Published:Updated:

முதல்வரின் சாந்தம்... பெருமாளின் காந்தம்!

டி.எல்.சஞ்சீவிகுமார்படம் : 'ப்ரீத்தி' கார்த்திக்

முதல்வரின் சாந்தம்... பெருமாளின் காந்தம்!

டி.எல்.சஞ்சீவிகுமார்படம் : 'ப்ரீத்தி' கார்த்திக்

Published:Updated:
##~##

.தி.மு.க-வின் தேர்தல்  வெற்றிக்குப் பல்வேறு காரணங்களை அடுக்கினா லும், ஜெயலலிதா தனது வெற்றிக்கு முக்கியக் காரணமாக நம்புவது பெருமாளை... சாட்சாத் அந்த ஏழுமலையானேதான்!

கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது, பிரத்யங்கரா தேவியை (காளி) தீவிரமாக வழிபட்டு வந்தார். காளி, உக்கிரத்தின் மறு வடிவம். கருணாநிதி கைது, அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை என அப்போதைய ஜெயலலிதாவின் நடவடிக்கைகளிலும் அது பிரதிபலித்தது. அப்போதைய ஆட்சி மாற்றத்துக்குப் பின் ஜோதிடர்கள் அளித்த அறிவுரை, 'பெருமாளை மனமுருக வேண்டுங் கள்’ என்பதுதான். அப்போது முதல்  பெருமாளின் தீவிர பக்தையாகிவிட்டார் ஜெயலலிதா. அது முதலே ஏக சாந்தம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல்வரின் சாந்தம்... பெருமாளின் காந்தம்!

அதைத் தொடர்ந்தே, கடந்த ஐந்து ஆண்டுகளாக 108 திவ்ய தேசங்களில், தமிழகத்தின் பெரும்பாலான பெருமாள் கோயில்களில் ஒவ்வொரு மாதமும் ஜெயலலிதாவின் மக நட்சத்திர நாள் அல்லது பௌர்ணமி அன்று அவர் சார்பில் திருமஞ்சனம் (அபிஷேகம்) மேற்கொள்ளப்பட்டது. இந்த விஷயத்தைத் தாமதமாக மோப்பம் பிடித்த தி.மு.க. அரசு, பல கோயில்களில் ஜெயலலிதா சார்பில் திருமஞ்சனம் நடத்தத் தடையே விதித்தது. அப்போதும், கோயில் பட்டர்களின் உதவியால், பல கோயில்களில் 'ஆஃப் தி ரிக்கார்ட்’ ஆக அரங்கேறியது திருமஞ்சனம்!

நடந்து முடிந்த தேர்தலில், ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டியிடக் காரணமும் பெருமாள் பக்திதான். அம்மாவின் ஜோதிடர், 'ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ கொண்டு செல்லப் படும் மூன்று பெருமாள் கோயில்களில் ஒன்றான ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டால் ஜெயம் நிச்சயம்’ என்று அடித்துச் சொன்னதாலேயே அங்கு போட்டியிட்டாராம்.

தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சத்தில் இருந்த சமயம் அது. அப்போது விஜயகாந்த்தை ஜெயலலிதா மாலை 7 மணிக்குச் சந்திப்பதாக இருந்தது. விஜயகாந்த்தும் தனது வீட்டில் தயாராகவே இருந்தார். ஆனால், தோட்டத்தில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. 'கொஞ்சம் பொறுங்கள்’ என்றார்கள். காரணம், அன்றைய தினம் சசிகலா நெல்லையின் நவ திருப்பதிகளுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்துவிட்டுத் திரும்பக் கால தாமதம் ஆனதுதான். அந்த ஒன்பது பெருமாள் கோயில்களிலும் கூட்டணிக்காக சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னரே, அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு விஜயகாந்த் - ஜெயலலிதா சந்திப்பு நிகழ்ந்தது!

விரதம் தவிர, தேர்தலுக்கு முன்னதாக அவர், அனுமனின் பெருமைகளைச் சொல்லும் சுந்தர காண்டத்தைத் தினம் இரண்டு ஸர்க்கங்களாக 28 நாட்கள் தொடர்ந்து படித்து இருக்கிறார். அதில், 41-வது ஸர்க்கத்தைத் தொடர்ந்து வாசித்தால், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். அதை நம்பிக்கையுடன் வாசித்தாராம் ஜெயலலிதா. அவரது விரதம் இப்போதும் தொடர்கிறது. நடுவில் அவரது உடல் மெலிந்து, சுகவீனம் அடையக் காரணமும் இந்த விரதம் தான். மருத்துவர்களின் அறிவுரைப்படி, சமீப மாதங்களாக சனி, புதன்களில் காலை ஒரு நேரம் மட்டும் விரதம் அனுசரிக்கும் அவர், மதியம் உப்பு இல்லாத பச்சரிசி சாதம், துளசித் தீர்த்தம் எடுத்துக்கொள்கிறார். இரவு கொஞ்சம் பழங்கள். அவ்வளவுதான்.

புதனும் வெள்ளியும் தோட்டத்தில் இருந்து பெருமாளுக்கு உகந்த சிகப்பு நிற இட்லிப் பூக்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் செல்கிறது. வெற்றிக்குப் பின் மதுரை அழகர் கோவிலில் இருந்து தினமும் விமானத்தில் திருமஞ்சனப் பிரசாதம் தோட்டத் துக்கு வருகிறதாம். ஜெயலலிதாவின் பெருமாள் சென்டிமென்ட், அமைச்சர்கள் தேர்விலும் இருக்கிறது என்கிறார்கள்.

தேர்வு செய்யப்பட்ட புதுமுக அமைச்சர்களில் பச்சைமால், செந்தில் பாலாஜி, ரமணா, செல்வி ராமஜெயம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா என திருமால் நாமம் கொண்டவர்கள் அநேகம்! அவ்வளவு ஏன்? ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, முதல் அரசுத் திட்ட விழாவான இலவச அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தது 'ஆழ்வார்’ பேட்டையில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism