்வி முறையை மறைமுகமாக அமல்படுத்த அரசு திட்டமா...?

குலக்கல்வி முறையை மறைமுகமாக அமல்படுத்த அரசு திட்டமா...?

குலக்கல்வி முறையை மறைமுகமாக அமல்படுத்த அரசு திட்டமா...?

குலக்கல்வி முறையை மறைமுகமாக அமல்படுத்த அரசு திட்டமா...?

Published:Updated:
குலக்கல்வி முறையை மறைமுகமாக அமல்படுத்த அரசு திட்டமா...?

வன் பேர் ராமு. தருமபுரி பிக்கிலி மலைப்பகுதியை சேர்ந்தவன். 'மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்காத...' என்ற உவமை சொல்லப்படும் அல்லவா, அந்த உவமைக்கு சரியான பொருத்தம் அவன் குடும்பம். ஆம், இது வரை அவன் குடும்பத்தில் யாருமே பள்ளி பக்கமே சென்றதில்லை.

ராமுதான்  அவன் குடும்பத்தில் முதன்முதலாக பள்ளிக்கு சென்றவன். முதல் தலைமுறையாக பள்ளிக்கு செல்லும் ஒரு சிறுவன், எவ்வளவு நெருக்கடிகளை எதிர்கொள்வானோ, அவை அனைத்தையும் அவன் எதிர்கொண்டான். பாடத்தில் பெரிதாக அவன் சோபிக்கவில்லை. இருந்தாலும், அவனுக்கு கல்வி மீது ஒரு அலாதி காதல் இருந்தது. அவன் முட்டி மோதிப் படித்தான். பத்தாவது முடித்துவிட்டு, இப்போது JCB ஆப்ரேட்டராக பெங்களூரில் பணி செய்து வருகிறான். அண்மையில் அவனை சந்தித்தபோது, தொலைதூர கல்வியில் டிப்ளமோ கோர்ஸ் படிப்பதாகவும், அதை முடித்த பின் பட்டப்படிப்பை தொடரப்போவதாகவும் மகிழ்ச்சியாக சொன்னான்.

அவன் பத்தாவது வரை பள்ளிக் கல்வியை முடித்ததற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவன் கல்வி மீது கொண்ட அலாதி காதல், மற்றொன்று எட்டாவது வரை அவனை ஃபெயில் ஆக்காமல், பாஸ் போட்டதும் ஒரு முக்கிய காரணம். ஆம், தம் தலைமுறையில் முதன்முதலாக படிக்க பள்ளிக்கு வந்தவன், முதலில் கொஞ்சம் தடுமாறிய போது, அவனை நான்காம் வகுப்பிலோ அல்லது ஐந்தாம் வகுப்பிலோ ஃபெயில் ஆக்கி, அவனது சிறகுகளை கத்தரித்து இருந்தால், அப்போதே அவனது கல்வி குறித்த கனவுகள் கரைந்திருக்கும். நிச்சயம் அவன் படிப்பை தொடர்ந்து இருக்கமாட்டான். இடைநின்று இருப்பான்.  தேநீர் கடையிலோ, ஆட்டோமொபைல் கடையிலோ வேலைக்கு சேர்ந்து இருப்பான். பத்து வயதில் அவன் பணம் பார்க்க ஆரம்பித்து, அவன் வாழ்க்கையே திசை மாறி இருந்தாலும் இருக்கும். ஆனால், எட்டாம் வகுப்பு வரை அவனை ஃபெயிலாக்காமல் பாஸ் செய்ததால்,  தடுமாற்றத்திலிருந்து எழுந்து பத்தாம் வகுப்பு வரை படித்தான்.

இது  பிக்கிலி மலையில் வாழும் ராமுவின் கதை மட்டுமல்ல, முதல் தலைமுறையாக பள்ளிக்குள் நுழைந்த, கிராமப்புறங்களில் வசிக்கும் பல நூறு ராமுக்களின் கதை இதுதான். அவர்கள் இப்படியாகதான் கல்வி  கற்றார்கள். இப்படியாகதான் தங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டார்கள். 70 களில் பள்ளி படிப்பைத்  தொடர எப்படி சத்துணவுத் திட்டம் முக்கிய காரணியாக இருந்ததோ, அது போலதான் இப்போது எட்டாம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என்பதும்.

இடைநிற்றல் அதிகரிக்கும்:

ஏன் இப்போது ராமுவின் கதை என்கிறீர்களா...? காரணம் இருக்கிறது.  இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை  புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் பணியில் இறங்கி இருக்கிறது. அதற்காக, முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து இருந்தது. அவர்கள் அரசிற்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில் ஒரு பரிந்துரை, இனி நான்காம் வகுப்பு வரை மட்டுமே அனைவரையும் 'All Pass' செய்ய வேண்டும். ஐந்தாவது வகுப்பிலிருந்து, குறைந்த மதிப்பெண்கள் எடுப்பவர்களை ஃபெயில் ஆக்க  வேண்டுமென்று ஒரு பரிந்துரை இருப்பதாக கூறப்படுகிறது.

'நல்லதுதானே... சரியாக மதிப்பெண்கள் எடுக்காதவர்களை ஃபெயில் ஆக்குவதுதானே சரி. அப்போதுதானே கல்வியின் தரம் மேம்படும்'  என்பது உங்கள் வாதமாக இருக்குமாயின், நிச்சயம் அது இந்தியச்சூழலுக்கு பொருந்தா வாதம்தான். ஒருவனை பாஸ் ஆக்குவதால் நிச்சயம் கல்வித் தரம் நாசமாகப் போவதில்லை, வரைமுறையில்லாமல் மதிப்பெண்களை வழங்வதால்தான் கெடும். ஆம், ராமு போல பல்லாயிரம் சிறுவர்கள் இருக்கும் ஒரு தேசத்தில், இன்னும் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருக்கும் ஒரு கட்டமைப்பில், நான்காம் வகுப்பில் ஒருவனை ஃபெயில் செய்ய வேண்டுமென்று நினைப்பது விபரீதமான பலன்களையே தரும்.  அரசாங்கம், பல்வேறு திட்டங்களின் மூலம் இடைநிற்றலை குறைத்துள்ள இச்சூழலில், இந்த பரிந்துரை நடைமுறைக்கு வருமாயின், கிராமப்புறங்களில் இடைநிற்றல் நிச்சயம் அதிகரிக்கும்.

குலக்கல்வி திட்டத்தை கொண்டு வரும் குறுக்குவழி:

இது குறித்து  பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபுவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர், “இது மட்டுமல்ல, இன்னொரு பரிந்துரையும் இருப்பதாக கூறப்படுகிறது. ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவன் தொடர்ந்து ஃபெயில் ஆகிறார் என்றால், அவரை தொழிற்பயிற்சிக்கு அனுப்பலாம் என்ற பரிந்துரையும் இருக்கிறதாம். ஒரு பக்கம் கல்வி உரிமை சட்டம் மூலம், அனைவருக்கும் கல்வி அளிக்க இவ்வரசு உறுதி பூண்டு உள்ளதாக பெருமை அடித்துக் கொள்கிறது. இன்னொரு பக்கம், மாணவனை 12 வயதிலேயே தொழிற்கல்விக்கு அனுப்ப திட்டமிடுகிறது. இது நயவஞ்சகம் இல்லையா...?

அது மட்டுமல்லாமல், மனித வள மேம்பாட்டுத் துறையின் இது போன்ற நகர்வுகள், மறைமுகமாக குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

மேலும், பிரின்ஸ், “ ஒரு கல்விக் குழுவை வடிவமைப்பதென்றால், அதில் கல்வியாளர்கள்தான் பெரும்பான்மையாக இருக்க வேண்டும். ஆனால், புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு குழு, முழுக்க முழுக்க நிர்வாகிகளை கொண்ட குழுவாக இருக்கிறது. அதில் உள்ள ராஜ்புட் ஒருவரை தவிர மற்ற யாரும் கல்வியாளர்கள் இல்லை. கல்வியாளர்கள் பெரும்பான்மையாக இல்லாத ஒரு குழு எப்படி கல்வி குறித்த ஒரு கொள்கையை வடிவமைக்க முடியும்....? இது அரசு,  கல்வியை சேவையாக பார்க்காமல், முழுக்க முழுக்க வணிகமாக பார்ப்பதையே அப்பட்டமாக காட்டுகிறது...”  என்றார்.


- மு. நியாஸ் அகமது