Published:Updated:

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு பெல்லட் குண்டுகளா....?

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு பெல்லட் குண்டுகளா....?
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு பெல்லட் குண்டுகளா....?

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு பெல்லட் குண்டுகளா....?

ருபது வயது இளைஞர் ரிஃபாத் ஹூசேன். இளம் வயதுக்கே உரிய துடிப்பும், துள்ளலுமாக டிரைவர் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு தற்போது இரண்டு கண்களிலும் பார்வை இல்லை. இவரைப்போன்றே இர்ஃபான் அகமத் என்ற இளைஞருக்கும் பார்வை இழப்பும், உடலின் பல பாகங்களில் காயமும் ஏற்பட்ட நிலையில், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார். ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில், இவர்களைப்போன்ற நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெல்லட் துப்பாக்கிகள் மூலம் ராணுவம் நடத்திய தாக்குதலில் கண்களில் காயமடைந்து, பார்வையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்தும் உள்ளனர்.

கலவரமும், போராட்டமும் காஷ்மீர் மக்களுக்கோ அல்லது பாதுகாப்பு படையினருக்கோ புதிது அல்ல. பல பத்தாண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகள்தான். ஆனால் இந்த முறை கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கையில் எடுத்த பெல்லட் துப்பாக்கிக் குண்டுகள்தான் பிரச்னையை நீதிமன்றம் வரை கொண்டு சென்று, அம்மாநில மக்களிடையேயும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. காஷ்மீரில், கடந்த 2010-ம் ஆண்டு நடந்த வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 112 பேர் கொல்லப்பட்டனர். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான  மத்திய அரசு, பொது மக்கள் பலியாவதை தடுக்க, பெல்லட் துப்பாக்கி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது. கலவரச் சூழலில் கூட்டத்தை கலைக்க பயன்படுத்தப்படும் ஆபத்தில்லா ஆயுதப் பட்டியலில் உள்ளது இந்த பெல்லட் துப்பாக்கி. 

இந்நிலையில், 2010 கலவரத்திற்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது சிற்சில மோதல்களும், போராட்டமும் நடந்து வந்தன என்றாலும், பெரிய அளவில் போராட்டமும், வன்முறையும் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் மீண்டும் வெடித்தது. கடந்த ஜூலை 9-ம் தேதியன்று, பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று குற்றம் சாட்டப்பட்ட 23 வயது இளைஞரான புர்ஹான் வானி-யை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.  பிரிவினைவாதிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய புர்ஹான் வானி-யால், காஷ்மீரின் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என மக்கள் எதிர்நோக்கி இருந்த நிலையில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டதை காஷ்மீர் மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவேதான் போராட்டம் பெருமளவில் வெடித்தது. புர்ஹான் தீவிரவாத அமைப்பின் தளபதி என்று ராணுவ தரப்பில் கூறினாலும், உண்மையில் அவர் அந்த அமைப்பின் ஆதரவாளராக மட்டுமே இருந்திருக்க முடியும்; தீவிரவாதி அல்ல என்பது ஸ்ரீநகர்வாசிகளின் கருத்தாகவுள்ளது.

புர்ஹான் வானி சடலம் முன் திரண்ட மக்கள்

இதுபோன்றதொரு தருணத்திற்குதான் பாகிஸ்தானும், அங்குள்ள தீவிரவாதிகளும் காத்திருந்தன என்பதால், புர்ஹான் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால் போராட்டத்தில் முன்னின்றவர்களில் பெரும்பாலானோர் 20 ப்ளஸ்களில் இருக்கும் இளைஞர்கள்தான். இதனால் போராட்டம் வேகமாகவும், வீரியமாகவும் பரவியது. இந்த நிலையில்தான் கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பெல்லட் குண்டுகளை கையிலெடுத்தனர்.  ஆனால் கடந்த 2010 ல் பயன்படுத்தியதைப் போன்றல்லாமல், இந்த முறை கூர்மையான அதிக காயம் ஏற்படுத்தும் வடிவிலான பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதால்தான், காயம் மிக ஆழமாக ஏற்பட்டதுடன், பலருக்கும் கண்பார்வை பறிபோய்விட்டது என்கிறார்கள் காஷ்மீர் மருத்துவர்கள்.

போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சிக்கி காயமடைந்தவர்களில் பல சிறுவர் சிறுமிகளும் அடக்கம். அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த நஸீர் என்ற 5 வயது சிறுவன் மீது, பாதுகாப்பு படையினர் சுட்ட பெல்லட் குண்டுகள் இவனது இரு கண்களையும் பதம்பார்த்துவிட்டன.

" கடந்தமுறை போராட்டக்காரர்களின் இடுப்புக்கு கீழே குறிவைத்துதான் பாதுகாப்பு படையினர் சுட்டனர். ஆனால் இந்தமுறை கண்களை குறிவைத்து சுட்டனர்" என்று குற்றம் சாட்டினார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இர்ஃபான் அகமது. " படையினர் மக்களை பயமுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். படையினரின் தாக்குதலில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் கோபம் நியாயமானது" என்கிறார் அனந்த்நாக் மாவட்டம், புல்வாமா பகுதியை சேர்ந்த இர்ஃபான் அகமது. இவரும் போராட்டத்தில் பங்கெடுத்தவர்தான். இவருக்கு இரு கண்களிலும் பார்வை பறிபோய்விட்டது. உடலிலும் பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார். இது காஷ்மீர் மக்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது. இவருடன் சேர்த்து ஜூலையில் தொடங்கிய கலவரத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ள நிலையில், அதிகரித்துவரும் மக்கள் கோபத்தை கட்டுப்படுத்த தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறது பாதுகாப்பு படையும் அரசு நிர்வாகமும்.

"மக்களை உடனே கொல்வதற்கு பதில் இந்த குண்டுகள் சித்ரவதை செய்து கொல்கிறது அல்லது வதைக்கிறது. இந்த குண்டினால் நூற்றுக்கணக்கானோர் கண்களில் பாதிப்படைந்துள்ளனர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டவர்களில் ஐந்துபேருக்கு ஒருவர் வீதம் கண் பார்வை முற்றிலும் பறிபோயிருக்கிறது. மேலும் கண்களில் பாய்ந்திருக்கும் குண்டு துகளையும் பல நேரங்களில் எடுக்க முடியவில்லை" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீர் மாநில மருத்துவர்களின் கருத்தாக மட்டும் அல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சென்ற மருத்துவர்களின் கருத்தாகவும் உள்ளது.

ஆனால், உயிர் சேதங்கள் ஏற்படாமல் தவிர்க்கவே நாங்கள் இந்த குண்டுகளை பயன்படுத்துகிறோம் என்று மத்திய ரிசர்வ் காவல் படையினர் சிறப்பு இயக்குநரான எஸ்.என். ஸ்ரீவத்ஸவா கூறுகிறார்.

இந்நிலையில் காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையேயான மோதல் இன்னும் நீடிக்கிறது. இத்தகைய சூழலில்தான் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தும் விவகாரம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதோடு, சர்வதேச பொதுமன்னிப்புச் சபையான அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, பெங்களூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக வெளியிட்ட கருத்து பிரச்னையை வேறு திசைக்கு இழுத்துச் சென்றது.

பெல்லட் துப்பாக்கியை பயன்படுத்துவது ஏன்?

பெல்லட் குண்டுகளால், காயமடைபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், பாதுகாப்புப் படையினர் இதனை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, காஷ்மீர் உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பில், கடந்த ஜூலை 30-ம் தேதி ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு, மாநில அரசு, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் சார்பில், உயர் நீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "பெல்லட் துப்பாக்கி பயன்பாட்டை தடை செய்தால், உச்சகட்ட வன்முறை போராட்ட சம்பவங்களின் போது, வேறு வழியில்லாமல் துப்பாக்கிக் குண்டுகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம். அதனால், பொதுமக்கள் அதிகளவில் பலியாகக் கூடிய அபாயம் உள்ளது.

கலவர தடுப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட ஆயுதமாகவே பெல்லட் துப்பாக்கி உள்ளது. துப்பாக்கிக் குண்டுகளை பயன்படுத்தும் போது, பின்பற்ற வேண்டிய பொதுவான செயல்பாட்டு விதிகளின் படி, இடுப்புக்கு கீழே உள்ள இலக்குகளை மட்டுமே சுட முடியும். ஆனால், அங்குமிங்கும் வளைந்து ஓடிய படி, கலவரத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்களை சுடும் போது, இந்த விதிமுறைகளை பின்பற்றுவது கடினமானதாக இருக்கும். இப்படிப்பட்ட கலவரச் சூழலுக்கு, பெல்லட் துப்பாக்கியே சரியான ஆயுதம்.

கடந்த ஜூலை 9-ம் தேதியில் இருந்து, இம்மாதம், 11-ம் தேதி வரை, காஷ்மீரில் கலவரக்காரர்களுக்கு எதிராக, 8,650 கண்ணீர் புகை குண்டுகள், 13 லட்சம் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன." என்று மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது.

அது என்ன பெல்லட் குண்டுகள்...?

காஷ்மீரில் முதன்முதலில் பிரிட்டிஷ் காலத்தில்தான் இந்த பெல்லட் குண்டுகள் வாத்து வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டன. இந்த பெல்லட் துப்பாக்கியிலிருந்து ஒரு முறை சுடும் போது,  அது சுமார் 600 சிறு குண்டுகளை அதிவேகமாக வெளியிடும். இதனால் எதிரில் உள்ளவர்கள் மீது சரமாரியாக தாக்கும் இச்சிறு குண்டுகள், ஆர்ப்பாட்டக்காரர்களை செயலிழக்க வைத்துவிடும். இவை, பயங்கரவாதம் மற்றும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குண்டுகளை சுடுவதற்காக, பிரத்யேக துப்பாக்கிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலம், ஈஷாப்பூரில் உள்ள மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலையில்தான் இந்த பெல்லட் குண்டுகள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.

இந்த துப்பாக்கிகளில் இருந்து, குண்டுகளை சுடும்போது, அவை சிதறி, சிறுசிறு பாகங்களாக கூட்டத்தினரை தாக்கும். ஈயத்தால் செய்யப்படும் இந்த குண்டுகள், உருண்டையாகவோ அல்லது கூரான வடிவிலோ இருக்கும் 

எவ்வித உயிரிழப்பும் ஏற்படாமல் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு இது பயன்படுவதாக பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் கூறுகின்றனர். ஆனால் அதனை மறுக்கும் போராட்டக்காரர்கள், இக்குண்டுகள் பொதுமக்களின் கண்களை இழக்க செய்கின்றன என்று குற்றம் சாட்டுகிறார்கள். அதனால்தான் இதைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் காஷ்மீரில் மிக வலுவாக எழுப்பப்படுகின்றன. 

அதட்டப்பட்ட அம்னெஸ்டி

இதனிடையே 'ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமை மீறலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு, கடந்த 13 ம் தேதியன்று, பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இருதரப்பினர் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. அப்போது, ஒருதரப்பினர் இந்திய ராணுவத்துக்கு எதிராகவும், காஷ்மீருக்கு சுதந்திரம் கேட்டும் முழக்கங்களை எழுப்பினர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்தரங்கில் நடைபெற்ற விவாதங்கள் குறித்த காணொலிக் காட்சிகள் அடங்கிய குறுந்தகடை போலீஸாரிடம் வழங்கியதோடு, அம்னெஸ்டி தன்னார்வ அமைப்புக்கு எதிராகவும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏவிபிவி) புகார் அளித்தது. அதனடிப்படையில், போலீசார் அம்னெஸ்டி அமைப்புக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், பெங்களூரு இந்திரா நகரில் உள்ள அம்னெஸ்டி தன்னார்வ அமைப்பின் அலுவலகம் முன். கடந்த வெள்ளிக்கிழமை திரண்ட ஏபிவிபி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, போலீஸாரின் தடுப்புகளைத் தாண்டி அம்னெஸ்டி அலுவலகத்தின் உள்ளே நுழைய முயற்சி செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டடதை தொடர்ந்து, இலேசாக தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதற்கிடையே  முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கையை ஏற்று, தேசியப் புலனாய்வு முகமை (The National Investigation Agency -NIA) விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

காற்றில் பறந்த அமைச்சர் உத்தரவு

இந்நிலையில் காஷ்மீரில் கலவரத் தடுப்புப் பணியின்போது 'பெல்லட்' வகைக் குண்டுகளைப் பயன்படுத்துவதை தவிக்குமாறு, கடந்த ஜூலை மாத இறுதிவாக்கில் படையினருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், "அமைச்சரின் அறிவுறுத்தலை படையினர் கண்டுகொள்ளவில்லை என்பது படையினரின் பெல்லட் குண்டு தாக்குதலில் நேற்று காயமடைந்த 8 வயது சிறுவன் ஜூனையத் அகமது மூலம் நிரூபணம் ஆகியுள்ளது" என்கின்றனர் காஷ்மீர் மக்கள். புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஜூலை 9 ம் தேதியிலிருந்து தற்போது வரை நடத்தப்பட்ட பெல்லட் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் 14 சதவீதம் பேர் 15 வயதுக்கு கீழானவர்கள் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

" நாள் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுக்குப் பின்னர் படையினர் அப்பகுதியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். நவாபஸார் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டின் வெளியே உள்ள சந்தில் நேற்று மாலை நின்றுகொண்டிருந்தான் சிறுவன் அகமது. அப்போது அவ்வழியாக சென்ற கலவர தடுப்பு வாகனத்தில் இருந்த போலீஸார், அங்கு கூட்டமாக நின்றுகொண்டிருந்தவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர். எல்லோரும் தப்பி ஓடியபோது, அகமது மட்டும் ஓடவில்லை. அப்போது கலவர தடுப்பு வாகனத்தில் இருந்த போலீஸார் அகமதுவை நோக்கி கத்தியபடியே, அவனது வயதைக் கூட கருத்தில்கொள்ளாமல் பெல்லட் துப்பாக்கியால் சுட்டனர்" என்று குற்றம் சாட்டுகிறார் அகமதின் உறவினர். அகமது தற்போது ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். "சுமார் ஒரு டஜனுக்கும் அதிமான குண்டுகள் அவனது மார்பில் பாய்ந்துள்ளன. அவற்றில் சில நுரையீரலுக்குள்ளும் புகுந்துவிட்டன" என்கிறார் அகமதுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்.

இந்த மருத்துவமனையில் மட்டும், புர்ஹான் வானி கொல்லப்பட்ட ஜூலை 9 ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் முதல் வாரம் வரை பெல்லட் குண்டுகளால் காயமடைந்து சிகிச்சைக்கு வந்த கேஸ்களின் எண்ணிக்கை 933. " இதில் 440 கேஸ்கள் கண்களில் பெல்லட் குண்டுகள் பாய்ந்தவர்கள். இதில் 60 முதல் 70 பேர் 15 வயதுக்கும் கீழே உள்ளவர்கள். 40 பேர்களுக்கு அடுத்தவாரம் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 250. இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் இளவயதினர்" எனக் கூறுகிறார் மேற்கூறிய மருத்துவமனையின் டாக்டர் சஜாத்ரிவர். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களில் சிறுவர்களையே மிக அதிக அளவில் சேர்த்துக்கொள்கிறார் இவர்.

மோடியை சந்தித்த காஷ்மீர் தலைவர்கள்

இந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா தலைமையிலான 8 உறுப்பினர்கள் அடங்கிய ஜம்மு காஷ்மீர் மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு, ஆகஸ்ட் 22 ம் தேதியன்று  டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, போராட்டக்காரர்கள் மீது பெல்லட் குண்டுகளால் சுடுவதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்றும், காஷ்மீர் தலைவர்களுடன் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் காஷ்மீரில் கடந்த 40 தினங்களாக நிலவும் சூழலை எடுத்துரைத்ததோடு, ஜம்மு காஷ்மீர் இயல்பாகவே அதிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், எனவே காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்த ஒமர் அப்துல்லா, " காஷ்மீர் பிரச்னைக்கு நம்மால் அரசியல் ரீதியான தீர்வைக் காண முடியாமல்போனால், நாம் நமது தவறுகளை திரும்பத் திரும்ப செய்கிறோம் என்றே ஆகிவிடும். பிரதமர் நாங்கள் சொன்னதை பொறுமையாக கேட்டார். வெறும் வளர்ச்சிப் பணிகள் மட்டுமே பிரச்னைக்கு தீர்வாகாது என்பதை பிரதமரும் ஒப்புக்கொண்டார்" என்றார்.

தீர்வு காண்பாரா மோடி?


வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, 2001 ம் ஆண்டில் நடைபெற்ற ஆக்ரா உச்சி மாநாட்டின்போது, காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கான கூட்டு பிரகடன வரைவறிக்கையை வெளியிட ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சில மூத்த அமைச்சர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்தால்,  கடைசி நிமிடத்தில் வாஜ்பாய் மனதை மாற்றிக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது உண்டு. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பும், இதனை ஒருமுறை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய பா.ஜனதா அரசில், மோடியே சர்வ வல்லமை கொண்டவராக திகழ்கிறார். அவர் ஒரு முடிவை முன்வைத்தால் அதனை எதிர்க்கும் அளவிலான தைரியம் கொண்ட தலைவர்கள் யாரும் அவரது அமைச்சரவையில் இல்லை. பா.ஜனதாவை ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் மோடி செல்லப்பிள்ளைதான். எனவே வாஜ்பாய் செய்யத் தவறியதை மோடி செய்து காட்ட வேண்டும் என்பதே காஷ்மீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என விரும்புபவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

                                                                                                                                                           - பா. முகிலன்
 

அடுத்த கட்டுரைக்கு