Published:Updated:

எம்.ஜி. ஆர் படத்தில் நடித்த சாவி! ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 3 )

எம்.ஜி. ஆர் படத்தில் நடித்த சாவி! ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 3  )
எம்.ஜி. ஆர் படத்தில் நடித்த சாவி! ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 3 )

எம்.ஜி. ஆர் படத்தில் நடித்த சாவி! ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 3 )

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எம்.ஜி. ஆர் படத்தில் நடித்த சாவி! ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 3  )

61) குருநாதர் கல்கி மீது எத்தனை மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாரோ, அதே அளவு பக்தியை விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் மீதும் வைத்திருந்தார் சாவி. விமர்சனங்களை திறந்த மனதோடு ஏற்கும் குணம், நல்லதைக் கண்டால் உடனே கூப்பிட்டுப் பாராட்டும் பண்பு, செய்யும் செயலில் துல்லியம் எனப் பல விஷயங்களில் சாவிக்கு ரோல்மாடலாக இருந்தவர் எஸ்.எஸ்.வாசன்தான். ' உழைப்பால் உயர்ந்த மாமேதை அவர்' என்று எஸ்.எஸ். வாசன் குறித்து சிலிர்ப்பும் பிரமிப்புமாகக் குறிப்பிடுவார் சாவி. 'போலி கௌரவத்தை அடியோடு வெறுத்து ஒதுக்கியவர் வாசன்' என்று புகழாரம் சூட்டுவார்.

62) சினிமா, பத்திரிகை என இரட்டைக் குதிரையில் பயணம் செய்தாலும், பத்திரிகைப் பணியில் எஸ்.எஸ். வாசன் எத்தனை தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பதற்கு சாவி வர்ணித்த ஒரு சம்பவம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. பரங்கிமலையில் ஏதோ படப்பிடிப்பு. குதிரைகளை வைத்து ஏதோ காட்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தக் குதிரைகள் மைசூர் மகாராஜாவிடமிருந்து, அவர் போட்ட பல நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு, மிகவும் சிரமத்துக்கிடையில் படப்பிடிப்புக்காக வாங்கி வந்திருந்தனர். அதே நேரம், ஆனந்த விகடன் அலுவலகத்தில் 'தில்லானா மோகனாம்பாள்' தொடர்கதையை வரிக்கு வரி படித்துத் திருத்திக் கொண்டிருந்தார் எஸ்.எஸ்.வாசன். அப்போது படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து வாசனின் பி.ஏ. நம்பியார் என்பவரிடமிருந்து பதற்றத்துடன் ஒரு போன்கால்! விஷயம் விபரீதமானது.

படப்பிடிப்பில் ஓடிய ஒரு குதிரை, கால் தடுக்கி, இசகுபிசகாக உருண்டு விழுந்து, உயிரை விட்டுவிட்டது. 'ஐயோ! மைசூர் மகாராஜாவுக்கு என்ன பதில் சொல்வது!' என்ற பதற்றத்தில் போன் செய்கிறார் நம்பியார். போன்காலை அட்டெண்ட் செய்த வாசன் சொன்ன பதில் என்ன தெரியுமா... ' என்ன நம்பியார்! இந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாமா நீங்க என்னைத் தொந்தரவு செய்யறது? இதை நீங்களே டீல் பண்ணிக்கக் கூடாதா? இங்கே நான் எத்தனை முக்கியமான காரியத்தில் இருக்கிறேன். என்ன, போங்க!' என்று காலை கட் செய்துவிட்டாராம் எஸ்.எஸ்.வாசன். 'நாங்கள் ஆடிப்போய்விட்டோம். விலை உயர்ந்த ஒரு குதிரையின் இழப்பு ஒரு பக்கம், படப்பிடிப்பு தடைப்பட்டது ஒரு பக்கம், இதையெல்லாம் தாண்டி மைசூர் மகாராஜாவை சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஒருபக்கம்... இதையெல்லாம்விட பத்திரிகையில் வெளியாகும் ஒரு தொடர்கதையைத் திருத்துவதென்பது மிக முக்கியமான விஷயமாக இருந்திருக்கிறது என்றால், பத்திரிகை மீது அவருக்கிருந்த அதி தீவிர ஆர்வத்தை, பக்தியை என்னவென்பது!' என்று வியந்து வியந்து சொல்லியிருக்கிறார் சாவி.

63) திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவு எத்தனை நகைச்சுவையாக இருக்கும் என்று அதைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாகவே வாரியாரின் சொற்பொழிவு என்றால், கூட்டம் திரளுவதற்குக் கேட்கவே வேண்டாம். மயிலை சமஸ்கிருதக் கல்லூரியில் ஒருமுறை சொற்பொழிவு நிகழ்த்தினார் வாரியார். அதற்கு ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார் சாவி. விமர்சனம் வெளியான அடுத்த நாளிலிருந்து வழக்கமாக வரும் கூட்டத்தைவிட மும்மடங்கு கூட்டம் பெருகியது அந்த நிகழ்ச்சிக்கு.

64) வாரியாரின் பிரசங்கங்கள் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெறுவதற்கு முழு முயற்சி எடுத்துக்கொண்டவர் சாவி. 'சத்திய சபா'  என்னும் ஓர் ஆன்மிக சபையை நிறுவி, மைசூர் மகாராஜாவையும் பெருந்தலைவர் காமராஜரையும் வரவழைத்து, கிருபானந்த வாரியாரைக் கொண்டு, ராமாயண உபன்யாசத்தை ஒரு ஞான வேள்வி போல் 40 நாட்கள் தொடர்ந்து நடத்தியுள்ளார் சாவி.

65) வாரியாரின் உபன்யாசத்தைக் கேட்க முன் வரிசையில் அமர்ந்திருந்தார் மைசூர் மகாராஜா. அவர் அருகில் தகுதியுள்ள யாரை அமரச் செய்யலாம் என்று யோசித்த சாவி, எஸ்.எஸ்.வாசனே இதற்குப் பொருத்தமானவர் என்று கருதி, அவர் அருகில் சென்று, 'நீங்கதான் மகாராஜா பக்கத்தில் உட்கார்ந்து அவருக்கு கம்பெனி கொடுக்கவேண்டும்' என்று விநயத்துடன் கேட்டுக் கொண்டார். முதலில் மறுத்த வாசன், பின்னர் சாவியின் வற்புறுத்தலுக்கிணங்க, மகாராஜாவின் அருகில் போய் அமர்ந்தார். சிங்கங்கள் போல் இரு பெரிய மனிதர்களும் அருகருகே அமர்ந்திருப்பதைக் கண்டு காமிராக்கள் சும்மா இருக்குமா? படங்களாக எடுத்துத் தள்ளின. அப்படியொரு அபூர்வமான போட்டோவை பெரிதாக என்லார்ஜ் செய்து எடுத்துக்கொண்டு போய் எஸ்.எஸ்.வாசனிடம் நீட்டினார் சாவி. அதைக் கண்டு அவர் பெரிதும் மகிழ்வார் என்று நினைத்தார். ஆனால், மாறாக மகா கோபம் கொண்டார் வாசன். ' இதை நான் என் வீட்டு ஹாலில் மாட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காகத்தானே கொண்டு வந்திருக்கிறாய்? இந்த போட்டோவைப் பார்த்துவிட்டு மைசூர் மகாராஜாவும் வாசனும் நெருங்கிய சிநேகிதர்கள் போலிருக்கிறது என்று பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். அப்படித்தானே? மைசூர் மகாராஜாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவரை எனக்குத் தெரியவும் தெரியாது. நீ சொன்னாயே என்றுதான் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன். மற்றபடி, இந்த போலியான கௌரவமெல்லாம் எனக்குத் தேவையில்லை' என்றார் வாசன். வாசனைப் போன்ற ஓர் அபூர்வ மனிதரைக் காண்பது அரிது என்கிறார் சாவி.
 

எம்.ஜி. ஆர் படத்தில் நடித்த சாவி! ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 3  )

66) சாவியுடன் ஒன்றாக ஆனந்த விகடனில் பணியாற்றியவரும், சாவியின் நண்பரும், எழுத்தாளருமான மணியனுக்காக பெண் தேடி, லலிதா என்ற பெண்ணைப் பேசிமுடித்து, நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்து, ஏவி.மெய்யப்பச் செட்டியாரிடம் பேசி ராஜேஸ்வரி மண்டபத்தை கட்டணமில்லாமல் பேசி முடித்து, திருமணத்தை தடபுடலாக நடத்திக் கொடுத்தவர் சாவிதான்.

67) சாவி பத்திரிகையில் தனது நண்பரான மணியனை தொடர்கதை எழுதச் செய்து, அவரின் 'இதயம் பேசுகிறது' பத்திரிகையில் தான் ஒரு தொடர்கதை எழுதினார் சாவி. இரண்டு பத்திரிகை ஆசிரியர்கள் மற்றவரின் பத்திரிகையில் பரஸ்பரம் தொடர்கதை எழுதியது அந்நாளில் ஒரு புதுமையாகப் பேசப்பட்டது. ஏன், இன்றளவிலும்கூட இது ஒரு புதுமைதானே? இதற்கு ஐடியா கொடுத்தவர் சாவிதான்.

68) ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கிங் மேக்கராக இருந்த காமராஜ் தலையில் விழுந்தது. இதற்காக அவர் டெல்லியில் தங்கியிருந்த நாட்களில், அவரைப் பார்ப்பதற்காகப் பல பெரிய பெரிய புள்ளிகள் வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த முக்கியமான நேரத்திலும் காமராஜுடனே இருந்து, அந்தப் பரபரப்பான நிகழ்வுகளைக் கண்டு, கட்டுரையாக எழுதியுள்ளார் சாவி.

69) ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் மீது மிகவும் பிரியம் உள்ளவர் சாவி. 'ஒரு முதலாளியாக இல்லாமல், ஒரு தோழனைப் போலத்தான் என்னோடு பழகுவார் பாலு. ஆனாலும், அவர் முதலாளி என்கிற மரியாதை என் உள்ளத்தில் எப்போதுமே இருக்கும். அவருடைய நினைவாற்றலைக் கண்டு பிரமித்திருக்கிறேன். மறதி என்றால் என்னவென்றே தெரியாதவர் பாலு. ஒரு தலையங்கத்தை கமா, ஃபுல்ஸ்டாப்போடு ஒரு முறை நிறுத்தி நிதானமாகப் படித்தால் போதும், கண்ணை மூடிக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, அதை வரிக்கு வரி அப்படியே திருப்பி ஒப்பிப்பார் பாலு! அசாத்தியமான இந்தத் திறமை வேறு யாருக்குமே வராது. அதேபோல் எந்தவொரு மேட்டரையும் மிகக் கச்சிதமாக எடிட் செய்வார். புதிதாக ஏதேனும் ஐடியாக்கள் கொடுத்தால், ரசித்து உற்சாகப்படுத்துவார். அதை மேலும் சிறப்பாகச் செய்ய ஆலோசனைகள் சொல்வார். என் எழுத்துத் திறமை மேம்பட்டதற்கு பாலுவின் ரசனையும் அவர் தந்த உற்சாகமும்தான் காரணம்!' என்பார் சாவி.

70) ஒருமுறை ஆசி பெறுவதற்காக காஞ்சி பரமாச்சார்யரை தரிசிக்கச் சென்றபோது, 'சாமா சுப்பிரமணிய சாஸ்திரிகளோட பையன்தானே நீ? இப்போ நீ விகடன்லே 'கீ' போஸ்ட்ல இருக்கிறதா கேள்விப்பட்டேனே! க்ஷேமமா இரு!' என்று புன்னகைத்தபடி சாவியை ஆசீர்வதித்தாராம் மகா பெரியவர். தன் புனைப்பெயர் சாவி என்பதை மனதில் கொண்டு 'key post' என்று வார்த்தை விளையாடிய காஞ்சிப் பெரியவரின் சாதுர்யத்தை வியந்து போற்றுவார் சாவி.
 

எம்.ஜி. ஆர் படத்தில் நடித்த சாவி! ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 3  )

71) கலைஞர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் சாவி என்பது ஒருபுறம் இருக்க, அவர் ஒன்றும் எம்.ஜி.ஆரின் விரோதியாக ஆக வேண்டும் என்று எண்ணிச் செயல்படவில்லை. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அப்படி அமைந்துவிட்டன. பெரம்பூரில் நடந்த 'வாஷிங்டனில் திருமணம்' நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். ஒருமுறை தலைமை தாங்கினார். சாவியும் சென்று கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பெருந்தலைவர் காமராஜர், சாவியின் இல்லத்துக்கு வரப்போவதாகத் தகவல் வந்ததால், நாடகத்துக்குச் செல்வதை கேன்சல் செய்துவிட்டு, காமராஜரை வரவேற்க வீட்டிலேயே இருந்துவிட்டார் சாவி. 'என்னைவிட காமராஜர் உங்களுக்கு முக்கியமாகப் போய்விட்டாரா?' என்று எம்.ஜி.ஆருக்கும் கோபம் உண்டானதில் வியப்பில்லை.

72) எம்.ஜி.ஆர்., சாவி மீது கோபப்படும்படியான இன்னொரு பெரிய விஷயமும் நடந்தது. தினமணி கதிரில் வாசகர்களின் கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். சில வாரங்களுக்குப் பின்னர், சோ-வைத் தாக்கி அடிக்கடி பதில் சொல்லத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். அந்தக் குறிப்பிட்ட பதில்களைப் பிரசுரிக்காமல் நிறுத்திவிட்டார் சாவி. இப்படிச் சில வாரங்கள் கடந்தன. பின்னர், அந்த வாரத்துக்கான பதில்களோடு சாவியைத் தேடி வந்தார் எம்.ஜி.ஆரின் உதவியாளர் வித்வான் வே.லட்சுமணன். எம்.ஜி.ஆரின் பதில்களைக் கொடுத்துவிட்டு, "நீங்கள் அவர் எழுதும் சில பதில்களைப் பிரசுரிப்பது இல்லையாம். கட்டாயம் அவற்றைப் பிரசுரிக்கும்படி சொன்னார்" என்றார். "மாட்டேன். ஒருவரைக் குறிப்பிட்டு காயப்படுத்துகிற மாதிரியான பதில்களை நான் பிரசுரிக்க மாட்டேன். பத்திரிகை ஆசிரியராக ஒன்றைப் பிரசுரிப்பதும், நிறுத்தி வைப்பதும் என் உரிமை!" என்றார் சாவி. "அப்படியானால், எம்.ஜி.ஆரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம். அடுத்த வாரம் அவர் பதில்கள் எழுதித் தருவதைக்கூட நிறுத்திவிடலாம்" என்றார் வே.லட்சுமணன். இது சாவியை கோபப்படுத்திவிட்டது. "அடுத்த வாரம் என்ன... இந்த வாரமே அவரின் பதில்களை நான் நிறுத்திவிட்டேன் என்று அவரிடம் போய்ச் சொல்லுங்கள்" என்று வந்த பதில்களையும் கையோடு வே.லட்சுமணனிடம், பிரித்துப் பார்க்காமலே திருப்பி அனுப்பிவிட்டார் சாவி. அன்றிலிருந்து எம்.ஜி.ஆரும் சாவியும் எலியும் பூனையுமாக ஆகிவிட்டார்கள்!

73) ஒரு பத்திரிகையாளராக நடுநிலையுடன் செயல்படத்தான் எப்போதும் விரும்பியிருக்கிறார் சாவி. தேர்தலில் எம்.ஜி.ஆர். வென்று முதலமைச்சராக ஆன பின்பு, அவரை வரவேற்று தம் பத்திரிகையில் தலையங்கம் வெளியிட்டார் சாவி. மேலும், 'தோட்டம் முதல் கோட்டை வரை' என்னும் தலைப்பில் எம்.ஜி.ஆரின் அரசியல் பயணம் குறித்துச் சில வாரங்களுக்கு அற்புதமான தொடர் கட்டுரையையும் வெளியிட்டு கௌரவித்தார்.
 

எம்.ஜி. ஆர் படத்தில் நடித்த சாவி! ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 3  )

74) ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, 'புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது' என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார் எம்.ஜி.ஆர். ஆம்... மறுமுறை உங்கள் தொலைக்காட்சியில் அந்தப் பாடல் காட்சி ஒளிபரப்பாகும்போது கவனித்துப் பாருங்கள்... எம்.ஜி.ஆருடன் கோட் சூட் அணிந்தபடி கம்பீரமாக நடந்து வருவார் சாவி. 'அன்பே வா' படம் சூப்பர் டூப்பர் ஹிட்! 'இந்தப் பெருவெற்றிக்குக் காரணம், நான் அதில் நடித்திருந்ததுதான்!' என்று தமாஷாகச் சொல்வார் சாவி.

75) எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையான குணம் குறித்தும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சாவி. சிம்லாவில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில், எம்.ஜி.ஆரைக் காண ராணுவ வீரர்கள் சிலர் விரும்பினார்களாம். எம்.ஜி.ஆரும் அவர்களிடம் அன்பாக உரையாடி, அவர்களின் பணிகளையும், அவர்களுக்கு இருக்கும் சிரமங்களையும் அக்கறையோடு கேட்டறிந்தாராம். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். அந்த வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரின் தாயார் இங்கே தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் குக்கிராமத்தில் வசிக்கிறார். அந்த வீரர், தான் இங்கே மிகவும் நலமாக இருப்பது குறித்து தன் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், தாயாருக்காக தான் வாங்கி வைத்திருக்கும் ஒரு எளிய புடவையை தன் அம்மாவிடம் சேர்க்க வேண்டும் என்றும் எம்.ஜி.ஆரைக் கேட்டுக்கொண்டு, அவசரம் அவசரமாக தன் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதி, அதையும் எம்.ஜி.ஆரிடம் கொடுத்து, அதை எப்படியாவது தன் தாயிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

"நாமாக இருந்தால் ஆகட்டும் என்று சொல்லி, அதை அத்தோடு மறந்திருப்போம். எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. சென்னை திரும்பியதும் முதல் காரியமாக அந்தப் புடவை, அந்த வீரர் கொடுத்த கடிதம் ஆகியவற்றோடு தனது அன்பளிப்பாக ஒரு பெரிய தொகையை வைத்துப் 'பேக்' செய்து, தனது உதவியாளரை அழைத்து, ஒரு காரில் உடனடியாகக் கிளம்பிச் சென்று, அந்த வீரரின் கிராமத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அவரின் தாயாரிடம் இந்த பார்சலை சேர்த்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார். அங்கே அந்த அம்மாவின் மகன் மிகவும் நலமாக இருக்கும் சேதியையும் சொல்லிவிட்டு வரும்படி சொன்னார். இந்த மனிதாபிமான பண்பை வேறு எவரிடமும் நான் பார்க்கவில்லை. அவரை 'மக்கள் திலகம்' என்று அழைப்பது மிகவும் சரியே!" என்று சிலாகித்துச் சொன்னார் சாவி.

76) நெருங்கிய நண்பராக இருந்தபோதிலும், தனக்கு நியாயமென்று பட்டதை பளிச்சென்று சொல்லும் குணம் உள்ளவர் சாவி. அப்படித்தான் ஒருமுறை, கலைஞர் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியதும், அந்த நகரங்களைப் பற்றி என்னென்னவோ கருத்துக்களை வெளியிட்டார். சாவி அது குறித்துத் தன் பத்திரிகையில், "ஓரிரு நாட்கள் போய் சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிட்டாலே, அந்த நகரங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டுவிட முடியாது" என்பதாக விமர்சித்து எழுதிவிட்டார். இதனால் கோபமுற்ற கலைஞர் கருணாநிதி, தமது முரசொலியில் பதிலுக்கு சாவியை விமர்சித்து, 'கூவுகிற கோட்டான்கள் கூவட்டும்; இந்தக் குயிலுக்கு என்ன வந்தது கேடு?' என்று சாடினார். பின்னர், சாவி சென்று கலைஞரைச் சந்தித்து விளக்கம் அளிக்கவும், கலைஞரின் கோபம் தணிய, பழையபடி நட்பு கனிந்தது.
 

77) ஆரம்ப காலங்களில் சாவி அவர்கள் சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்டாக வேலை செய்து பணம் ஈட்டியதைச் சொன்னேன். அதேபோலவே, அவர் ஏர் ரெய்ட் வார்டன் வேலையையும் ஏற்றுச் செய்திருக்கிறார். இரண்டாம் உலகப் போர் மூண்டிருந்த நேரம். காற்றில் யுத்த அபாயம் கலந்திருந்தது. சென்னையிலிருந்து பல குடும்பங்கள் காலி செய்து, வெவ்வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டன. சாவிதான் துணிச்சல்காரராயிற்றே..! சென்னையைவிட்டு நகர விரும்பவில்லை. அங்கேயே ஏதேனும் ஒரு வேலை தேடிக்கொண்டு செட்டிலாகிவிடவேண்டும் என்ற உறுதியான முடிவில் இருந்தார். யுத்த அபாயம் இருந்த காலம் என்பதால், ஏர் ரெய்ட் வார்டன் வேலை அவரைத் தேடி வந்தது.   ஏ.ஆர்.வி. யூனிஃபார்ம் அணிந்து, கையில் விசிலுடன் தெருத்தெருவாகச் சென்று, விசிலை பலமாக ஊதி, வீட்டுக் கதவுகளை மூடும்படியும், விளக்குகளை அணைக்கும்படியும் பொதுமக்களை எச்சரிக்க வேண்டும். இதுவே ஏர் ரெய்ட் வார்டனின் வேலை. இதையும் சவாலாக ஏற்றுச் செய்திருக்கிறார் சாவி.

78) இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், தன் பங்குக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று, மண்ணடி போஸ்ட் ஆபீஸ் வெளியில் இருந்த போஸ்ட் பாக்ஸில் நெருப்பைக் கொளுத்திப் போட்டுவிட்டு, தானே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து, தபாலாபீஸைக் கொளுத்திவிட்டதாகவும், மண்ணடி போஸ்ட் ஆபீஸ் வாசலிலேயே, தான் காந்தி குல்லாயும் கதர்ச் சட்டை, வேட்டியும் அணிந்து காத்திருப்பதாகவும், உடனே வந்து தன்னை கைது செய்து அழைத்துப் போகும்படியும் சொன்னார் இளைஞனாக இருந்த சாவி. அதன்படியே அவரைக் கைது செய்து, பெல்லாரி அருகில் உள்ள அலிபுரம் சிறையில் அடைத்தது போலீஸ். இந்தச் சம்பவத்தைதான் 'இந்தியன்' படத்தில் நெடுமுடி வேணு பேசுகிற வசனமாக வைத்திருப்பார் எழுத்தாளர் சுஜாதா.

79) எளிமையான அமைச்சருக்கு உதாரணம் காட்ட வேண்டுமென்றால் இன்றைக்கும் காமராஜ், கக்கன்ஜி இருவரின் பெயர்கள்தான் சட்டென நம் நினைவுக்கு வரும். அந்த மாமனிதர் கக்கன்ஜியை சாவி சந்தித்துப் பழகியது இந்த அலிபுரம் சிறையில்தான்.

80) சிறையில் கைதிகள் அனைவரும் ஒவ்வொரு குறிப்பிட்ட வேலையைப் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டும். சாவி, நூலகத்தைப் பராமரிக்கும் பொறுப்பை விரும்பி ஏற்றுக் கொண்டார். இந்தச் சாக்கில், 'தி ஹிந்து' உள்ளிட்ட ஆங்கிலப் பத்திரிகைகளையும், இன்னும் பல ஆங்கிலப் புத்தகங்களையும் படித்துத் தம் ஆங்கில அறிவை சாவி விருத்தி செய்துகொண்டது இந்த சிறைவாசத்தின்போதுதான்!

- தொகுப்பு: ரவிபிரகாஷ்

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு