Published:Updated:

தலைமைச் செயலக வளாகத்தில் மினி எமர்ஜென்சி? 1000 போலீசார் குவிப்பு!

தலைமைச் செயலக வளாகத்தில் மினி எமர்ஜென்சி? 1000 போலீசார் குவிப்பு!
தலைமைச் செயலக வளாகத்தில் மினி எமர்ஜென்சி? 1000 போலீசார் குவிப்பு!

தலைமைச் செயலக வளாகத்தில் மினி எமர்ஜென்சி? 1000 போலீசார் குவிப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றம் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் நான்கு நுழைவாயில்களிலும் 1000 போலீசார் குவிக்கப்பட்டு,பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கடந்த17ம் தேதி, சட்டப் பேரவையில்,  திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் குணசேகரன் பேசும் போது, மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பாக மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பயணம் குறித்து கருத்துத் தெரிவித்தார். இதற்கு அவையில் இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அவையில் இருந்து, எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின்,  காவலர்களால் குண்டு கட்டாகத்  தூக்கி வெளியேற்றப்பட்டார். அவரையடுத்து சட்டமன்றத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மேலும், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 79 பேரை ஒரு வாரம் சஸ்பென்ட் செய்தும் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதனால் திமுக உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. தமிழகத்தின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மீண்டும் திமுக உறுப்பினர்கள் சட்டமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட பேரவைத்தலைவர் அனுமதியளிக்க வேண்டும் என்றும்,எதிர்க்கட்சி இல்லாமல் அவை நடக்க கூடாது என்றும் குரல் எழுப்பின. இந்நிலையில்,கடந்த 18-ம் தேதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோட்டை வளாகத்தில் சட்டமன்ற 4-வது நுழைவு வாயில் அருகில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.அதனைத் தொடர்ந்து 19-ம்தேதி அன்று சட்டப்பேரவை வளாகத்தில் போட்டி சட்டமன்றக் கூட்டத்தையும் நடத்தினர்.


அப்போது திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன் சபாநாயகர் போல நடித்துக் காட்டினார்.மற்ற திமுக உறுப்பினர்கள் அந்தப் போட்டி சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதனை ஊடகங்கள் ஒளிபரப்பும் செய்தன. இது அதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும்,பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ள நிலையிலும் திமுகவினரின் போட்டி அவை எப்படி நடைபெற்றது என்றும் விசாரணை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவை நடவடிக்கை இல்லை என்றபோதிலும் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.

திங்கள் கிழமையன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்  நடைபெறுகிறது என்பதால்,முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் அவையில் விவாதம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அது மக்கள் மத்தியில் வேறுவிதமாக 'ரீச்' ஆகும் என்றும் கருதிய ஆளும் தரப்பு  கடந்த வாரமே திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட்  செய்துவிட்டது என்றும் அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தலைமைச் செயலக வட்டாரத்திற்கு இன்று(திங்கள்) காலை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். அவர்கள் வழக்கமாக செய்தி சேகரிக்கும் 4ம் நுழைவாயிலில் அனுமதிக்கப்படவில்லை. கோட்டை வட்டாரத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை எதிரில் தனி  இடம் ஒதுக்கப்பட்டு, அங்கிருந்து மட்டுமே செய்தி சேகரிக்க அறிவுறுத்தப்பட்டனர். அதே போல சஸ்பெண்ட் செய்யயப்படாத  மற்ற திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் நாமக்கல் கவிஞர் மாளிகை எதிரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று மட்டுமே பேட்டி அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள், தங்களது அறையில் இருந்து நேரடியாக சட்டப்பேரவைக்குள் செல்லும் வழியும் இன்று(திங்கள்) மூடப்பட்டிருந்தது.


அந்த வழியில் உள்ள இரும்பு கேட் இழுத்துப்  பூட்டப்பட்டிருந்தது. இதனால் பத்திரிகையாளர்கள் வெளியில் வந்து வேறு வழியாகத்தான் சட்ட பேரவைக்குள்ளே செல்ல முடிந்தது.இந்த புதிய கட்டுப்பாடுகள் பெரிய அளவில் பத்திரிகையாளர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மத்தியில்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டை வட்டாரம் முழுக்க போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்தப் பகுதியில் மினி எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளது போன்ற நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.திமுக உறுப்பினர்கள் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை வரும் புதன் கிழமையோடு முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.    

- தேவராஜன் 

அடுத்த கட்டுரைக்கு