ஆர்ணி: பிரதமர் மோடியிடம் டீ வாங்கி குடித்தவரை அழைத்து வந்தால், ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அதிரடியாக அறிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தன்னை டீக்கடைக்காரர் என்றும் சிறுவயதில் தந்தையுடன் சேர்ந்து ரயில்களில் டீ விற்றதாக கூறினார். பா.ஜ.க.வும் இதை முன்னிலைப்படுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. மேலும், டீக்கடைகளில் மோடியின் பிரசாரங்களும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பா.ஜ.க.வின் இந்த பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்து பதில் பிரசாரம் செய்தது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகளுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் 'சாய் கி சர்சா' என்ற தலைப்பில் பேரணி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பேசும்போது, ''நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி தன்னை டீக்கடைக்காரர் என்று மக்களிடம் பிரசாரம் செய்தார். விவசாயிகள் பிரச்னையை தீர்க்க முன்னுரிமை அளிப்பேன் என்றார். ஆனால் மோடி அரசு, விவசாயிகளை பாதுகாக்க தவறிவிட்டது.
மேலும், மோடி டீ விற்றதை யாராவது பார்த்தது உண்டா? அவரிடம் டீ வாங்கி குடித்தவர்கள் யாராவது இருந்தால் அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள், நான் ரூ.2 லட்சம் தருகிறேன். இதேபோல், பிரதமர் மோடி மேல்நிலைக் கல்விவரை மட்டும் படித்து இருப்பதாக ஒருமுறை சொன்னார்.
இப்போது அவர் தன்னை பட்டதாரி என கூறிக்கொள்வது வியப்பாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடன் யாரேனும் ஒருவர் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தேன் என்று கூறினால், கண்டிப்பாக அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு சன்மானம் அளிக்கப்படும்" என்றார் கிண்டலாக.