Published:Updated:

காவிரி பிரச்னை அப்போதும்... இப்போதும் தீர்வை நோக்கி நகராதது ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காவிரி பிரச்னை அப்போதும்... இப்போதும் தீர்வை நோக்கி நகராதது ஏன்?
காவிரி பிரச்னை அப்போதும்... இப்போதும் தீர்வை நோக்கி நகராதது ஏன்?

காவிரி பிரச்னை அப்போதும்... இப்போதும் தீர்வை நோக்கி நகராதது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

த்திய அரசின் பாராமுகம், கர்நாடகா அரசின் தந்திரம், தமிழக அரசின் செயலற்ற தன்மை ஆகியவற்றால் காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமை பறிபோய்க் கொண்டிருக்கிறது.

210 ஆண்டுகளைக் கடந்தும் கொதிநிலையில் இருக்கிறது காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை. கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி எனும் இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, அந்த மாநிலத்துக்குள்ளேயே 800 கி.மீ பயணித்து, தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியே பயணத்தைத் தொடங்குகிறது. ஒகேனக்கல் அருவி வழியே மேட்டூர், பவானி, ஈரோடு, கொடுமுடி, கரூர், திருச்சி கல்லணை வழியாக தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாய்ந்து, பூம்புகார் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.

இயற்கை தந்த கொடையான காவிரி நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையேயான தகராறு நீண்ட நெடிய காலமாக முடிவுக்கு வராமல் நீடித்துவருகிறது. தீர்வுக்கு வழி ஏற்படும் என்று நம்பப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, வெளிவந்து 10வது ஆண்டை நெருங்கி இருக்கும் நிலையில் கர்நாடகா அரசு, பிரச்னையைத் தீர்ப்பதில் இருந்து நாளுக்குநாள் விலகிச் செல்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தில் தொடர்புடைய காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான சிக்கலை, நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்பு, தீர்ப்புக்குப் பின்பு என்றே அணுகலாம்.

காவிரி நடுவர் நீதிமன்றத்துக்கு முன்பு...

காவிரி நடுவர் மன்றம் அமைக்கும் முன்பிருந்தே மைசூர் அரசாக இருந்தபோதிலிருந்தே தமிழகத்துக்கான உரிமையைத் தருவதில் கர்நாடகா மாநிலத்தின் பிடிவாதங்களும், மறுப்புகளும் தொடர்ந்து வருகின்றன. 1807-ம் ஆண்டு அப்போது இருந்த மைசூர் அரசுக்கும், சென்னை மாகாணத்துக்கும் இடையேதான் காவிரி நீரைப் பங்கீடு செய்துகொள்வதில் பிரச்னை ஏற்பட்டது. பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 87 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஆங்கில அரசின் கீழ் 1892-ல் முதன்முதலாக இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி, ‘காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அந்தத் திட்டத்தைச் சென்னை மாகாண அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும்’ என்று மைசூர் அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 1910-ல் மைசூர் அரசு, கன்னம்பாடி என்ற இடத்தில் அணை கட்ட அனுமதி கேட்டது. (இந்த இடத்தில்தான் பின்னர் கிருஷ்ணராஜ சாகர் அணை அமைக்கப்பட்டது.) இதற்கு, சென்னை மாகாண அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆங்கிலேய அரசு தலையிட்டு, ‘கன்னம்பாடியில் 11 டி.எம்.சி நீரைத் தேக்கும் வகையில் அணை கட்ட வேண்டும்’ என்று மைசூர் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்த உத்தரவைப் புறந்தள்ளிய மைசூர் அரசு திட்டமிட்டபடி 41.5 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு அணையைக் கட்ட ஆரம்பித்தது. இரு அரசுகளுக்குமிடையே முரண்பாடு உருவானதால் கிரிஃபின் என்பவரை நடுவராக ஆங்கிலேய அரசு நியமித்தது. ஆனால், அவராலும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியவில்லை. மீண்டும் இரண்டு அரசுகளுக்கும் பிரச்னை வெடித்தது. 1924-ல் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 50 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும் என்று சொல்லப்பட்டது. 1929-ல் ஒரு துணை ஒப்பந்தமும் போடப்பட்டது.

அதன்படி, ‘மைசூர் அரசு தனது எல்லைக்குள் திட்டமிட்டபடி கிருஷ்ணராஜ சாகர் அணையை அமைப்பது என்றும், சென்னை மாகாண அரசு மேட்டூர் அணை கட்டிக்கொள்ளலாம்’ என்றும் கூறப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவிரியின் சிக்கல்கள் மேலும் தீவிரத்துடன் தொடர்ந்தன.

1924-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே, காவிரி உண்மை கண்டறியும் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு 1972-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் பரிந்துரைகள்படி 1976-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தமிழகம், புதுச்சேரி இரு மாநிலங்களும் சேர்த்து 393 டி.எம்.சி முதல் 414 டி.எம்.சி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. கர்நாடகா 239 முதல் 261 டி.எம்.சி தண்ணீரையும், கேரளா 39 - 41 டி.எம்.சி தண்ணீரையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், வழக்கம்போல இதை அமல்படுத்த கர்நாடகா அரசு முன்வரவில்லை.

நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையில், 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி.பி.சிங் அரசால் காவிரி நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் நீதிபதி தலைமையிலான குழு மே மாதம் காவிரிப் பாசனப் பகுதிகளை ஆய்வு செய்தது. ஆய்வின் அடிப்படையில் தனது இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.

காவிரி நடுவர் நீதிமன்றம் சொன்னது என்ன?

இடைக்காலத் தீர்ப்பில், தமிழகத்துக்கு ஜூன் முதல் பிப்ரவரி வரை 205 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதித்தீர்ப்பின்படி 192 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று கூறினார்கள். தமிழகத்தின் பங்கில் இருந்து பாண்டிச்சேரிக்கு 6 டி.எம்.சி தண்ணீரைத் தர வேண்டும். அதேபோல கபினி அணையில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு தர வேண்டும்.

மேலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், அதற்கு உதவியாக காவிரி ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும். இந்த இரண்டும் அமைக்கப்படாவிட்டால், தங்கள் தீர்ப்பைச் செயல்படுத்துவது கடினம் என்று காவிரி நடுவர் மன்றத்தின் நீதிபதிகள் அப்போதே கூறினர். அதுதான் இப்போது நடக்கிறது.

நடுவர் மன்றத் தீர்ப்புக்குப் பின்பு...

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியான உடன் அதற்கு கர்நாடகா அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இங்கிருந்துதான் கர்நாடகா அரசின் இழுத்தடிக்கும் அரசியல் தொடங்கியது என்கிறார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் குறைபாடுகள் இருந்தால், நடுவர் மன்றத்தில்தான் அப்பீல் செய்து தீர்வுகாண வேண்டும். நடுவர் மன்றத்திலேயே கர்நாடகா அரசு அப்பீல் செய்திருந்தால் 6 மாதங்களுக்குள் பிரச்னை முடிவடைந்திருக்கும். பிரச்னையைத் உடனடியாகத் தீர்க்க விரும்பவில்லை என்பதால்தான் கர்நாடகா அரசு நடுவர் மன்றத் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளிவந்து 9 ஆண்டுகளுக்குப் பின்னரும் அது அமல்படுத்தப்படாததற்கு கர்நாடகா அரசின் தந்திரம்தான் காரணம்.

காவிரிப் பிரச்னை இப்போது...

தமிழகத்துக்கான உரிமையை கர்நாடகா அரசு தராததால், காவிரி டெல்டா பாசன சாகுபடிக்காகக் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. இதனால் கடந்த 5 ஆண்டுகளாகக் காவிரி டெல்டாவில் குறுவைச் சாகுபடி நடக்கவில்லை. இப்போது 6-வது ஆண்டாகவும் குறுவைச் சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது. கர்நாடகா அரசைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் இந்த ஆண்டும் தீவிரம் அடைந்துள்ளன. சுதந்திர தினத்தன்று பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “மேகதாட்டூ அணை கட்ட நிதி ஒதுக்கப்படும்” என்று கூறி இருக்கிறார். மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கள் மாநிலத்தில் மழை இல்லை. தண்ணீர் இல்லை. குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லை. நாங்கள் எப்படித் தமிழகத்துக்குத் தண்ணீர்விட முடியும்” என்று கைவிரித்திருக்கிறார்.

நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் தர கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கம்போல உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. மறுப்புகளும், பிடிவாதங்களும், வழக்குகளும் எங்களின் வாழ்வாதாரத்துக்கு வழி சொல்லுமா, என்கின்றனர் விவசாயிகள்.

நடுவர் மன்றத்துக்குப் போகாதது ஏன்?

காவிரிப் பிரச்னையில் என்ன நடக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘காவிரிப் பிரச்னையில் முக்கியமான திருப்பமாக 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னது. தீர்ப்பு வந்த உடன் அப்போது இருந்த தி.மு.க அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘தீர்ப்பில் குறைபாடு இருக்கிறது. நடுவர் மன்றத்திலேயே மேல்முறையீடு செய்யலாம்’ என்று கூறினர். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க பிரதிநிதி, ‘உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வேண்டும்’ என்று சொல்லிவிட்டார். மேலும், கர்நாடகா தரப்பிலும் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். எனவே, தமிழகம் மட்டும் காவிரி நடுவர் மன்றத்துக்குப் போனால் நன்றாக இருக்காது என்று கூறி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலேயே முறையீடு செய்யப்பட்டது.

அதில், இன்னும் முடிவு ஏற்படவில்லை. முதலில் கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றம் போனது தவறானது. இதனால்தான் தமிழக அரசும் போனது. அப்போதே உச்ச நீதிமன்றம், இரண்டு அரசுகளிடமும், நீங்கள் நடுவர் மன்றத்தை நாடுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்களும் அதைச் சொல்லவில்லை.

அரசிதழில் வெளியிட்டு என்ன பயன்?

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நான்தான் காரணம் என்று ஜெயலலிதா கூறுகிறார். இதனால் என்ன பயன் விளைந்தது என்பதுதான் எங்கள் கேள்வியாக இருக்கிறது. காவிரிப் பிரச்னையில் கடந்த 40 வருடங்களில் 12 வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள். இதனால் தமிழக அரசுக்கு 1,000 கோடி ரூபாய் வரை செலவாகி இருக்கிறது. இந்தப் பணத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டியிருக்கலாம். கர்நாடகா அரசு இப்போது புதிய அணை கட்டத் திட்டமிட்டுள்ளது. அதேபோல, அங்கு உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளையும், பாசன மேம்பாட்டையும் அதிகரித்துவிட்டது.

அரசியல் ஆதாயம் கருதும் மத்திய அரசு!

ஆனால், தமிழகத்தில் மேட்டூர் அணையைக்கூடத் தூர்வாரவில்லை. அதன் உயரத்தையாவது அதிகரித்திருக்கலாம். அதைக்கூடச் செய்யவில்லை. காவிரிப் பாசனப்பகுதி வாய்க்கால்களையும் தூர் வாரவில்லை. இவ்வளவு நாட்களுக்குப் பின்னரும் ஜெயலலிதா அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை. ‘நான்தான் செய்கிறேன்’ என்று தன்னை முன்னிலைப்படுத்தவே அவர் முயற்சிக்கிறார். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு விவாதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு, இரு மாநில அரசுகளையும் அழைத்துப் பேசித் தீர்வுகாண வேண்டும். ஆனால், எங்கு அரசியல் வாய்ப்பு அதிகம் இருக்கிறதோ அந்தப் பக்கத்துக்கு ஆதரவாகத்தான் மத்திய அரசு இருக்கிறது” என்றார்.

தமிழகம் என்ன வடிகாலா?

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், “எங்கள் மாநில அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடகா அரசு சொல்கிறது. ஆனால், அது உண்மை இல்லை. அந்த மாநிலத்தில் கபினி அணை உள்ளிட்ட 3 அணைகள் நிரம்பி வழிகின்றன. நமக்கான உரிமையை அவர்கள் தர வேண்டும். ஆனால், அணைகளில் நிரம்பி வழியும் தண்ணீரைத்தான் அவர்கள் திறந்துவிடுகிறார்கள். நமது மாநிலத்தை அவர்கள் வடிகாலாகத்தான் பார்க்கிறார்கள். நடுவர் மன்றத் தீர்ப்பை அவர்கள் கடுகளவுகூட மதிப்பதில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகா அரசும் ஏற்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டுத் தீர்வு ஏற்பட உதவி செய்ய வேண்டும். ஆனால், மத்திய அரசு வெறும் பார்வையாளராகத்தான் இருக்கிறது.

ராஜதந்திரம் இல்லை!

‘நடுவர் மன்றத் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாமல் ஒன்றும் செய்யமுடியாது’ என்று முன்பு மத்திய அரசு கூறி வந்தது. 2013-ல் அரசிதழில் வெளியிட்டார்கள். இப்போது 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடகா வழக்குத் தொடுத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டால், நீர் திறப்பு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். பிரச்னை இருக்காது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்தபோது கர்நாடகா அரசுடன் ராஜதந்திரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்பட்டது. ஆனால், ஜெயலலிதா அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. ஒரே ஒரு முறை மட்டும்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசுடன் பேசி இருக்கிறார்” என்றார்.

செயலற்ற தமிழக அரசு!

காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், “இந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணவேண்டும்” என்கிறார். மேலும் அவர், “காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பலர் நிலத்தைத் தரிசாகப் போட்டுவிட்டு வேறு தொழில் செய்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்கள் பலர் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பிழைப்புத்தேடி இடம் பெயர்ந்துவிட்டனர். இந்தச் சூழலில் நமது தமிழக அரசு காவிரிப் பிரச்னையை ஒரு கிளரிக்கல் வேலையைப் போலத்தான் அணுகுகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மார்ச் 28-ல் வழக்கு விசாரணை நடந்தபோது, அடுத்த விசாரணை ஜூலை 18-க்குத் தள்ளிவைக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும் என்றோ, அதற்குள் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றோ நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கவில்லை. ஜூலை 18-ம் தேதி வழக்கு வந்தபோது, மீண்டும் அக்டோபர் 10-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. அப்போதும் தமிழக அரசு வக்கீல் ஒன்றும் பேசவில்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மையைத்தான் இது காட்டுகிறது. மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பொறியாளர் குழுவை கர்நாடகா மாநிலத்துக்கு அனுப்பி, அங்குள்ள அணைகளின் நிலவரத்தை ஆய்வு செய்து நமக்கான உரிமையை கேட்டுப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஆக, காவரி நதிநீர் விவகாரம் அப்போதும், இப்போதும் தீர்வை நோக்கி நகராததற்குக் கர்நாடகா அரசின் பிடிவாதம் மட்டும்தான் காரணம். அந்தப் பிடிவாதத்தை அரசியல் ஆதாயம் கருதி மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழக அரசோ, இதனை ஒட்டுமொத்த மாநில விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையாகக் கருதாமல் தனிப்பட்ட ஆதாயத்தைத் தேடுவதற்கான வழிகளை மட்டுமே தேடுகிறது.

- கே.பாலசுப்பிரமணி

காவிரி டெல்டா பகுதிகள்!

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 14.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா மண்டலம் என்ற வரையறைக்குள் வருகின்றன. காவிரி டெல்டாவில், குறுவை பருவத்தில் (மே - ஜூலை) 1.68 லட்சம் ஹெக்டேரிலும், தாளடிப் பருவத்தில் (பிப்ரவரி - ஏப்ரல்) 1.44 லட்சம் ஹெக்டேரிலும், சம்பா பருவத்தில் (ஆகஸ்ட் - ஜனவரி) 2.99 லட்சம் ஹெக்டேரிலும் நெல் பயிரிடப்படுகிறது. நெல் தவிர, பச்சைப்பயறு, உளுந்து, எள், பருத்தி ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரத்தைக் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

காவிரியின் கிளை நதிகளில் கர்நாடகா அமைத்த அணைகள்!

காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான ஹேமாவதி ஆற்றில், ஹேமாவதி அணையை கட்டி இருக்கின்றனர். அதேபோல Harangi என்ற கிளை ஆற்றின் குறுக்கே, Harangi அணையை அமைத்துள்ளனர். கேரளாவில் உற்பத்தி ஆகி கர்நாடகா வழியே பாயும் கபினி ஆறு, காவிரி ஆற்றில் சேருகிறது. இந்த இடத்தில்தான் கபினி அணையை கர்நாடகா அரசு அமைத்துள்ளது. இப்போது மேகதாட்டூ என்ற இடத்தில், மேலும் ஓர் அணைகட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.

மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்?

குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக நெல் சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அணையின் தண்ணீர் மட்டம் 90 அடியாகவும், நீர் இருப்பு 52.65 டி.எம்.சி-யாகவும் இருக்கும்போது பருவமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஜூன் 12-ல் திறக்கப்படும் தண்ணீர், ஜனவரி 28-ம் தேதி நிறுத்தப்படும். 236 நாட்களில் டெல்டா பாசனத்துக்காக 330 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுகிறது.

-கே. பாலசுப்பிரமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு