Published:Updated:

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

Published:Updated:
அணு ஆட்டம்!

அணு ஆயுதமும் அரச பயங்கரவாதமும்! 

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அணுகுண்டுவின் துயரம் நிறைந்த முக்கியத்துவத்தை நான் உணர்கிறேன். அச்சம் தருகின்ற ஒரு பொறுப்பு எங்களுக்கு வந்திருக்கிறது. எங்கள் எதிரிக்கு வருவதற்குப் பதிலாக எங்களுக்கு வந்திருக்கிறது என்பதால் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். அவரது நோக்கங்களுக்காக அவரது வழிகளில் அதனை உபயோகிக்க அவர் எங்களை வழிநடத்த பிரார்த்திக்கிறோம்!''

- அமெரிக்க முன்னாள் அதிபர் ஹாரி ட்ரூமன் 

முதல் அணுகுண்டு 1945-ம் ஆண்டு ஜூலை 16 அன்று சோதனை செய்யப்பட்டது. அதற்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே ராபர்ட் ஓபன்ஹைமர் தலைமையிலான ஒரு குழு ஐந்து ஜப்பானிய நகரங்களை அணுகுண்டு தாக்குதலின் இலக்குகளாகப் பரிந்துரைத்தது. ஜப்பா னின் மீது அதிக அளவிலான மனோதத்துவ தாக் கத்தை உண்டு பண்ணவும், சர்வதேச அளவில் அணு குண்டுகளின் வல்லமையை பறை சாற்றவும் இந்த இலக்குகள் கவனமாகத் தேர்வு செய்யப்பட்டன!

ஜூலை 26 அன்று அமெரிக்க அதிபர் ட்ரூமன் மற்றும் நேச நாடுகளின் தலைவர்கள் பாட்ஸ்டாம் பிரகடனம் என ஒன்றை அறிவித்து, ஜப்பான் உடன டியாக சரண் அடையவில்லை என்றால் தாக்குதல் நடத்தப்போவதாகச் சொன்னார்கள். ஆனால் அந்த பிரகடனம் அணுகுண்டு பற்றி மூச்சு விடவில்லை. ஜூலை 28 அன்று இந்தப் பிரகடனத்தை தாங்கள் நிராகரிப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்தது. ஜூலை 31 அன்று, 'ஜப்பானிய மகுடம் பாதுகாக்கப்பட்டாக வேண்டும்’ என்று ஜப்பான் அரசர் வலியுறுத்தினார். அமெரிக்கர்களின் அணுகுண்டுத் தாக்குதல் திட்டம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. போர்க்குரல் மட்டுமே எழுப்பினர். ஆனால் அசுரத்தனமான ஓர் ஆயுதத்தோடு அமெரிக்கர்கள் அமைதியாகத் தாக்குதல் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.

அணு ஆட்டம்!

ஒரு சில தொழிற்சாலைகளையும், இராணுவ முகாம்களையும் கொண்ட ஹிரோஷிமா நகரம் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சுமார் 3.5 லட்சம் மக்கள் போருடன் வாழ்ந்து, வாழ்க்கையுடன் போராடிக் கொண்டு இருந்தனர்.

ஆகஸ்ட் 6-ம் நாள், மேகங்களற்ற தெளிவான வானிலை தவழ்ந்து கொண்டு இருந்தது. ஹிரோஷிமாவின் மேல்... பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியிலிருந்து கர்னல் பால் டிபட்ஸ், தனது தாயாரின் பெயரைத் தாங்கிய 'எனோலா கே’ பி-29 ரக விமானத்தில் வீறிட்டுப் பறந்தார். சுமார் ஆறு மணி நேரம் பறந்து 30,000 அடி உயரத்தில் மிதந்தது விமானம். பாதுகாப்பு அமைப்புகள் நீக்கப்பட்டு 'லிட்டில் பாய்’ அணுகுண்டு வெடிப்ப தற்குத் தயார் செய்யப்பட்டது.

ஜப்பானிய ராடார்கள் இந்த விமானத்தையும், துணைக்கு வந்த மற்ற இரண்டு வகை பி-29 வகை விமானங்களையும் படம் பிடித்துக்காட்டின. ஓரிரு விமானங்கள் மட்டும்தானே சுற்றிக் கொண்டு இருக்கின்றன என்று மெத்தனமாய் இருந்த ஜப்பானிய விமானப் படை, தமது விமானங்களையும், எரிபொருளை யும் சேமிப்பதற்காக வாளாவிருந்தனர். கர்னல் டிபட் ஸுக்கு இது சாதகமாகப் போயிற்று.

ஹிரோஷிமா நேரப்படி காலை 8:15 மணி. திரும்பிப் படுத்து, சோம்பல் முறித்து, மெதுவாக கண்களைத் திறந்து, கட்டிலில் இருந்து எழுந்திட முயற்சி செய்பவனை சம்மட்டியால் தலையில் அடித்து சாய்ப்பதைப் போல, இயங்கத் துவங்கிய ஹிரோஷி மாவின் இடுப்பு முறிக்கப்பட்டது. 60 கிலோ எடை உள்ள U235 யுரேனியம் கொண்ட அணுகுண்டு, விமானத்தில் இருந்து 43 வினாடிகள் பயணித்து 1,900 அடி உயரத்தில் மாபெரும் இடியென வெடித்தது. காற்று வீசிக் கொண்டு இருந்ததால் குறி வைக்கப்பட்ட அயோய் பாலம் தப்பித்தது. ஆனால் ஹிரோஷிமா நகரின் இதயம் எரிந்து அழிந்தது. கிட்டத்தட்ட 78,000 பேர், அதாவது ஹிரோஷிமாவின் மக்கள் தொகையில் 30 சதவிகிதம், உடனடியாக வெந்து, கருகி, ஆவியாகி அப்படியே இறந்தனர். சுமார் 14,000 பேர் காணாமல் போயினர். ஏறத்தாழ 70,000 மக்கள் காயமடைந்தனர். ஹிரோஷிமாவில் இருந்த 90,000 கட்டடங்களில் 62,000 அழிந்து போயின. சாவு சதிராட்டம் போட, அழிவு தாண்டவம் ஆட, மனிதகுலம் நொடிந்து வீழ்ந்தது!

தலைநகர் டோக்கியோவில் இருந்தவர் களுக்கு எதுவும் புரியவில்லை. ஹிரோஷிமா நகரின் வானொலி நிலையம் செயல் இழந்து விட்டது. தந்தி வழி தகவல்கள் தடைபட்டன. ராணுவ நிலையங்களில் இருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. ஜப்பானிய அதிகாரிகள் ஓர் இளம் இராணுவ வீரரை அனுப்பி பார்த்துவரச் சொன்னார்கள். அவரும், அவரது விமானியும் 3 மணி நேரம் பறந்து ஹிரோஷிமாவை நெருங்கியபோது, கண்ட காட்சி அவர்களை அலற வைத்தது. நகரின் மீது ஒரு புகைப்படலம் பெரிய மேகம் போல படர்ந்து கிடந்தது. அதற்குக் கீழே ஒட்டு மொத்தமாய் ஊர் எரிந்து கொண்டு இருந்தது.

அணு ஆட்டம்!

அமெரிக்க அதிபர் ட்ரூமன், 'ஹிரோஷிமா எனும் இராணுவ முகாம் மீது முதல் அணுகுண்டு போடப்பட்டதாகவும், பொதுமக்கள் யாரும் கொல்லப்படக்கூடாது என்பதற்காகவே அப்படி செய்யப்பட்டதாகவும்’ திருவாய் மலர்ந்தருளினார். ஹிரோஷிமாவில் பொதுமக்கள் யாருமே இல்லை வெறும் இராணுவ வீரர்கள் மட்டும்தான் இருந்தார்கள் என்று உலகை நம்ப வைப்பதற்காக அவர் சொன்ன பொய் இது! ஜப்பானிய அக்கிரமத்துக்குத் தக்க பதிலடி கொடுக்கவும், லட்சக்கணக்கான அமெரிக்க உயிர்களை இழக்காமல் இருக்கவுமே அணுகுண்டு உபயோகிக்கப்பட்டதாக அமெரிக்கத் தரப்பு வாதிட்டது. அரசியல்வாதிகளும், அறிவு ஜீவிகளும், ஊடகங்களும் இந்தப் பிரசாரத்தைத் தொடர்ந்து பரப்பி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்தின!

'எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்ற கதை போல சோவியத் ரஷ்யா, ஆகஸ்ட் 9 அன்று ஜப்பான் மீது போர் தொடுத்தது. அமெரிக்கா தனது இரண்டாவது அணுகுண்டான 'ஃபேட் மேன்’ என்பதனை கொக்குரா நகர் மீது வீச எடுத்துச் சென்று... அங்கே மேக மூட்டம் அதிகமாக இருந்ததால், நாகசாகி நகர் மீது வீசியது. இந்த 6.5 கிலோ புளுட்டோனியம் குண்டு வெடித்ததில் 40,000 முதல் 75,000 பேர் வரை உடனடியாக இறந்தனர். ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் ஓர் அணுகுண்டும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மூன்று அணுகுண்டுகள் வீதம் வீசவும் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் எதிரி யிடம் இருக்கும் புதிய, பயங்கரமான, ஆயுதத்தைக் காரணம் காட்டி, தொடர்ந்து போரிட்டால் ஜப்பானிய இனமே அழிந்து போகும் என்பதால், சரண் அடைவது என மன்னர் ஹிரோஹிட்டோ முடிவெடுத்தார்.

ஹிரோஷிமா, நாகசாகி மக்களைப் பலி கொடுத்து சோவியத் ரஷ்யாவுடனான பனிப்போரின் துவக்கத்தில் அதிக செல்வாக்கு பெற்றது அமெரிக்கா. புதிய வகை ஆயுதங்களான அணுகுண்டுகளோடு, புதுவிதப் போர் முறையும், அணு அரசியல் சாதுரியமும், அணு ஆயுதக் குறைப்பு மற்றும் நீக்கப் பேச்சுகளும் நுழைந்திருக்கின்றன மனித வாழ்வில். அணு ஆயுதம் என்பது அரச தீவிரவாதம், பயங்கரவாதம்! அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலகத் தலைமையினை உறுதி செய்து கொள்ளவும், பிற பேட்டை ரவுடிகளான ரஷ்யா, பிரிட்டன், பிரான்சு, சீனா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்கள் செல்வாக்கைத் தூக்கி நிறுத்திக் கொள்ளவும் இந்த அரச பயங்கர வாதத்தைப் பயன்படுத்துகின்றன. பாரதமும் ஒரு பயங்கரவாதியாக மாறியிருப்பது வேதனையானதும், கேவலமானதுமாகும்!

அணு ஆட்டம்!

        ப.அப்துல் சமது

கல்பாக்கம் நகரியத்துக்கு அருகேயுள்ள புதுப்பட்டினம் கிராமத்தைச் சார்ந்த அப்துல் சமது மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர். கல்பாக்கம் அணு உலையின் பாதிப்புகளுக்கு உள்ளாகும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உள்ளூர் குழுக்களுடன் இணைந்து, தான் பொறுப்பு வகிக்கும் த.மு.மு.க./ம.ம.க. இயக்கத்தின் மூலம் தொடர்ந்து போராடி வருகிறார். அணு உலை பாதிப்பு பற்றிய விழிப்பு உணர்வு மற்றும் பாதிக்கப்படும் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சிகிச்சைக்காக பொதுக்கூட்டம், முற்றுகைப் போராட்டம் என்று தொடர்ந்து களமாடி வருகிறார்!

-அதிரும்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism