Published:Updated:

'அந்த அவமானங்கள் எனக்கானது அல்ல..!’ மனம் திறந்தார் பெருமாள் முருகன்

'அந்த அவமானங்கள் எனக்கானது அல்ல..!’ மனம் திறந்தார் பெருமாள் முருகன்
'அந்த அவமானங்கள் எனக்கானது அல்ல..!’ மனம் திறந்தார் பெருமாள் முருகன்

'அந்த அவமானங்கள் எனக்கானது அல்ல..!’ மனம் திறந்தார் பெருமாள் முருகன்


'மாதொருபாகன்' நாவல் சர்ச்சைக்குப் பின்னர், ஆமை கூட்டுக்குள் ஒளிந்துகொள்வதைப்போல 19 மாத காலம் தனக்குத்தானே அமைத்துக்கொண்ட சிறையில் இருந்தார் பெருமாள் முருகன். அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபோதும், ஓர் அறிக்கை வெளியிட்ட பின்னர், மீண்டும் மெளனம் காத்து வந்தார். இந்த நிலையில்தான் ஓர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார் பெருமாள் முருகன்.

எழுதுவதை நிறுத்தினார்!
பெருமாள் முருகனின், 'மாதொருபாகன்' நாவல் கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளியானது. நாவல் வெளியாகி நான்கு ஆண்டுகளாக எந்தவித சர்ச்சையும் எழவில்லை. நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. 2014 டிசம்பருக்குப் பின்னர்தான் நாவலின் சில பக்கங்களில் வெளியான கருத்துக்களுக்கு ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் விழா பற்றிச் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அதில் இடம்பெற்றிருப்பதாக அவர்கள் கூறினர். இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பெருமாள் முருகனை நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

அடுத்தடுத்த சர்ச்சைகள் காரணமாக, “எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல... ஆகவே, உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்” என்று பெருமாள் முருகன் வேதனை பொங்க தெரிவித்திருந்தார். சர்ச்சைக்குப் பின்னர் தன்னைத்தானே ஒளித்துக்கொண்டு பெருமாள் முருகன் வாழ்ந்தார். நாமக்கல்லில் இருந்து பணிமாறுதல் பெற்றுக்கொண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியராக இருந்து வந்தார். ஊடகங்களிடமும் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்த்தார்.

த.மு.எ.ச வழக்கு!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் எஸ்.தமிழ்ச்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், "நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பெருமாள் முருகனிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று எழுதி வாங்கியது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது" என அறிவிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோல இந்த நாவலின் விற்பனைக்குத் தடை விதிக்கக்கோரி கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சாதகமான தீர்ப்பு!

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் அளித்த தீர்ப்பில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்குக் குந்தகம் ஏற்படாத வண்ணம் அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இந்த வழக்கில் அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து தவறி உள்ளது" என்று கூறியது. மேலும், "நாவலின் விற்பனைக்கும் தடை விதிக்க முடியாது" என்றும் அதில் தெரிவித்திருந்தது.

தீர்ப்பு வெளியானபோது, தீர்ப்புக் குறித்து அறிக்கை வெளியிட்ட பெருமாள் முருகன், தான் திரும்பவும் எழுத உள்ளதாகக் கூறியிருந்தார். ஆனால், ஊடகங்களுக்கு வெளிப்படையாக எந்தவிதப் பேட்டியும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் சென்னையில் இருந்து ஆத்தூர் அரசுக் கல்லூரிக்கு மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டார்.

'அவமானங்கள் எதிராளியிடமே இருக்கின்றன!'

இந்த நிலையில், டெல்லியில் பெங்குவின் பப்ளிஷிங் நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்வில் வாசகர்களின் கேள்விகளுக்கு பெருமாள் முருகன் பதில் அளிக்கிறார்.

அதற்கு முன்பாக ஓர் ஆங்கில நாளிதழக்குப் பல்வேறு விஷயங்கள் குறித்து பேட்டி அளித்திருக்கிறார் பெருமாள் முருகன். அதிலிருந்து, "என்னைப் பற்றிக் குறிப்பிட்டு நீதிமன்றத் தீர்ப்பில், நீதிபதிகள் கருத்துச் சொல்லியிருக்கின்றனர். குறிப்பாக, தீர்ப்பின் இறுதியில், 'எழுத்தாளர், தான் சிறந்து விளங்கும் எழுத்துப் பணியில் மீண்டும் ஈடுபடும் வகையில் புத்துயிர் பெறட்டும்' என்று சொல்லியிருக்கின்றனர். இது, ஓர் எழுத்தாளராக என்னை மேலும் அதிகப் பொறுப்புடையவனாக மாற்றுகிறது. ஏறக்குறைய 3 மாதங்களுக்கு நான் எதையும் எழுதவில்லை. எதையும் யோசனைகூடச் செய்ய முடியாத அளவுக்கு நான் மரத்துப்போனேன். 3 மாதங்களுக்குப் பிறகு நான் ஒரு கவிதை எழுதினேன். அதில் இருந்து இப்போது வரை 200 கவிதைகள் எழுதி உள்ளேன்.

நீதிமன்றத் தீர்ப்பு வந்த நிலையில் விரைவில் இதை வெளியிட உள்ளேன். எனக்கு எதிராகப் போராடியவர்கள், அறிக்கை வெளியிட்டவர்களுக்கு எதிராகப் பொங்கி எழவேண்டும் என்று பலர் எதிர்பார்த்திருந்தனர். புத்தரை யாரோ ஒருவர் அவமானப்படுத்தியபோது, ஏன் பதிலுக்கு அவர் ஏதும் செய்யவில்லை என்று ஒருவர் கேட்டார். அதற்கு புத்தர், 'அவமானங்களை நான் பெற்றுக்கொள்ளவில்லை. எனவே, அந்த அவமானங்கள் எதிராளியிடமே இருக்கின்றன' என்று சொன்னார். என்னுடைய புத்தகம் சர்ச்சைக்கு உள்ளானபோது, அதன் பின்னர் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக இருந்த என்னுடைய நிலையைப் பற்றிச் சொல்வதற்கு நான் ஒரு நல்ல மேடைப் பேச்சாளனோ அல்லது பெரும் சிந்தனையாளனோ அல்ல. என்னுடைய கவிதைகள் மூலம் அதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்" என்று பெருமாள் முருகன் கூறியிருக்கிறார்.

- கே.பாலசுப்பிரமணி

அடுத்த கட்டுரைக்கு