Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றதும் நல்ல சில சமிக்ஞைகள் தெரிந்தன. 'காலில் விழ வேண்டாம்' என்று கட்சிக்காரர்களுக்கு அறிவுறுத்தினார். 'எனக்காகப் போக்குவரத்தைத் தடை செய்வது கூடாது' என்று அறிவித்தார். 'வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்' என்றார். 'அம்மா நடமாடும் இடம் எல்லாம் எனக்குக் கோயில். அதனால், அவர் வந்து செல்லும் இடங்களில் நான் காலணி அணிய மாட்டேன்' என்ற அமைச்சரிடம் கண்டிப்பு காட்டினார். கட்-அவுட் கலாசாரமும் இதுவரை கண்ணுக்குத் தென்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதே சமயம், 'தனி மனித வழிபாடு' என்ற அருவருப்பான கலாசாரத்தை அ.தி.மு.க-வின் தொண்டர்களிடமும் அடியோடு ஒழிப்பது நல்லது.

'அம்மா ஆட்சி மறுபடி வர வேண்டும்' என்ற நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக, சில நாட்களுக்கு முன் ஒரு பெண்மணி தன் நாக்கைத் துண்டித்துக்கொண்டார். அந்தப் பெண்மணிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது மனிதாபிமான நடவடிக்கை. ஆனால், தலைமைச் செயலகத்துக்கே அவரை வரவழைத்து ஒரு லட்ச ரூபாய் பணம், அரசாங்க வேலை, மாதம்தோறும் வீட்டுக்கு வாடகை என்று ஜெயலலிதா சலுகைகளை அளித்த நோக்கம் என்ன?

பாதிக்கப்பட்டவருக்கான உதவியைச் சத்தம் இல்லாமல் செய்துவிட்டு, அவர் செய்த 'நேர்த்திக்கடன்' காரியத்தை வெளிப்படையாகவும் கடுமையாகவும் கண்டிப்பதுதான் முதல்வரின் அணுகுமுறையாக இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் போனதன் விளைவு - இன்னொரு கட்சித் தொண்டரின் மனைவி, தன் கையின் கட்டை விரலை வெட்டி காளி அம்மனுக்குக் 'காணிக்கை'யாக்கி, தலைவியின் கவனத்தை ஈர்க்கும் விபரீதத்தை அரங்கேற்றிவிட்டார்!

நாக்கை அறுப்பதில் தொடங்கி தீக்குளிப்பது வரையில் அப்பாவித் தொண்டர்கள் தங்களைச் சேதாரப்படுத்திக்கொள்ளும்போது எல்லாம், குற்ற உணர்வில் குறுகுவது தான் தலைவர்களுக்கான அழகு.

தியாகங்கள் போற்றத்தக்கவை... ஆனால், அர்த்தமற்ற ஆர்வக் கோளாறில் விளையும் இதுபோன்ற செய்கைகளை தியாகப் பட்டியலில் தலைமைகள் சேர்க்கவே கூடாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism