Published:Updated:

'அதனால்தான் எனது மகளை இங்கேயே சேர்த்தேன்...!' - அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இவர் முன்னுதாரணம்

'அதனால்தான் எனது மகளை இங்கேயே சேர்த்தேன்...!'  - அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இவர் முன்னுதாரணம்
'அதனால்தான் எனது மகளை இங்கேயே சேர்த்தேன்...!' - அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இவர் முன்னுதாரணம்

'அதனால்தான் எனது மகளை இங்கேயே சேர்த்தேன்...!' - அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இவர் முன்னுதாரணம்

வ்வளவு சீக்கிரத்தில் யாரும் அந்த முடிவை எடுத்து விடமாட்டார்கள். ஆனால் தலைமையாசிரியர் மரியதாஸ் எடுத்தார். இன்று ஊரே அவருக்கு பின்னால் அணிவகுக்கத் துவங்கிவிட்டது. ஆசிரியர் வர்க்கமே அவருடைய செயலைப் பார்த்து யோசிக்க ஆரம்பித்துள்ளது. பல அமைப்பினரும் அவரை பாராட்டுகின்றனர். அப்படி என்னதான் செய்தார்? ஆங்கிலப்பள்ளியில் படித்து வந்த தன் குழந்தையை, தான் பணியாற்றுகிற அரசுப்பள்ளியில் சமீபத்தில் சேர்த்துள்ளார். 'இது ஒரு அதிசயமா' என்று நீங்கள் கேட்கலாம். இன்றைய காலத்தில் இது அதிசயம்தான்....!

இன்று தமிழகத்தில்,  அரசுப்பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இவர்களுக்கு நல்ல ஊதியத்தையும், சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. தங்கள் நலனுக்காக இன்னும் பல கோரிக்கைகளை அரசிடம் தொடர்ந்து வைத்து வருகிறார்கள். கல்விக்கண்ணை திறக்கும் உன்னத பணியை மேற்கொள்ளும் அவர்களுக்கு, அரசு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அதேநேரம், ' அரசிடமிருந்து எல்லா சலுகைகளையும் எதிர்பார்க்கும் இந்த ஆசிரியர்களில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்...' என்ற ஆதங்கம் அரசுப்பள்ளிகளின் முன்னேற்றத்துக்காக குரல் கொடுப்பவர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

90 சதவீத ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில்தான் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கிறார்கள் என்று ஆசிரியர் சங்கத்தினரே கூறுகிறார்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை நம்பும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது பொதுமக்களுக்கு ஒரு ஆற்றாமை இருக்கத்தான் செய்கிறது. இதனால், அரசுப்பள்ளிகளை நகரத்திலுள்ளவர்கள் மட்டுமல்ல, கிராமப்புற பெற்றோர்களும் வெறுத்து ஒதுக்கும் அவலம். ஊரின் எல்லா பக்கமும் ஆங்காங்கே முளைத்துள்ள ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்ப துவங்கி விட்டார்கள். மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால், பல அரசுப்பள்ளிகளை இழுத்து மூடிக்கொண்டிருக்கிறார்கள்.கிராமங்களில் புதிதாக ஒரு அரசுப்பள்ளியை கொண்டு வருவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஏகப்பட்ட விதிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு ஊர்க்காரர்கள் ஒற்றுமையாக அலைந்து திரிந்து பலபேரை கெஞ்சி, மிகவும் சிரத்தை எடுத்து அரசு பள்ளிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பள்ளிகளில், மாணவர் சேர்க்கை இல்லாத சூழலை அதே கிராம மக்களே உருவாக்கும் நிலையை தனியார் பள்ளிகள் மீதான மோகம் ஏற்படுத்திவிட்டது. இது தனியார் பள்ளிகளின் வருமானத்துக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

அப்படி ஒரு பள்ளிதான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகிலிருக்கும் சந்திரன்பட்டியில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. 1972-ல் துவக்கப்பட்ட இப்பள்ளியில், ஐந்தாம் வகுப்புவரை உள்ளது. சமீப காலமாக மாணவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 19 மாணவர்களுடன் காத்தாட ஆரம்பித்தது. எண்ணிக்கை குறைந்தால் நமக்கென்ன, இந்த பள்ளியை மூடினால், அடுத்த ஊர் பள்ளியில் வேலை என்று மாதம் பிறந்தால் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, பெரும்பாலான ஆசிரியர்களைப்போல எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் வேலையை பார்த்து கொண்டிருக்கலாம். ஆனால், இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியதாசுக்கு மனசு கேட்கவில்லை.

பள்ளியில் முன்புபோல மாணவர்களை அதிகப்படுத்த வேண்டுமென்று நினைத்தார். அதற்கு அவர் என்ன செய்தார் என்பதை நம்மிடம் அவரே கூற ஆரம்பித்தார்.

'' பெருசா ஒண்ணும் நான் செஞ்சிடலை. ஆரம்பத்துலயே என் மகளை அரசுப்பள்ளியில் சேர்க்கத்தான் எண்ணியிருந்தேன். மற்றவர்களைபோல நானும் உற்றார், உறவினர்களின் நெருக்கடிக்கு ஆளாகி ஆங்கிலப் பள்ளியில் கடந்த வருடம் சேர்த்தேன். இப்போது நான் பணியாற்றும் பள்ளியிலேயே சேர்த்த பின்புதான் திருப்தியாக உள்ளது. என்னை பார்த்து இந்த ஊர்மக்கள், ஆங்கிலப் பள்ளியில் படித்த தங்கள் பிள்ளைகளையும் இப்பள்ளியில் சேர்த்து கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளார்கள்.


எனக்கு சொந்த ஊர் அ.தெக்கூர். காளையார்கோயில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றேன். 2000-ம் ஆண்டு ராமேஸ்வரம் வேர்க்கோடு பள்ளியில் முதல் பணி நியமனம்.  அங்கிருந்து திருப்பத்தூர் பள்ளியில் பணியாற்றிவிட்டு, 2012-ல் இப்பள்ளிக்கு வந்தேன். வந்த புதிதில் ஓரளவு மாணவர்கள் இருந்தார்கள். கடந்த இரண்டு வருடங்களாக பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் டி.சி.யை வாங்கி, பக்கத்து ஊர்களில் இருக்கும் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்க துவங்கினார்கள். 20 பிள்ளைகள் தனியார் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில்,  மிச்சம் 19 மாணவர்கள் மட்டும் இங்கு இருந்தார்கள்.

இந்தாண்டு ஒன்றாம் வகுப்பிலும் புதிதாக யாரும் சேர்க்கவில்லை. இந்த கிராமத்தில் மற்றவர்களை பார்த்து பார்த்து சாதாரண மக்களும், தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தார்கள். அரசு கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு அனைத்து வகையான கல்வி உபகரணகளும் வழங்கி, சீருடை, உணவும் கொடுத்து உள்ளூரிலயே பள்ளியை கொடுத்தும், ஆங்கில கல்வி மோகத்தில் பக்கத்து ஊர்களுக்கு ஆபத்தான வாகனங்கள் மூலம் பிள்ளைகளை அனுப்பி, பொருளாதாரத்தை வீண் செய்கிறார்களே என்ற வருத்தம் ஏற்பட்டது.அது மட்டுமில்லாமல், கற்பிக்கும் முறையை நன்றாக பெற்ற தகுதியான ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் இருக்கிறார்கள். அரைகுறையான ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கும் தனியார் பள்ளிக்கு அனுப்புவது, மாணவர்களின் எதிர்காலத்துக்கு உதவாது. இதை நான் வீடு வீடாக சென்று ஊர் மக்களிடம் எடுத்துச் சொன்னேன். ஊரிலுள்ள பெரியவர்களிடம் சொன்னேன். அவர்கள் அதை எடுத்துக்கொள்ளும் மனநிலையில் இல்லை. மாணவர் எண்ணிக்கை குறைந்தால் பள்ளியை அரசு மூடிவிடும், ஒரு அரசுப்பள்ளியை கொண்டு வருவது மிகவும் சிரமம் என்றும் எடுத்துச் சொன்னேன். ஆனாலும் மக்களுக்கு தனியார் பள்ளி மோகம் போகவில்லை.

இதற்கு என்ன செய்யலாமென்று யோசித்தபோதுதான், மாற்றத்தை என்னிடமிருந்து துவங்கலாமென்று நினைத்தேன். பக்கத்தில் கீழ்செவல்பட்டியில் வசிக்கும் நான், அங்குள்ள ஆங்கிலப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று கொண்டிருந்த என் மகள் பெர்லினாவை நிறுத்தினேன். என் பள்ளியில் அட்மிஷன் போட்டேன். என் மனைவிக்கு இதில் உடன்பாடென்றாலும், உறவினர்கள் சிலர் வேண்டாமென்றார்கள். அவர்களை பொறுத்தவரையில் அரசு பள்ளியில் பயில்வதை மோசமாக நினைக்கவில்லை, அப்பா வேலை செய்யும் பள்ளியில் பிள்ளையும் படித்தால் ஆர்வமாக படிக்காது, அசால்டாக இருக்கும் என்று அச்சப்பட்டார்கள்.

எல்லாப்பிள்ளைகளையும் போலத்தான் இங்கு அவளும். என் மகளை இங்கே சேர்ததவுடன், பல பெற்றோர்கள் ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தங்கள் பிள்ளைகளை இங்கே சேர்க்க துவங்கினார்கள். இதுவரை 19 பிள்ளைகள் ஒன்று முதல் ஐந்தாம்  வகுப்பு வரை சேர்த்துள்ளனர். இவ்வூரை சேர்ந்த இன்னமொரு 30 பிள்ளைகள், ஆங்கிலப் பள்ளியில் பயின்று வருகிறார்கள். அவர்களில் பாதியளவு வந்துவிட்டால் இன்னும் மகிழ்ச்சி" என்றார்.

இப்பள்ளியில் தலைமையாசிரியர் மரியதாசுடன், மற்றொரு பெண் ஆசிரியரும் உள்ளார். இவர்களுடன் தற்காலிக ஆசிரியர் ஒருவரை நியமித்து ஊதியத்தை இவரே வழங்குகிறார். ஆரம்பத்தில் சுகாதாரமற்று, பாதுகாப்பற்று கிடந்த பள்ளி வளாகத்தை,  இவர் வந்தபின், தன் சொந்த முயற்சியில் சீர் செய்து செடி, கொடிகள் அமைத்து தூய்மையாக மாற்றி வைத்திருக்கிறார். அங்கு படிக்கும் சில பிள்ளைகளை புத்தகம் வாசிக்க சொன்னோம். நன்றாக தங்கு தடையில்லாமல் வாசிக்கிறார்கள். அருமையாக ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்களுடைய நடை, உடை அனைத்தும் ஆச்சர்யப்படும்படி இருந்தது.

இதைத் தொடர்ந்து ஊர்க்காரர்கள் சிலபேரிடம் பேசியபோது தமிழ்செல்வி என்பவர், ''ஆரம்பத்துல இங்க படிச்சிக்கிட்டிருந்த என் பிள்ளையை, மத்த ஆளுங்க சேர்த்ததை பார்த்து பக்கத்து ஊருல இருக்குற மெட்ரிக்குலேசன் பள்ளியில சேர்த்துவிட்டேன். அங்க என் பிள்ளைக்கு படிப்பு ஒண்ணும் சரியா ஏறலை. அடுத்தவங்க சொன்னதுக்காக சேர்த்தேன். நம்ம ஊரு பள்ளிக்கூடத்துல, தலைமை ஆசிரியரே தன் புள்ளையை சேர்த்ததை பார்த்து ஊர் பள்ளிக்கூடத்தோட மதிப்பு தெரிஞ்சது. அதற்கு பின்புதான், யார் என்ன சொன்னாலும் கவலை இல்லைனு, இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல படிச்ச என் புள்ளைய இங்க கொண்டு வந்து மூணாவதுல சேர்த்துட்டேன்" என்றார்.

மணி மற்றும் பஞ்சவர்ணம் ஆகிய இரண்டு பேரும், ''வெளியூர் இங்கிலீஷ் ஸ்கூல்ல படிச்ச புள்ளைங்க, எழுத்துக் கூட்டி படிக்ககூட தெரியாம இருந்தாங்க. மறுபடி இங்க சேர்த்தவுடனே நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இது உண்மையான்னு எங்க ஊர்க்காரங்க, செக் பண்ணி பார்த்தாங்க. அதுக நல்லா படிக்கிறதை பார்த்து அவங்க புள்ளைகளையும் கொண்டு வந்து சேர்த்தாங்க. நம்ம ஊரு பள்ளிக்கூடத்தை விட்டுக்கொடுக்க கூடாதுன்னு முடிவுக்கு வந்தோம், இதுக்கெல்லாம் முக்கிய காரணம் மரியதாஸ் சார்தான். அவர்தான் இந்த பள்ளிக்கூடத்தை நல்லா கொண்டு வரணும்னு ஆசைப்பட்டு எல்லா முயற்சியும் எடுக்கிறாரு. அடுத்து எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடமா இதை மாத்தனும்" என்றனர்.

சந்திரன்பட்டி கிராம சேவினிப்பட்டி ஊராட்சித்தலைவி சந்திரா கூறும்போது, ''ஆங்கில பள்ளிக்குபோன பிள்ளைகளெல்லாம் மறுபடியும் எங்க பள்ளிக்கு வர்றாங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இதுக்கு காரணம் தலைமையாசிரியர்தான். இனிமே எங்க பள்ளியை பெரிய பள்ளியாக மாத்த முயற்சிப்போம்" என்றார்.

சமீபகாலமாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டேபோனதால், பல துவக்கப்பள்ளிகளை மூடும் முடிவிற்கு கல்வித்துறை வந்துள்ளது. அப்படியொரு நிலை இங்கு வரக்கூடாது என்பதற்கு பெரும் முயற்சி எடுத்து அதற்கு,  தானே முன்னுதாரணமாக திகழ்கிறார் தலைமையாசிரியர் மரியதாஸ்.

இதுபோல அனைத்து அரசு ஆசிரியர்களும் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்த்தால் அது தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்துள்ள பெற்றோர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமே என்று சிவகங்கை மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயலாளர் இளங்கோவிடம் கேட்டபோது, ''தமிழகத்தில் அரசு ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியிலயே சேர்க்க வேண்டுமென்ற சட்டத்தை அரசு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு ஆசிரியர்கள் மீது மரியாதையும், அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கையும் வரும்.

அதன்பிறகு தனியார் ஆங்கில பள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிடும். ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்வி  அரசுப்பள்ளியை நம்பித்தான் உள்ளது. அவர்களுக்கு நல்ல ஆரம்பக் கல்வியை கொடுக்கக்கூடிய இடம் இது. ஆசிரியர் மரியதாஸ் போல ஒரு மாற்றத்தை ஆசிரியர்கள் தங்களிடமிருந்து துவங்கலாம். நல்லாசிரியர் விருது பெற இதை ஒரு தகுதியாக வைக்கலாம்" என்றார்.

- செ.சல்மான்
படங்கள்: சாய்தர்மராஜ்

அடுத்த கட்டுரைக்கு