Published:Updated:

சாலை விபத்தில் தமிழ்நாட்டுக்கே முதலிடம்: தீர்வு சொல்கிறது கோல்டன் ஹவர்ஸ் குறும்படம்!

சாலை விபத்தில் தமிழ்நாட்டுக்கே முதலிடம்: தீர்வு சொல்கிறது கோல்டன் ஹவர்ஸ் குறும்படம்!
சாலை விபத்தில் தமிழ்நாட்டுக்கே முதலிடம்: தீர்வு சொல்கிறது கோல்டன் ஹவர்ஸ் குறும்படம்!

ந்தியாவில் நாளொன்றுக்கு சாலை விபத்தில் சராசரியாக 400 பேர் பலியாகிறார்கள். ஒரு மணி நேரத்தில் 57 விபத்துக்கள் நடக்கின்றன. அதில் 17 பேர் இறக்கிறார்கள். அவர்களில் 54 சதவீதம் பேர் 15 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள். மாலை 3 மணி முதல் 6 மணி வரையில் 17.5 சதவீத விபத்துக்கள் நடக்கின்றன. 2015ம் ஆண்டிலும் தமிழ்நாடுதான் விபத்து எண்ணிக்கையில் (69,059) முதலிடத்தில் இருக்கிறது.

மிகவும் வருந்தத்தக்க ஒரு புள்ளி விவரத்தைப் படிக்கும் போது ஒவ்வொருவர் மனமும் பதறும், அதுபோல பதறவிடும் புள்ளி விவரம்தான் இதுவும்.

நமக்கென்ன ஆச்சு என்று விபத்துகளைக்  கண்டும், காணாமலும் போய் விடுகிற மனிதர்களால் பறிபோகும் உயிர்கள், அப்படிக்  கண்டு கொண்டதால், கோர்ட், சாட்சி என்று நடையாய் நடக்கும் ஒரு மூதாட்டி என்று பலதரப்பட்ட விஷயங்களை மையப்படுத்தி, "பொன்னான நேரம் மற்றும் இனிய பயணம் என்ற  இரண்டு குறும்படங்களை எடுத்திருக்கிறார் முனைவர் சி.நெடுமாறன்.

நான்கு வகையான அடிப்படை "ஈ" விதிகளை (என்ஜினீயரிங், எஜூகேஷன், என்போர்ஸ்மென்ட், என்விரான்மென்ட்) பின்பற்றினால் போதும், சாலை விபத்து நிகழ வாய்ப்பே இருக்காது என்கிறார் முனைவர் சி.நெடுமாறன். செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மோட்டார் வாகன ஆய்வாளர் (தகுதிநிலை: 1) பணியில் இருக்கும் நெடுமாறன், ஒவ்வொரு நிமிடமும் சாலை விபத்தை தடுப்பது எப்படி? என்ற சிந்தனையை மையப்படுத்தியே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

வேலூர், வி.ஐ.டி.யில் எம்.டெக். பின்னர் எம்.பி.ஏ, சென்னை கிறித்தவக் கல்லூரியில் திரைக்கதை வசனம் அமைத்தலில் டிப்ளமோ, ஒய்.ஜி.பி. அகாடமியில் நடிப்புப் பயிற்சியில் டிப்ளமோ என்று பல பட்டங்களை, பட்டயங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் நெடுமாறன், எஸ்.ஆர்.எம். பல்கலையில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கடந்த ஆண்டு டாக்டரேட்(முனைவர் பட்டம்) வாங்கியுள்ளார்.

விகடனுக்காக அவரைச்  சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த அந்த சில நிமிடங்களிலேயே, விதிமுறைகளை மீறி சாலையைக்  கடந்து செல்கிற வாகனங்களைக் கண்களால் மடமடவென கணக்கெடுத்து விட்டார். "இப்படியெல்லாம் சாலையில் விதிகளை மீறி பயணம் செய்வது ரொம்பவும் தப்பாச்சுங்களே" என்று அந்த வாகன ஓட்டிகளுக்காக ஒரு குழந்தையைப் போல நம்மிடம் விசனப்பட்டுக் கொண்டவர், நான்கு வகையான சாலை பாதுகாப்புக்கான "ஈ" விதிகளை விளக்கினார்.

"என்விரான்மெண்ட் :
சாலைகளின் இருபுறமும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு கொடுக்கும் விதமான சுற்றுச்சூழல் அமைந்திருக்கக்கூடாது. சாலைகளையொட்டி நெருக்கமாக மரங்கள், மின்சார கம்பங்கள், டெலிபோன் கம்பங்கள் இருப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். சாலைகளின் குறுக்கே பிராணிகள் கடந்து செல்லும் சூழ்நிலை இருக்கக்கூடாது.

என்ஜினீயரிங் : சாலை பராமரிப்பில் முக்கியமான ஒன்று. மேடு பள்ளமில்லாத சாலைகள்தான். அந்த சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை, சாலை வளைவு பற்றிய அறிவிப்பு பலகை வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட்டிருக்க வேண்டும். வலது புறம், இடது புறம் திரும்பும் பாதையை அதேபோல் குறியீடு மூலம் அங்கே வைத்திருக்க வேண்டும்.

எஜூகேஷன்: சாலை விதிமுறைகளைப்  பற்றிய பாடம் கற்றல் என்பது மிகவும் அவசியம். அதில் முக்கியமானது, வாகனம் ஓட்டும்போது தேவைக்கு ஏற்ப கைகளால் 5 வகையான சிக்னல்களை காண்பித்தல் என்பது. ஒரு வாகனமானது மணிக்கு, எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் வருகிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நாம் நம்முடைய வாகனத்தை ஓட்ட வேண்டும், சாலையைக் கடக்க வேண்டும்.

என்போர்ஸ்மெண்ட்: சாலையில் செல்லும்போது, நாம் பின்பற்ற வேண்டிய செயலாக்க முறைகளாக, எதை எல்லாம் செய்யவேண்டும் என்றும், எதையெல்லாம் செய்யக்கூடாது என்றும் கவனத்தில் கொள்வது முக்கியம். காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டும் பாட்டு கேட்டுக் கொண்டும், செல்போனில் பேசியபடியும் செல்வதும் ஆபத்தைக் கொண்டுவரும். சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதலும் மிகவும் தவறானது..."
இதுதான் முனைவர் நெடுமாறன் சொல்லும் நான்கு வகையான "ஈ" ஆகும்.

"சாலையில் நடந்து செல்பவர்களால் 2 சதவீதமும், திடீர் வாகன பழுது காரணமாக 3 சதவீதமும் விபத்துகள் நடக்கின்றன. 5 விதமான கை சிக்னல்கள் இருப்பது வாகன ஓட்டிகளில் 31 சதவீதம் பேருக்குத்தான் தெரிகிறது. தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டில் வாகன எண்ணிக்கை 1,99,55,382 ஆக இருந்தது. இப்போது அது 2 கோடியை தாண்டிவிட்டது. சாலை விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பைத்  தடுக்க வாகனங்களில் முதலுதவிப் பெட்டி என்பது கட்டாயம் இருக்க வேண்டும். ஆம்புலன்சில் உயிர்க் காக்கும் அத்தியாவசிய கருவிகளும், மருந்துகளும், சிகிச்சை அளிப்பவர்களும் இருக்கவேண்டும். விபத்தே இல்லாத பயணத்தை மேற்கொள்ள நாம் ஒவ்வொருவரும் முயல வேண்டும்" என்று விபத்து குறித்து மளமளவென விளக்கிக் கொண்டே போகிறார் நெடுமாறன்.

"இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம்பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். 4 லட்சம் பேர் படுகாயம் அடைகின்றனர், இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகிறது. இந்தியாவில் 2009-ல் 4,21,600 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன, அதில் பலியானவர்கள் 1,26,896 பேர். காயம் அடைந்தவர்கள் 4,66,600- பேர். அதுவே 2013-ல் விபத்துகளின் எண்ணிக்கை 4,43,000 ஆக அதிகரித்து இறந்தவர்கள் எண்ணிக்கையும் 1,37,423 ஆக கூடிப் போயுள்ளது. காயமுற்றோர் எண்ணிக்கை 4,69,900 ஆக அதுவும் அதிகரித்திருக்கிறது.

2014-ல் தமிழகத்தில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 67,250 வாகன விபத்துக்களாக நடந்திருக்கின்றன. அதில் 14,165 பேர் இறந்திருக்கிறார்கள். 77,725 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். 34 சதவீத விபத்துகள் டூ-வீலர் ஓட்டுனர்களால் நிகழ்ந்திருக்கிறது. கார், ஜீப், டாக்சி, டெம்போ போன்ற வாகன விபத்துக்கள் 28 சதவீதமும், லாரிகளால் 14 சதவீதம். பஸ்களால் 11 சதவீத விபத்துகளும் நடந்திருக்கின்றன. விபத்து நடப்பதற்கு வாகன ஓட்டிகளே முக்கிய காரணமாக (96 சதவீதம்) இருக்கிறார்கள். சிக்னலை மதிக்காமல் செல்வது, குறுக்கே சென்று தவறுதலாகச்  சென்று விட்டு திரும்புவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது போன்றவை விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கின்றன" என்று மேலும் அதிர வைக்கிறார். நெடுமாறன்.

"என்னதான் இதற்கு தீர்வு, உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்" என்றேன்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்தால்தான் விபத்துக்களைக்  கட்டுப்படுத்த முடியும். பள்ளிப்  பருவத்தில் இருந்தே சாலைப்  பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வைப்  பாடமாகப் பயிற்றுவித்து வந்தால் விபத்துக்களின் எண்ணிக்கையை வெகுவாகக்  குறைத்துவிடலாம்’’ என்றார், முனைவர் சி.நெடுமாறன்.

ந.பா.சேதுராமன்.

அடுத்த கட்டுரைக்கு