Published:Updated:

நாங்கள் எந்தநேரமும் கைது செய்யப்படலாம்! - மு.க.ஸ்டாலின்

விகடன் விமர்சனக்குழு
நாங்கள் எந்தநேரமும் கைது செய்யப்படலாம்! - மு.க.ஸ்டாலின்
நாங்கள் எந்தநேரமும் கைது செய்யப்படலாம்! - மு.க.ஸ்டாலின்

நாகர்கோவில்: நாங்கள் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்று நாகர்கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முன்னாள் சட்டப் பேரவை செயலாளர் செல்வராஜ் மகனின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் வந்திருந்தார். நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற திருமணத்தை, தன் கையால் தாலியை எடுத்துக் கொடுத்து மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

அதன் பின் மணமக்களை வாழ்த்தி ஸ்டாலின் பேசுகையில், ''செல்வராஜ் சட்ட பேரவை செயலாளராக இருக்கும்போது கலைஞரோடும், என்னோடும் மிகுந்த அன்பு கொண்டிந்தவர். அதனால் தான் இந்த திருமணத்தை நடத்தி வைக்க நான் இங்கு வந்திருக்கிறேன். இது திருமணவிழா, இங்கே அரசியல் பேசக்கூடாது. ஆனாலும், தற்போதைய சூழல் என்னை அரசியல் பேச வைக்கிறது.

என் மீதும், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் 2 வழக்குகளை இன்று காலையில் போட்டுள்ளார்கள். இதனால், எந்த நேரமும் நாங்கள் கைது செய்யப்படலாம். ஆனால், அந்த வழக்குகள் பெயிலில் வரக்கூடிய செக்‌ஷனில் தான் போட்டுள்ளார்கள். இந்த திருமணத்திற்கு வர முடியுமா? இல்லை நாங்கள் கைது செய்யப்படுவோமா என்று நினைத்துக் கொண்டுதான் இங்கே வந்திருக்கிறோம். இதுவரை எங்களை கைது செய்யவில்லை. அதற்கு இந்த ஆட்சிக்கு நன்றி.

சட்டமன்ற மாதிரிக் கூட்டம் நடத்தியதற்காக எங்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் எந்நேரமும் நாங்கள் கைது செய்யப்படலாம். இதற்கு காரணம், நாளை நடைபெற உள்ள காவல்துறை மானியக் கோரிக்கையில் ஜெயலலிதா பேசுவார். அப்போது, தி.மு.க. உறுப்பினர்கள் சட்டம் ஒழுங்கை பற்றி பேசக் கூடாது என்பதற்காக தி.மு.க.வினரை தடுக்கவே இந்த வழக்கு.

சட்டமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். சட்டமன்றம் செயல்படுகிறதா?, இல்லையா என்றே தெரியாத நிலையில், சபாநாயகர் சர்வாதிகார போக்கை கடை பிடித்துள்ளார். .நாளை காவல்துறை மானிய கோரிக்கையிலே, எதிர்க்கட்சி இல்லாமல் ஜெயலலிதா பேச போகிறார். தி.மு.க. ஜனநாயக மாண்புகளை மதிக்கின்ற கட்சி. திட்டமிட்டு எங்களை வெளியேற்றி விட்டார்கள். இது, மக்கள் இந்த ஆட்சியை பற்றி புரிந்துக்கொள்ள நல்ல சந்தர்ப்பம்" என்றார்.

- த.ராம்
படங்கள்: ரா.ராம்குமார்