கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, மகாராஷ்டிர மாநிலம், தானே அருகே நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, 'மகாத்மா காந்தியின் படுகொலைக்கு, பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமே காரணம்' என்று குற்றம் சாட்டியதாகத் தெரிகிறது.
ராகுலின் இந்தப் பேச்சு குறித்து அதிருப்தியடைந்த, தானே மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ராஜேஷ் குண்டே, பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதனால், ராகுல் காந்தியை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்தார். இருப்பினும் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இம்மனுவைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'ராகுல் காந்தி மன்னிப்புக் கோரினால் வழக்கை முடித்துக் கொள்ளலாம்' என்ற யோசனையை முன்வைத்தது. ஆனால், ராகுல் காந்தி தரப்பு இந்த யோசனையை நிராகரித்தது.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போதும் நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடர்பான பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்காத பட்சத்தில் வழக்கு விசாரணையைச் சந்திக்க வேண்டும் என்று கூறினர். மேலும், வரும் 27 ம் தேதிக்குள் ராகுல் காந்தி, தமது தரப்பு வாதங்களை முன் வைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே ராகுல் காந்தியின் மேற்கூறிய கருத்துக் குறித்தும், அதற்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்தும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் சிலர் தங்களது கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
திருநாவுக்கரசு (காங்கிரஸ் தேசியச் செயலாளர்)
"இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி எழுத்துரிமையும், பேச்சுரிமையும் அனைவருக்கும் இருக்கிறது. முக்கியமாக அரசியல் தலைவர்களுக்கும் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தனது கருத்தை முன் வைத்தார். அதே நேரத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வெளியிட்டிருந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் ராகுல் காந்தி அவ்வாறு பேசினார். அத்தகையை கருத்துக்களை, வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில்தான் ராகுல்காந்தி பேசியதாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதைப் புகாராக எடுத்துக் கொள்வது சரியல்ல. இதனை அவதூறு வழக்காகவே நான் கருதுகிறேன்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றி ராகுல் காந்தி பேசியதற்கு, உச்ச நீதிமன்றம் ஒரு விதமான கருத்தைத்தான் முன் மொழிந்திருக்கிறதே தவிர, அது இறுதியான தீர்ப்பல்ல. இப்பிரச்னை தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி, சட்ட ரீதியாகவே காங்கிரஸ் கட்சியின் சார்பில் சரியான முடிவு எடுக்கப்படும். எத்தகைய பிரச்னைக்கும், ராகுல் காந்தி எடுக்கும் முடிவு எப்போதும் சரியான முடிவாகவே இருக்கும். இதுவரையில், அவர் அப்படியான முடிவைத்தான் எடுத்து வந்திருக்கிறார். இந்தப் பிரச்னையிலும் அவர் சரியான முடிவையே எடுப்பார் என நம்புகிறேன். முக்கியமாக, இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்ள வேண்டிய பிரச்னையாகவே நான் பார்க்கிறேன்".
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பா.ஜ.க. தலைவர்)
"ராகுல்காந்தி, இந்தியாவின் எழுதப்படாத இளவரசராகவே செயல்படுகிறார். ஒரு வழக்கில் தீர்ப்பு வந்த பிறகும், அதைப் பற்றி தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டே இருந்தால், நமது நாட்டில் நீதி மன்றத்திற்கு என்ன மதிப்பு இருக்கிறது. பிறகு அந்தத் தீர்ப்புக்கு என்ன மரியாதை இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் அவமரியாதையான இத்தகைய செயல்பாடுகள், நமது நாட்டை மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. முக்கியமாக ராகுல் காந்தியின் தொடர்ச்சியான செயல்பாடுகளும் பேச்சுக்களும், நமது நாட்டில் உள்ள எந்த நடைமுறையையும் மதிக்கவில்லை என்பதையே வெளிக்காட்டுகிறது. உச்ச நீதிமன்றத்தில், இவ்வழக்கைத் தகுதியின் அடிப்படையில் சந்திப்பதாக ராகுல் காந்தி சவால் விடுத்தார். ஆனால், ராகுல் காந்தியின் அவதூறு பேச்சுக்கு, அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. உண்மைகளை என்றுமே மறைக்க முடியாது என்பதற்கு, இவ்வழக்கே ஒரு சான்றுதான். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பல்வேறு சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தச் சமூக செயல்பாடுகளை மறைத்து, அந்த அமைப்பைப் பற்றி ராகுல் அவதூறு பரப்பி வந்த நிலையில், தவறான வரலாற்று ஆதாரத்தை மையப்படுத்தி அவர் பேசியிருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மேலும், நேர்மைக்கு எதிராக, யார் செயல்பட்டாலும், அதனைச் சட்டம் அனுமதிக்காது என்பது ராகுல் காந்தி விசயத்தில் நிரூபணமாகி உள்ளது".
- ரா.வளன்