Published:Updated:

'சசிகலாவை அறைந்தாரா முதல்வர்?!' - முதல்வரையே முந்திய பின்னணி

'சசிகலாவை அறைந்தாரா முதல்வர்?!' - முதல்வரையே முந்திய பின்னணி
'சசிகலாவை அறைந்தாரா முதல்வர்?!' - முதல்வரையே முந்திய பின்னணி

'சசிகலாவை அறைந்தாரா முதல்வர்?!' - முதல்வரையே முந்திய பின்னணி

.தி.மு.க தலைமையின் நடவடிக்கை பாய்வதற்கு முன்பே, மாநிலங்களவையில் முந்திக் கொண்டு விட்டார் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. ' என் தலைவர் என்னை அறைந்தார்' என அவர் பேசிய பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ' பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றிவிட்டார் சசிகலா' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் நடந்த மோதலையடுத்து, கார்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. அதேபோல் அறிவாலயத்திலும் சிவாவை அழைத்து விசாரணை நடத்தினார் தி.மு.க தலைவர் கருணாநிதி. தி.மு.கவின் விசாரணை பாணியும் அ.தி.மு.கவின் விசாரணை பாணியும் எதிர் எதிர் துருவங்கள் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கடந்த ஞாயிற்றுக் கிழமை போயஸ் கார்டனில் நடந்த விவகாரத்தைப் பற்றி மாநிலங்களவையில் பேசிய சசிகலா, ' என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. தனி அறையில் ஒரு நாயைப் போல் அடைத்து வைக்கப்பட்டேன். எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டேன்' என அதிர வைத்தார். சசிகலாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், தி.மு.க எம்.பி கனிமொழி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

மாநிலங்களவையில் சசிகலா பேசிக் கொண்டிருந்த தகவலைக் கேள்விப்பட்ட பிறகே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதன்பின்னரும் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார் சசிகலா. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர் ஒருவர், "டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க எம்.பியுடன் தாக்குதல் ஈடுபட்டதற்கு மிக முக்கியக் காரணமே, சிவாவுடன் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறுதான். அது தொடர்பாக சசிகலா சிவாவைத் தொடர்பு கொள்ளும்போதெல்லாம், 'கால் யூ டுமாரோ' என்றே பதில் கொடுத்து வந்தார் சிவா. இதனால் ஆத்திரமான சசிகலா, விமானநிலையத்தில் சிவாவைப் பார்த்ததுமே, 'வேர் ஈஸ் மை மணி?' என்று கேட்டுத்தான் அவருடைய கன்னத்தில் அறைந்தார். இந்தத் தகவல் தி.மு.க. புள்ளி ஒருவரின் உதவியாளர் மூலமே வெளியில் கசிந்தது. இல்லாவிட்டால் இந்தத் தாக்குதல் வெளி உலகிற்குத் தெரியாமலேயே போயிருக்கும். இதற்கு முன்பு சிவாவுடன் இருப்பதாக வெளியான புகைப்படங்களால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. அப்போதே அவரை எச்சரித்திருந்தார் தம்பிதுரை.

கட்சியின் மகளிரணிச் செயலாளர், மேயர், ராஜ்யசபா எம்.பி என அனைத்து பதவிகளும் சசிகலாவுக்குக் கிடைப்பதற்கு மிக முக்கியக் காரணமே தம்பிதுரைதான். விமான நிலைய தகராறு என செய்தி வெளியானதுமே, முதல்வர் கடும் கோபமடைந்தார். தம்பிதுரையை அழைத்து, ' என்ன நடக்குது?' எனக் கேட்டு கடிந்து கொண்டார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கார்டனுக்குள் வரவழைக்கப்பட்டார் சசிகலா. உள்ளே வந்த அவரிடம் பூங்குன்றன், ' மேடம்...ரொம்ப கோபமா இருக்காங்க. ரிசைன் லெட்டர் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க' எனச் சொல்ல, ' என்னுடைய தனிப்பட்ட விவகாரம் வேறு. அரசியல் பாதை வேறு. தவறே செய்யாத நான் எதுக்கு ரிசைன் பண்ணனும்' என பதில் கொடுத்திருக்கிறார். இதனால் கடுப்பான தம்பிதுரை சில வார்த்தைகளை சசிகலாவை நோக்கிப் பேசினார். இதையடுத்து, ஒரு வெற்றுத் தாளைக் கொடுத்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கிவிட்டனர்.

கார்டனைப் பொறுத்தவரையில், எவ்வளவு பெரிய நிகழ்வு என்றாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதல்வர் யாரையும் சந்திக்க மாட்டார். தவிர்க்க முடியாத சந்திப்பு என்றாலும், விரும்பினால் மட்டுமே சந்திப்பு நடக்கும். இது கட்சிக்காரர்கள் அனைவருக்கும் தெரியும். முன்பு ஒருமுறை அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து புலமைப்பித்தனை நீக்கும் முடிவுக்கு அம்மா வந்தபோது, ஒரு ஞாயிற்றுக் கிழமைதான் அவருக்கு அழைப்பு வந்தது. அப்போதே அவர், ' ஞாயிற்றுக்கிழமை அம்மா யாரையும் சந்திக்க மாட்டார். அழைப்பு வருகிறது என்றால் ராஜினாமா கடிதத்தை கொண்டு போவதுதான் சரி' என எழுதிக் கொண்டு போனார். அப்போது இண்டர்காமில் மட்டுமே முதல்வர் பேசினார். சசிகலா விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது பூங்குன்றனும் தம்பிதுரையும்தான். கார்டனில் சசிகலாவை முதல்வர் சந்திக்கவே இல்லை. தேசிய அளவில் தனக்கு அனுதாபத்தை சம்பாதித்துவிட்டார் சசிகலா" என்றார் விரிவாக.

திருச்சி சிவாவுடன் மன்னிப்பு, கனிமொழியின் ஆதரவு பேச்சு என அ.தி.மு.கவின் எதிர் முகாமுக்குத் தூதுப் படலத்தைத் தொடங்கிவிட்டார் சசிகலா. ' திருச்சி சிவா அடி வாங்கிய செய்தி மறைந்து போய், முதல்வர் அடித்தார்' என்ற செய்தி முன்னுக்கு வந்துவிட்டது. முதல்வரையே முந்திக் கொண்டு சசிகலா தொடுத்த குற்றச்சாட்டை முதல்வர் உள்பட அ.தி.மு.கவினர் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

-ஆ.விஜயானந்த்

அடுத்த கட்டுரைக்கு