Published:Updated:

பதக்கத்துக்கு உயிரைப் பணயம் வைக்கிறாரே... யார் இந்த தீபா கர்மகர்?

Vikatan Correspondent
பதக்கத்துக்கு உயிரைப் பணயம் வைக்கிறாரே... யார் இந்த தீபா கர்மகர்?
பதக்கத்துக்கு உயிரைப் பணயம் வைக்கிறாரே... யார் இந்த தீபா கர்மகர்?

ந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகர், அந்தரத்தில் தலைகீழாகப் பறக்கும் படம், இன்று பெரும்பாலான பத்திரிகைகளின் முதல் பக்கத்தை அலங்கரித்துள்ளன. தனது 23 வது வயதில் அடியெடுத்து வைக்கும் தீபாவுக்குக் கிடைத்த பிறந்த நாள் பரிசு இது. இந்தியா முழுக்க இன்று தீபா கர்மகர்தான் ‘talk of the nation'!

இத்தனைக்கும் அவர் இன்னும் ஒலிம்பிக்கில் பதக்க கணக்கை துவங்கவில்லை. ஆனால், இந்தியாவின் வடகிழக்கு மாவட்டத்திலிருந்து வந்து, இந்தியாவுக்கு அந்நியமான ஜிம்னாஸ்டிக்கில், ஒலிம்பிக் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாவது என்பது... சில போட்டிகளின் தங்கப் பதக்கத்தை மிஞ்சிய சாதனை! 

ரியோ ஒலிம்பிக் போட்டியில், ஜிம்னாஸ்டிக்கில் ப்ரொடுனோவா (produnova) வால்ட் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் தீபா. கரணம் தப்பினால் மரணம் என்பதால், ‘ப்ரொடுனோவா’ பிரிவை பெரும்பாலானா வீரர்கள் தேர்ந்தெடுக்க தயங்குவர். ஓடி வந்து ஸ்பிரிங்போடு மீது கை வைத்து, அந்தரத்தில் இரண்டு முறை பல்டி அடித்து, தடுமாறாமல் கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று பிசகினாலும், கை கால் ஒடியலாம், எழுந்து நடக்க முடியாத அளவுக்கு முடங்க நேரிடலாம், ஏன்... மரணமே நிகழலாம். அதனால்தான் ‘எனக்கு உயிர் பயம் இருக்கிறது. வாழ்க்கையோடு விளையாட விரும்பவில்லை’ என, மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் சைமன் பைல்ஸ்,  ‘ப்ரொடுனோவா’ பிரிவை தேர்ந்தெடுக்க தயங்கினார். அவர் மட்டுமல்ல பெரும்பாலான மேற்கத்திய வீராங்கனைகளின் நிலைப்பாடும் இதுவே.

ரஷ்ய வீராங்கனை எலினா ப்ரொடுனோவா,  1999ல் முதன்முறையாக இந்தப் பிரிவை அறிமுகப்படுத்தியதன் நினைவாக, இந்த வால்ட்டுக்கு ‘ப்ரொடுனோவா’ என்று பெயர். இதுவரை ஐந்து பேர் மட்டுமே இப்பிரிவில் வெற்றி அடைந்துள்ளனர். அதில் தீபாவும் ஒருவர். ‘ப்ரொடுனோவா வால்ட்தான் என் வாழ்க்கை. இதில் வெற்றி அடையவில்லை எனில், நான் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையே அல்ல’ என அடம்பிடித்து இப்பிரிவை தேர்ந்தெடுத்ததற்கு, இன்று பலன் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 14ல் ‘ப்ரொடுனோவா’ பிரிவின் ஃபைனல். அதில் தீபா பதக்கம் வெல்ல வேண்டும் என்பது ஒட்டுமொத்த தேசத்தின் விருப்பம். ஒருவேளை பதக்கம் நழுவினாலும், ‘பரவாயில்லை. இந்தளவுக்கு வந்ததே போதும்’ என்பதே இந்திய ரசிகர்களின் தற்போதைய மனநிலை.

பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டி ஒளிபரப்பாக உள்ளது என்றதுமே, ஒட்டுமொத்த ரசிகர்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் முன் ஆஜர். ஆனால் தீபா வால்ட் பிரிவில் சாகசம் செய்து கொண்டிருந்தபோது,  பிரேசில், ரஷ்ய வீராங்கனைகள் ‘அன் ஈவன் பாரில்’ தொங்கிக் கொண்டிருந்ததை ஒளிபரப்பியதால் ரசிகர்கள் கடுப்பாகினர். ‘ட்விட்டரில்’ சிலர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு மென்சன் செய்து திட்டினர். ‘ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் கொடுப்பதைத்தான் நாங்கள் ஒளிபரப்ப முடியும்’ என விளக்கம் அளித்தது சேனல் தரப்பு. ஒலிம்பிக்கில் 52 ஆண்டுகளுக்குப் பின் ஜிம்னாஸ்டிக்கில் இந்தியர் பங்கேற்பதும், அதுவும் பெண் என்பதும், ‘டெத் ஆப் வால்ட்’ எனும் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதும், ஜிம்னாஸ்டிக்கை பார்க்க நள்ளிரவு கடந்தும் ரசிகர்களை விழித்திருக்க வைத்ததும் நிச்சயம் தீபாவின் சாதனைகளே.

இன்று இவ்வளவு புகழ் கிடைக்கும் எனத் தெரிந்திருந்தால், அன்று இந்த ஜிம்னாஸ்டிக்கை வெறுத்திருக்க மாட்டார். ‘ஆம், ஐந்து மணிக்கு எழுவதையும், அதிகாலையில் ஜிம்னாஸ்டிக் அரங்கில் நிற்பதையும் வெறுத்தேன்’ என்றார் தீபா ஒருமுறை. தீபாவின் தந்தை துலால் கர்மகர்,  இந்திய விளையாட்டு ஆணையத்தில் பளுதூக்குதலுக்கான பயிற்சியாளர். அப்பாவின் கட்டாயத்தின் பேரில், வேண்டா வெறுப்பாக ஜிம்னாஸ்டிக் அரங்கில் நுழைந்த தீபாவுக்கு, நாளடைவில் ஜிம்னாஸ்டிக் ரொம்பவே பிடித்து விட்டது. ’பயிற்சியை முடிக்காமல் கேக் வெட்ட மாட்டேன்’ என பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு ஜிம்னாஸ்டிக் மீது காதல்.

தீபாவுக்கு இது முதல் ஒலிம்பிக் என்பதால் பதற்றத்துடன் இருந்தார். அடிப்படையில் அவர் அப்படிப்பட்டவர் அல்ல. ‘பிடிவாதக்காரி. ஆனால், சிறு வயதிலேயே மெச்சூரிட்டியுடன் இருந்தாள்’ என்கிறார் தீபாவின் அக்கா பூஜா. துலால் கர்மகருக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் பூஜாவை ஆங்கில வழிக் கல்வி பள்ளியிலும், தீபாவை வங்க மொழிப் பள்ளியிலும் சேர்த்திருந்தார் துலால். ‘என்னை ஏன் அக்காவைப் போல,  இங்கிலீஷ் மீடியத்தில் சேர்க்கவில்லை’ என தீபா பின்னாளில் தன்னிடம் சண்டைக்கு வரக் கூடும் என துலால் பயந்தார். இதை நினைத்தே பல நாட்கள் தூக்கம் தொலைத்தார். ஆனால் ‘ இனி தனக்கு ஜிம்னாஸ்டிக்தான் உலகம்’ என அப்போதே தெளிவாக முடிவெடுத்து, தந்தையை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார் தீபா.

இன்று ப்ரொடுனோவா வால்ட்டை அநாயசமாக கடக்கும் தீபாவின் ஆரம்ப கால ஜிம்னாஸ்டிக் வாழ்வு,

அவ்வளவு பிரகாசமாக இல்லை. ஆரம்பத்தில், தற்போதைய பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தியின் மனைவி சோமா, அகர்தலாவில் உள்ள சிறு பயிற்சி மையத்தில் வைத்து, தீபாவுக்கு ஜிம்னாஸ்டிக்கில் பாலபாடம் எடுத்தார். தீபாவின் அர்ப்பணிப்பை பார்த்து ‘இனி, இந்தப் பொண்ணுக்கு நானே சொல்லிக் குடுக்குறேன்’ என பிஸ்வேஸ்வர் சார்ஜ் எடுத்துக் கொண்டார். " ஆரம்பத்தில் தீபாவை நான் கண்டுகொள்ளவில்லை. நாளாக நாளாக அவரது அர்ப்பணிப்பும், கடின முயற்சியும் என்னை பிரமிக்க வைத்தது. அடிக்கடி சீனியர் வீராங்கனைகளைக் காட்டி, 'நானும் ஒருநாள் அதுபோல் வருவேன்' என்பார். அந்த நிலைப்பாடுதான் தீபாவுக்கு என்னை பயிற்சி அளிக்க வைத்தது"  என்கிறார் பிஸ்வேஸ்வர்.
அவர்தான் அன்று முதல் இன்றுவரை தீபாவின் பயிற்சியாளர்.

எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நேரத்தில், கொல்கத்தாவில் இருந்து வந்த டாக்டர், தீபாவின் பாதங்கள் தட்டையாக இருப்பதைப் பார்த்து சொன்ன வார்த்தை,  ‘இந்த பொண்ணு ஜிம்னாஸ்டிக்குக்கு சரிப்பட்டு வர மாட்டா!'. ஜிம்னாஸ்டிக்கை கைவிட தீபாவுக்கு மட்டுமல்ல அவரது பயிற்சியாளருக்கும் இஷ்டம் இல்லை. தட்டையான பாதங்களில் வளைவு ஏற்படுத்துவதற்காக மட்டுமே, தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி. அதன் பிறகு பல மணி நேரம் ஜிம்னாஸ்டிக் பயிற்சி. வெகு சீக்கிரமே அதற்கு பலனும் கிடைத்தது.

ஈரோட்டில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் தொடரில், பல்வேறு பிரிவுகளில் நான்கு தங்கம், ஒரு வெள்ளி வென்றபோது தீபாவின் வயது 16. அதே சூட்டோடு  பள்ளிகள் அளவிலான தேசியப் போட்டியில் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி வென்றதோடு, தேசிய ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம், 2 வெள்ளி அள்ள, ’யார் இந்த தீபா” என ஜிம்னாஸ்டிக் உலகம் கேள்வி எழுப்பியது. இது போதாது. சர்வதேச அளவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்த தீபாவுக்கு, டெல்லியில் நடந்த 2010 காமன்வெல்த் போட்டி சறுக்கலாக அமைந்தது. முதல் சர்வதேசப் போட்டியில் அடைந்த தோல்வி ரொம்பவே கசந்தது. ‘பரவாயில்லை. அடுத்த காமன்வெல்த் போட்டியில் பார்த்துக் கொள்ளலாம்’ என தேற்றிய பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர், கூடவே ஒரு விஷயம் சொன்னார்... ‘உலகம் உன்னைக் கவனிக்க வேண்டுமெனில் ரிஸ்க் எடுக்க வேண்டும்’ என!

பிஸ்வேஸ்வர் சொல்லி முடிப்பதற்குள்,  ‘நீங்க என்ன சொன்னாலும் செய்ய தயார்’ என துள்ளி எழுந்தார் தீபா. அந்த துணிச்சலுக்குப் பரிசாக, 2014 கிளாஸ்கோ காமன்வெல்த்தில், தீபாவின் கழுத்தில் வெண்கலப் பதக்கம் மின்னியது. ‘காமன்வெல்த்தில் பதக்கம் எல்லாம் மேட்டரே இல்லை. ஒலிம்பிக்கில் ஜெயிச்சா ஆயுசுக்கும் பேர்’ என அடுத்த இலக்கு நிர்ணயித்தார் தீபா. உயிரைப் பணையம் வைத்து, ‘ப்ரோடுனோவா’ வால்ட்டில் தடம் பதித்து, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்று, இதோ இறுதிச் சுற்று வரை முன்னேறி விட்டார்.

ஒலிம்பிக் அரங்கில், ‘ப்ரொடுனோவா’ வால்ட்டுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, சக வீராங்கனைகள் ஆச்சர்யத்தோடு பார்த்தனர். தீபா அதில் முத்திரை பதித்ததும், சைமன் பைல்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் உச்சி முகர்ந்து பாராட்டினர். இப்போது இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாது, பி.பி.சியில் இருந்து ஒட்டுமொத்த சர்வதேச ஊடகங்களும் தீபாவின் பேட்டிக்கு காத்திருக்கின்றன.

‘ஜாம்பவான்கள் எல்லாம் என்னைப் பாராட்டுகின்றனர். மகிழ்ச்சி’ என்கிறார் தீபா. இறுதிச் சுற்றில் நுழைந்ததற்கே இவ்வளவு மகிழ்ச்சி எனில் பதக்கம் வென்றால்?!

டபுள் மகிழ்ச்சி!


- தா. ரமேஷ்