Published:Updated:

'வாஜ்பாய் செய்ததை, மோடி செய்வாரா?' -கேள்வி எழுப்பும் திருமாவளவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'வாஜ்பாய் செய்ததை, மோடி செய்வாரா?'  -கேள்வி எழுப்பும் திருமாவளவன்
'வாஜ்பாய் செய்ததை, மோடி செய்வாரா?' -கேள்வி எழுப்பும் திருமாவளவன்

'வாஜ்பாய் செய்ததை, மோடி செய்வாரா?' -கேள்வி எழுப்பும் திருமாவளவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

' காஷ்மீர் மக்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படியான தாக்குதல்கள் மூலம் காஷ்மீர் பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது' என கொந்தளிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

காஷ்மீர் மாநிலத்தில்,  ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் புர்ஹான் முகமதுவானி கடந்த 8-ம் தேதியன்று, போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து பத்து நாட்களாக காஷ்மீர் முழுவதும் கலவரம் பற்றி எரிகிறது. தெற்கு, வடக்கு காஷ்மீரை சேர்ந்த பத்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையும் மீறி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. போலீஸ் நிலையங்கள், சி.ஆர்.பி.எஃப் முகாம்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தீ வைத்து எரித்தனர். இதில், போலீஸ்காரர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதில், போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கணக்கான போலீஸார் காயமடைந்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை யினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துவிட்டது. குப்வாரா மாவட்டம் திகர், இக்பால் சந்தை, தார் மஹல்லா, மாலிக் மஹல்லா, ஜாமியா மசூதி உள்ளிட்டப்  பகுதிகளில் பாதுகாப்புப் படையினரை குறி வைத்து, கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஹூரியத் உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகள், இன்றுவரை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

" ராணுவத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலால், பெண்கள், குழந்தைகள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் எரிக்கப்பட்டு பொதுச் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டுள்ளன. ராணுவப் படையினரின் தாக்குதலில் சுமார் 100 பேர் கண் பார்வையை இழந்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" எனப் பேசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், " ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கொலை செய்யப்பட்டதிலிருந்து இந்தக் கலவரம் ஆரம்பமானது எனத் தெரிகிறது. காஷ்மீரில் நீண்டகாலமாக நடைமுறையிலிருக்கும் ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம், அங்கே நிலைகொண்டுள்ள ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் எல்லையில்லா அதிகாரத்தை வழங்குவதன் காரணமாக, தொடர்ந்து  அந்த மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன. தற்போது அந்தத் தாக்குதல்கள் உச்சநிலையை அடைந்துள்ளன.

காஷ்மீர் பிரச்னையை இப்படியான தாக்குதல்கள் மூலம் தீர்த்துவிட முடியாது. பகை நாட்டின் மீது படையெடுப்பு நடத்துவதுபோல, காஷ்மீர் மீது ராணுவத்தை ஏவுவது அந்த மக்களை மேலும் அந்நியப்படுத்துவதற்கும் பிரிவினைவாதிகளின் பிரசாரம் வலுப்பெறுவதற்குமே உதவும். வாஜ்பாய் பிரதமாக இருந்தபோது, காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகருக்குச் சென்று அங்கு அமைதியை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். தற்போதைய பிரதமர் மோடியும், வாஜ்பாய் வழியைப் பின்பற்றி காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். காஷ்மீர் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த ஜனநாயக விரோத வன்முறைத் தாக்குதல்களை மத்தியஅரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். படையினருக்கு வரைமுறையற்ற அதிகாரத்தை வழங்கும் ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும். காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்றார் கொந்தளிப்போடு.

-ஆ.விஜயானந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு