Published:Updated:

அமைச்சரவை மாற்றத்திற்குத் தயாராகும் பா.ஜ.க! -அதிர வைக்குமா முதல்வரின் டெல்லி பயணம்?

Vikatan Correspondent
அமைச்சரவை மாற்றத்திற்குத் தயாராகும் பா.ஜ.க! -அதிர வைக்குமா முதல்வரின் டெல்லி பயணம்?
அமைச்சரவை மாற்றத்திற்குத் தயாராகும் பா.ஜ.க! -அதிர வைக்குமா முதல்வரின் டெல்லி பயணம்?

முதலமைச்சர் ஜெயலலிதாவின் டெல்லிப் பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ' தமிழகத்திற்கு தேவையான நிதி உதவியைக் கோருவது மட்டுமல்ல. நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பல விஷயங்களுக்கு நாளைய சந்திப்பு தீர்வைச் சொல்லும்' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.

சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்துப் பேசுகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. கடந்த காலங்களில் போயஸ் கார்டன் இல்லத்தில் மட்டுமே பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். தன்னைத் தேடி மற்றவர்கள் வரட்டும் என்ற மனநிலையில் இருந்தார் முதல்வர். தற்போது சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதல்வரின் டெல்லி பயணத்தை ஆச்சர்யத்தோடு பார்க்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

"தமிழக அரசின் மின்வாரியக் கடன் மட்டும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. இதுதவிர, தமிழக அரசின் 2 லட்சம் கோடி கடன் சுமையைத் தீர்க்க வழியில்லாமல், அரசு நிர்வாகம் திண்டாடுகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என முதல்வர் நம்புகிறார். தவிர, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஐம்பது எம்.பி.க்களின் பலத்தோடு மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க இருக்கிறது. வரக் கூடிய கூட்டத் தொடர்களில் அ.தி.மு.க.வின் தயவு, மத்திய அரசுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. அடுத்த ஆண்டு வரக் கூடிய குடியரசுத் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க.வின் ஒத்துழைப்பை மிக முக்கியமானதாகக் கருதுகிறார் மோடி. எனவே, அ.தி.மு.க.வின் தயவு மத்திய அரசுக்குத் தேவை. தமிழகத்தின் கடன் சுமையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசின் தயவும் தேவை. எனவே, இரு தரப்பும் தோழமையோடு இருந்தால் மட்டுதே சாத்தியம் ஆகும் என்பதால், முதல்வரின் டெல்லிப் பயணம் மிக முக்கியமானதாக இருக்கிறது" என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.

ஆனால், பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் நம்மிடம், "எங்கள் கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் இன்று மாலை நிறைவடைய இருக்கிறது. அடுத்து வரக் கூடிய நாட்களில் கட்சி நிர்வாகிகள் மாற்றம் நடக்க இருக்கிறது. அதன்பிறகு, மந்திரிசபை மாற்றம் நடக்க இருக்கிறது. பிரதமருடனான முதல்வர் ஜெயலலிதாவின் சந்திப்பு மரியாதைக்குரியதாக மட்டுமே அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த சந்திப்பில், தமிழகத்திற்கு உடனடியாக தேவைப்படக் கூடிய நிதி விவரங்கள் குறித்து முதல்வர் தெரிவிக்க இருக்கிறார். தமிழக மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள கடன் சுமைக்கு, மத்திய மின் தொகுப்பு நிதியில் இருந்து உதவிகளைக் கேட்க இருக்கிறார். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

அடுத்து வரக் கூடிய நாட்களில், என்.டி.ஏ அமைச்சரவையில் சேருவதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடலாம். ஏனென்றால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அக்டோபரில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி அசுர பலத்தோடு வெற்றி பெறவே முயலும். இந்தத் தேர்தலுக்கு கூட்டணிகள் அவசியமில்லை. அதற்குள், மத்திய அரசில் இணைவதாக அ.தி.மு.க அறிவித்தாலும், உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்குப் பெரிய பிரச்னையாக இருக்காது. இந்த சட்டமன்றத் தேர்தலில்கூட சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் தி.மு.க, காங்கிரஸ் பக்கமே சென்றுள்ளன. இதைப் பற்றி ஆளுங்கட்சி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசில் இணைவது என்பது முன்கூட்டியே எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவு. தமிழக முதல்வரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இதை உறுதிப்படுத்தும்" என்கிறார்.

முதல்வரின் டெல்லிப் பயணம் எந்த மாதிரியான விளைவுகளை உருவாக்கப் போகிறது? என்பது நாளை தெரிந்துவிடும்.

ஆ.விஜயானந்த்