Published:Updated:

திருப்பூருக்கு வந்த 'நைஜீரிய சோதனை!' -முதல்வரை சந்திக்கும் பனியன் முதலாளிகள்

Vikatan Correspondent
திருப்பூருக்கு வந்த 'நைஜீரிய சோதனை!' -முதல்வரை சந்திக்கும் பனியன் முதலாளிகள்
திருப்பூருக்கு வந்த 'நைஜீரிய சோதனை!' -முதல்வரை சந்திக்கும் பனியன் முதலாளிகள்

'திருப்பூரில் பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நைஜீரியர்களால் முதலுக்கே மோசம் வந்துவிட்டது' என கண்ணீர் வடிக்கின்றனர் பனியன் கம்பெனி உரிமையாளர்கள். ' இவர்களை அப்புறப்படுத்தாவிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். இதுதொடர்பாக, விரைவில் முதல்வரை சந்திக்க இருக்கிறோம்' என்கின்றனர் அவர்கள்.

'தென்னிந்தியாவின் டாலர் சிட்டி' என வர்ணிக்கப்படும் திருப்பூர் மாநகரில், பனியன் ஏற்றுமதி வியாபாரத்திற்காக வந்து தங்கினார்கள் நைஜீரியர்கள். காலப் போக்கில் அவர்களாகவே சொந்தமாக பனியன் கம்பெனி வைத்து நடத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டனர். இதுபற்றி நம்மிடம் பேசிய பனியன் கம்பெனி உரிமையாளர் ஒருவர்,

" எங்களின் கணக்கெடுப்பின்படி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் பனியன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் செயல்பாடுகள், ஒழுங்கீன நடவடிக்கைகளால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன. சமீபகாலங்களாக திருப்பூரில் தலைதூக்கியுள்ள தீவிரவாத நடவடிக்கைகளால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறோம். இவர்களுக்கு வாடகைக்கு இடம் கொடுப்பவர்களை சந்தித்து அறிவுறுத்தி வருகிறோம். அதையும் தாண்டி, அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு சிலர் இவர்களைத் தங்க வைக்கின்றனர். நைஜீரியர்களிடம் ஆர்டர் கொடுப்பவர்களிடம், ' உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பிழைப்பைக் கெடுக்க வேண்டாம்' எனச் சொல்லியும் சிலர் கேட்பதில்லை.

திருப்பூர், இடுவாய் கிராமத்தில் உள்ள பொதுமக்கள், ' நைஜீரியர்களுக்கு இடம் கொடுக்கும் கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். குடிநீர் இணைப்பு, மின் இணைப்பை துண்டிப்போம்' என்று கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி உறுப்பினர்களும், ' நைஜீரியர்களிடம் இருந்து திருப்பூரைப் பாதுகாக்க வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். வியாபாரிகளாக வந்தவர்கள், நிரந்தர முதலாளிகளாக மாறிவிட்டனர். அவர்களின் செயல்பாடுகளே விசித்திரமாக உள்ளன. தமிழக முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் விரிவாக.

இதன்பின்னர், சட்டசபைக் கூட்டத் தொடருக்கு முதல்நாள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பனியன் கம்பெனி உரிமையாளர்கள், " சட்டப்படி இவர்கள் தொழில் செய்யவே முடியாது. விதிகளை மீறி பனியன் கம்பெனிகளை நடத்தி வருகின்றனர். இவர்களை அப்புறப்படுத்தாவிட்டால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

வேறு தொழில்களை நோக்கிச் செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முதல்வரை சந்திக்க நேரம் வேண்டும். அவர் தலையிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும்" என வேண்டுகோள் வைத்தனர். அவர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், " இதுபற்றி முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன். உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுங்கள்" எனக் கூறினார். ' விரைவில் முதல்வரை சந்திப்போம்' என்கின்றனர் பனியன் கம்பெனி உரிமையாளர்கள்.

சாயப்பட்டறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் திருப்பூருக்கு வந்துள்ள நைஜீரிய சோதனையை, எப்படி எதிர்கொள்வது என தவித்து வருகின்றனர் ஏற்றுமதியாளர்கள்.

-ஆ.விஜயானந்த்