Published:Updated:

சே தினமும் பிறந்து கொண்டிருக்கிறான்...!

சே தினமும் பிறந்து கொண்டிருக்கிறான்...!
சே தினமும் பிறந்து கொண்டிருக்கிறான்...!

வாலேகிராண்டாவில், 'சே' புதைக்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்த தபால் தந்தி அலுவலக சுவற்றில் இப்படி எழுதப்பட்டு இருந்தது, ''அவர்கள் நினைத்ததுபோல் இல்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் சே..." எவ்வளவு அர்த்தம் பொதிந்த வாக்கியம் இது...? இந்த ஒரு வரியில் எவ்வளவு நம்பிக்கையும், கம்பீரமும் வெளிப்படுகிறது. இந்த உலகத்தின் எல்லைகள் கடந்து, அரசியலை புரிந்துகொள்ள இந்த ஒரு வாக்கியத்தை அதன் முழு அர்த்தத்தில் நாம் புரிந்துகொண்டாலே போதும்.

ஆம். இந்த வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். உங்களுக்குள் கேள்வி கேளுங்கள், அவர்கள் யார்...? அவர்கள் ஏன் 'சே' சாக வேண்டும் என்று நினைத்தார்கள்...? 'சே'வின் பூத உடல் மட்டும் அல்ல, அவன் குறித்த நினைவுகள்கூட ஏன் மரித்துப்போக வேண்டும் என்று விரும்பினார்கள்...? ஏன் ‘சே’ என்னும் ஒற்றை எழுத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து கிழித்துவிட வேண்டும் என்று துடித்தார்கள்...?  இந்த கேள்வியின் சரியான விடையில்தான், உலகத்தின் மொத்த அரசியலும் இருக்கிறது.

அவர்கள் நம்மை விட  ‘சே’ வை நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்...

'சே'வை விரும்புபவர்கள், 'சே'வை பின்பற்றுபவர்கள், 'சே'வை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டவர்களைவிட, அவனை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று விரும்பிய, அந்த அவர்கள்தான் 'சே'வை நன்கு புரிந்து வைத்திருந்தார்கள். அந்த அவர்களுக்கு தெரிந்து இருந்தது 'சே' என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல. அது ஒரு இயக்கம் என்பது. அந்த இயக்கம் குறித்த நம்பிக்கை மக்களிடம் பரவுமென்றால், தாங்கள் பரிதாபமாக தோற்போம் என்பது, அந்த அவர்களுக்கு தெரிந்தே இருந்தது. அதனால், 'சே'வை யாருக்கும் தெரியாமல் கொன்று புதைத்துவிட வேண்டும் என்று விரும்பினார்கள்.

அவன் புதைக்கப்பட்ட இடம் கூட யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று நினைத்தார்கள். அப்படி செய்துவிட்டதாக சில காலம் நம்பவும் செய்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல் இல்லாமல், 'சே' இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் உடல் இவ்வுலகில் நடமாடிய காலத்தைவிட அவன் இன்று உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.அவர்களுக்கு 'சே' இன்னும் அச்சமூட்டுபவனாக இருக்கிறான்.  அவனின் கண்களைக் கண்டு அவர்கள் இன்னும் நடுங்குகிறார்கள். ஆனால், அந்த  அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் மீண்டும் 'சே' மீது ஒரு தாக்குதல் தொடுக்கிறார்கள். 'சே' குறித்த பிம்பத்தை மாற்றத் துடிக்கிறார்கள். அவனை சித்தாந்தமற்ற சாகசக்காரனாக சித்தரித்து, அவனை ஒரு பண்டமாக ஆக்க பார்க்கிறார்கள்.  சட்டை, தேநீர் கோப்பை, ஏன் பீர் பாட்டில் வரை அவன் படத்தை அச்சடித்து, அவன் முகத்தை காட்டி லாபம் சம்பாதிக்க துடிக்கிறார்கள். அவர்களின் நோக்கம், இதன் மூலம் 'சே' முன்மொழிந்த சித்தாந்தத்தை பரவலாக்குவது அல்ல. 'சே'வின் சித்தாந்தத்தை மங்கலாக்கி, அவனை ஒரு திரைப்பட சாகசக்காரனாக மட்டுமே சித்தரிப்பது.

சிட்னியை சேர்ந்த கட்டுரையாளர் ரேச்சல் ராபர்ட், தன் நெஞ்சில் இல்லாவிட்டாலும், மார்புகளில் சேகுவேரா வசிக்கிறார் என்னும் கட்டுரையில்  இவ்வாறாக எழுதுகிறார், " என்னுடைய சொந்த நகரமான பைரான்பேயில் சேகுவேரா வாழ்ந்து, மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார். நான் வழக்கமாக அவரை பார்க்க முடிகிறது. சில நேரங்களில் இரவில் ரயில்வே பாருக்கு வந்து குடித்துவிட்டு இசையைக் கேட்டுச் செல்கிறார். சில நேரங்களில் நண்பர்களோடு டீக்கடையில் நின்று அரட்டை அடிக்கிறார்."

இதில் ரேச்சல் குறிப்பிடுவது, ‘சே’ முகம் பதித்த டீ -சர்ட் அணிந்து இருந்தவர்களை.

'சே'வை ஒரு காலமும் வெல்ல முடியாது என்று முடிவுக்கு வந்த பின், 'சே'வை அவர்கள் உள்வாங்க துவங்கிவிட்டார்கள். 'சே'வை உள்வாங்குவது என்றால், அவன் சித்தாந்தத்தை அல்ல... அவனை ஒரு சாகசக்காரனாக சித்தரித்து பணம் பார்ப்பது மட்டும்தான் அவர்கள் நோக்கம். இதன் மூலம் 'சே' குறித்த பிம்பத்தை மாற்றிவிட முடியும் என்று நம்புகிறார்கள்.

நாம் அவர்களை புரிந்துகொள்வோம்...

'சே' நிச்சயம் ஒரு சாகசக்காரன் அல்ல... நிச்சயம் சித்தாந்தமற்ற சாகசக்காரன், மரணத்தைக் கண்டு அஞ்சுவான். ஆனால் 'சே', கொல்லப்படுவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன், அவருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவு கொடுத்து பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் பத்தொன்பது வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலை பார்த்துவிட்டு இவ்வாறாக சொல்கிறான், 'இதுபோன்ற சூழலில் எப்படி குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை  நான் பிழைத்திருந்தால் நான் உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்..' இப்படி நிச்சயம் வெறும் சாகசக்காரனால் பேச முடியாது.

'சே' தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறாக எழுதி இருக்கிறார், ''பலர் என்னை சாகசக்காரனாக அழைக்கலாம். ஒரு வித்தியாசம். தன்னுடைய நம்பிக்கைகளை உண்மையென்று காட்ட தன்னையே பணயம் வைக்கிற சாகசக்காரன்தான் நான்..."
 
ஆனால், அவர்கள் 'சே'வின் நம்பிக்கைகள் என்னவென்று மக்கள் தெரிந்துக் கொள்வதை விரும்புவதில்லை. அவர்களுக்கு 'சே'வும் ஒரு பண்டம்.  அவ்வளவே.

'விளைவுகளை ஏற்படுத்தாத வார்த்தைகள் முக்கியமற்றவை...' என்பார் சே. அவன் நம்பிக்கையையும், சித்தாந்தத்தையும் புரிந்துகொள்ளாமல் வெறும் டி-சர்ட் அணிந்துகொள்வதால் மட்டும் எதுவும் நடந்துவிடப்போவதில்லை.

எப்படி அவர்கள் நம்மைவிட 'சே'வை அதிகம் புரிந்து வைத்திருக்கிறார்களோ... அதன் மூலம்  'சே'வை  வீழ்த்த, உள்வாங்க துடிக்கிறார்களோ... நாமும் அதுபோல் அவர்களை அதிகம் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களை வெல்ல முடியும்!

சே குவேரா என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா இதே நாளில்தான் 1928 ம் ஆண்டு  அர்ஜென்டீனாவில் பிறந்தார்

- மு. நியாஸ் அகமது