Published:Updated:

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே -15: 3.8.88

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே -15: 3.8.88

Published:Updated:
பழசு இன்றும் புதுசு

'ஆட்டோ’ சங்கரை நேரில் சந்தித்​தோம்! 

பழசு இன்றும் புதுசு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்னோட முழுப் பேர் கௌரிசங்கர். ஸ்கூல், காலேஜ்லேகூட என்னோட முழுப் பேரைச் சொல்லிக் கேட்டா, யாருக்கும் தெரியாது. சங்கர்ன்னாதான் புரியும். நீங்க நினைக்கறாப்லே எனக்கு அரசியல்வாதிங்க, போலீஸ் அதிகாரிங்க பழக்கம் எதுவும் கிடையாது...'' என்றார் ஆட்டோ சங்கர்!

''நான் பிறந்தது, ஸ்கூல் லைஃப் முடிச்சது எல்லாம் வேலூர் காங்கேயநல்லூர்லதான்... ஹூம்...

##~##
கிருபானந்தவாரியார் பிறந்ததும் காங்கேயநல்லூர்தான்... நானும் அங்கதான் பிறந்தேன்! கொடுமை இல்லையா?'' என்று கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் அவரே பேசினார்.

''படிப்பிலே ஜஸ்ட் பாஸ்தான். அப்புறம் வேலூர்லே ஒரு காலேஜ்ல பி.யூ.சி. முடிச்​சேன். நீங்களே எழுதி இருந்தீங்களே... படிக்கறப்பவே கஞ்சா, சாராயம் எல்லாம் பழக்கமாயிடுச்சு... தொடர்ந்து படிக்கக் காசில்லே... இதுக்கிடையிலே எங்க அம்மா வேறொருத்தர்கூட வாழ ஆரம்பிச்சிட்டா... இதனாலே வெறுத்துப்போய் 'கெட்டும் பட்டணம் சேர்’ன்னு சொல்றாப்லே மெட்ராஸ் வந்து வேலை தேடினேன்... வெள்ளையடிக்கிற வேலைதான் கிடைச்சது. பார்த்தேன்.

எனக்குச் சின்ன வயசிலேயே பணக்காரனா ஆக ஆசை உண்டு... சொந்தமா ஒரு வீடு, கார் இப்படி...! வெள்ளையடிக்கிற வருமானத்திலே இதெல்லாம் கிடைக்குமா என்ன? இதை நினைச்சா வருத்தமா இருக்கும். அப்பத்தான் வில்சன் பழக்கமானான். வில்சன், திருவான்மியூர் ஏரியாவிலே சாராய வியாபாரம் பண்ணிக்கிட்டிருந்தான். சரக்கு சாப்பிடப் போறப்போ பழக்கம்... ஒரு நாள் வில்சன், 'என்னப்பா... நம்ம கூட வேலை பாக்கறியா?’ன்னு கேட்டதும் கொஞ்சமும் யோசிக்காம 'சரி’ன்னு சொல்லிட்டேன்.

வில்சன் என்னை வேலைக்காரன் மாதிரி நடத்தாம, பார்ட்னர் மாதிரி நடத்தினான். அதுக்கு முக்கியமான காரணம், எனக்கு இங்கிலீஷ் பேசத் தெரிஞ்சதுதான்! டெய்லி நைட்லே வேலை முடிச்சுட்டு எல்லாரும் உட்கார்ந்து சரக்கு சாப்பிடுவோம். அப்போ அவங்களுக்குப் புரியுமோ புரியாதோ, என்னை இங்கிலீஷ்லே பேசச் சொல்லுவாங்க...

எத்தினி நாளைக்குத்தான் சரக்கை உள்ளே தள்ளிட்டு இங்கிலீஷ் பேச்சையே கேட்டுக்கிட்டு இருக்கறது... பொம்பளையைத் தள்ள வேணாமா...! தேடி அலைய ஆரம்பிச்சோம். அப்பப்ப பொம்பளைங்களைத் தேடிப்போறது கஷ்டமா இருந்திச்சு. அதனாலே வில்சன் சொன்னாப்லே... ரெண்டு

பழசு இன்றும் புதுசு

பொம்பளைங்களை அழைச்சு வந்து பெர்மனன்டா வைச்சிக்கிட்டோம். ரெண்டு பொம்பளைங்களும் பொதுச் சொத்து! யாரும் எப்பவும் உபயோகிச்சுக்கலாம். நாங்க நாலஞ்சு பேர்தான்.

எங்களைத் தவிர சில பேர் 'பொண்ணு வேணும்’னு கேட்க, 'துட்டுக் குடு’னு வாங்கிட்டு, அவங்களையும் நம்ம பொண்ணுங்ககிட்டே அனுப்பிச்சோம். இப்படியா ரெண்டாவது தொழில் அறிமுகமாச்சு. ரெண்டும் நல்லா பிக்கப் ஆயிடுச்சு!

அந்த நேரத்திலதான் எனக்கும் வில்சனுக்கும் கொஞ்சம் துட்டுத் தகராறு வந்தது. அதுலே 'நீ என்ன பெரிய கொம்பா...? போடா...’ன்னு சொல்லிட்டுத் தனியாவே தொழில் பண்ண ஆரம்பிச்சேன்...'' என்று சொல்லிக்கொண்டே போனவர்,

''ஆனா, ஒரு விஷயம் சார்... பத்திரிகைக்காரங்க பண்றது கொஞ்சங்கூட நியாயமில்லை. இஷ்டத்துக்கு எழுதறீங்க... உண்மையிலேயே எனக்கு எங்க ஏரியா வட்டச் செய​லாளர் பெயர்கூடத் தெரியாது... ஆனாக்கா ஏதாச்சும் மீட்டிங்னா வந்து டொனேஷன் கேப்பாங்க, குடுப்பேன்... அவ்வளவுதான்... அதுக்குப் போய் எம்.எல்.ஏ-வுக்குக் கூட்டிக் குடுத்தேன்... மந்திரிகளுக்கு சப்ளை பண்ணினேன்னு ரொம்பப் பெரிய மனுஷனா ஆக்கிட்டீங்​களே..!'' என்றார்.

சிறிது மௌனத்துக்குப் பிறகு, ''எங்கிட்டே கிட்டத்தட்ட எட்டுப் பொம்பளைங்க உண்டு. எல்லாம் லோஃபர்ங்கதான்... அதுகளையே மிடி, சல்வார் டிரஸ் போடச் சொல்லி அனுப்புவேன். புதுப் பொண்ணா இருந்தா... தொழில்லே முரண்டு பண்ணக்கூடாது, ஓடிடக் கூடாதுங்கறதுக்காகக் கொஞ்ச நாள் என் கீப் மாதிரி வைச்சுப்பேன்... ஆனா, லலிதா நம்மகிட்டே ரொம்ப அட்டாச்டா இருந்தா, ஏதோ என் வொய்ஃப் மாதிரி! 'நீங்க வேற பொம்பளையைத் தொடக்கூடாது’ங்கற மாதிரி கண்டிஷன்ஸ் எல்லாம் போட்டா. எனக்கும் அவமேல ரொம்ப 'இது’தான். ஆனா, அந்த லலிதா... என்னோட வேலைக்காரன் மாதிரியிருந்த சுடலைக் கூட... ச்சே... வெறுத்துட்டேன்...'' என்றவர் திடீரென்று, ''என்னோட குழந்தைகளைப் பாத்தீங்களா? ரொம்ப துடிப்பானவங்க சார்... படிப்பிலேயும் நல்லா ஸ்கோர் பண்றாங்க... ம்... கான்வென்ட்லே படிக்கிற அதுங்களையும் ஸ்கூலை விட்டு வெளியே அனுப்பிடுவாங்க, இல்லையா...?'' என்று கேட்டார்.

''அது சரி... இப்ப வருத்தப்படறதுலே என்ன இருக்கு? முன்னேயே யோசிச்​சிருக்​கணும்... அந்தச் சுடலை கூட லலிதா ஒரு நாள், ரெண்டு நாள் இருந்தா பரவாயில்லே... இழுத்துட்டுப் போய்த் தனிக்குடித்தனமே பண்ண ஆரம்பிச்சுட்டா... சரி, குடித்தனம் பண்றதோட நின்னுக்குவாங்கனு நினைச்சா, போட்டியா நம்ம 'தொழிலையே’ தனியா பண்ண ஆரம்பிச்சுட்​டான் சுடலை. இதனாலே நம்ம வாடிக்கை ரொம்ப பாதிச்சுடுச்சு... அதான் ஒரு நாள் ஃப்ரெண்ட்லியா வரச்சொல்​லித் தண்ணியடிக்கச் சொன்னேன். அப்ப ரொம்ப போதையிலே நம்மகிட்டே தப்பா பேசிட்டாப்லே... கழுத்தை நெரிச்சுட்டேன்... குளோஸாயிட்டான்... பாடியை என்ன பண்ற​துன்னு தெரியாமத்தான் எரிச்சேன்...

அப்புறம் சுடலையைத் தேடி லலிதா வந்தா, சுடலையை குளோஸ் பண்ணியது அவளுக்கு எப்படியோ தெரிஞ்சிருந்தது. அதனாலே அவளையும் தீர்த்துட்டேன்... இந்தச் சுடலையும், ரவிங்கற ஆளும் ரொம்ப தோஸ்த். நான் சுடலையை என் வீட்டுக்குக் கூப்பிட்ட விஷயத்தை ரவிகிட்டே சொல்லிட்டு வந்திருக்கான் போல! அதனாலே ரவி வந்து எங்கிட்டே, 'சுடலை உன்னைப் பார்க்க வந்துட்டுத் திரும்பலையே... என்ன பண்ணினே?’னு கேட்டான். விதி... அவன் கதையையும் முடிக்க வேண்டியதாயிடுச்சு...! ஆனா இந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் இருக்காங்களே... அவங்களைக் கொலை பண்ணணும்னு நான் நெனைச்சுக்கூடப் பாக்கலைங்க...

உண்மையிலே என்னன்னா, இந்த மூணு பேரும் அடிக்கடி வில்சன் கூடச் சுத்தற பசங்க... எங்கிட்டேயே, ஒரு தடவை 'ஒரு பொண்ணு வேணும்’னு கேட்டுக் கூட்டிட்டுப் போயிட்டுக் காசு குடுக்காம மகாபலிபுரம் ரோட்டுப் பக்கமா தனியா விட்டுட்டு வந்துட்டானுக... அந்தப் பொண்ணு அழுதுகிட்டே நடந்து வந்து விஷயத்தைச் சொல்லிச்சு. பழிவாங்கச் சரியான நேரம் பாத்துக்கிட்டு இருந்தோம். ஒரு நாள் மாட்டினாங்க... நல்லா போதைலே வந்த பசங்களை நம்ம ஆட்கள் பாத்து வம்புக்கிழுத்து அடிக்க, அவங்க அடிக்க... அந்த மோகன் கை ஒடிஞ்சிப்போச்சு... உடனே நான் அடிக்கிறதை நிப்பாட்டச் சொல்லிவிட்டு ஒரு வண்டிலே தூக்கிப் போடச் சொல்லி அனுப்பிட்டேன்... அப்பவே ஒருத்தனுக்குப் பேச்சுமூச்சு இல்லே... வண்டி போன கொஞ்ச நேரம் கழிச்சுதான் இதை பாபு என்கிட்டே சொன்னான்... அதும் எப்படி? 'அண்ணே... ஒருத்தன் ஆள் குளோஸ் போல... அப்படியே அனுப்பிட்டா நாம மாட்டிக்குவோம்’னு சொன்னான். உடனே நம்ம அம்பாஸடர் கார்லே துரத்தி அடையாறு பால் பூத் இல்லே... அங்க மறிச்சு மூணு பேரையும் அள்ளி கார்லே போட்டு எங்க வீட்டுக்குள்ளே கொண்டாந்து போட்டுட்டோம்... மறுநாள் காலைலே போய் பார்த்தப்ப... ரெண்டு பேர் செத்துப் போயிருந்தாங்க!

கோவிந்தராஜ் மட்டும் கொஞ்சம் முனங்கிக்கிட்டே தண்ணி கேட்டான்... 'ரெண்டு பேர் செத்து ஒருத்தன் பிழைச்சா... நம்ம கதி என்னாகறது?’ங்கற எண்ணத்துலே, அவனையும் குளோஸ் பண்ணிட்டேன்...'' என்று கொஞ்சமும் தயங்​காமல் சொல்லிக் கொண்டே போனார்.

தொடர்ந்து அவரே, ''புதைக்கறதுலே ஒண்ணும் பிரச்னையில்லை... ஆனா, இந்த சம்பத் பொண்டாட்டிதான் அங்க இங்க அலஞ்சி நம்மளை மாட்ட வெச்சிடுச்சு...'' என்றார்.

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு தொடர்ந்தார் சங்கர்: ''லோக்கல் போலீஸுக்குத் 'தொழில்’ சம்பந்தமா மாமூல் போயிடும்... நான் கொலை பண்ணின விஷயம் எதுவும் தெரியாது... ஆனாக்கா அந்த சம்பத் பொண்டாட்டி குடுத்த புகாரை வெச்சி என்னை ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டாங்க. ரெக்கார்ட் பண்ணாம என்னைப் 14 நாள் வெச்சிருந்தாங்க சார்... ஒவ்வொருத்தரா டெய்லி ஒரு கட்சிக்காரங்க என்னை ஜாமீன்ல அழைச்சுட்டுப் போக முயற்சி பண்ணாங்க... இன்ஸ்பெக்டர் விடமாட்டேன்னுட்டாரு... நான், பாபு, ஜெயவேல் மூணு பேரும்தான் மாட்டினோம். மூணு பேரையும் தனித்தனியா கூப்பிட்டு விசாரிச்சாங்க... ஆனா, லாக்கப்லே போடறப்போ மூணு பேரையும் சேத்தே போட்டாங்க... அதனாலே எங்களுக்குள்ளே 'போலீஸ்கிட்டே என்ன சொல்றது’ன்னு பேசி அதுபடியே அப்போதைக்கு ஏமாத்திட்டோம்... இப்ப மாட்டிக்கிட்டோம்...'' என்று கூறினார்.

கடைசியாக, ''சத்தியமா எனக்கும் அரசியல்வாதிங்​களுக்கும் சம்பந்தமே கிடையாது. ப்ளூ ஃபிலிம், ஆல்பம் தயார் பண்றது இதெல்லாம் கதை... நம்பா​தீங்க...'' என்றார் ஆட்டோ சங்கர்!

சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் இருந்த சங்கரை நாம் சந்தித்தபோது சொன்ன விஷயங்கள்தான் இவை.

இப்போது சங்கர் சென்னை சென்ட்ரல் ஜெயிலில் பலத்த பாதுகாப்போடு இருக்கிறார். அரசியல்வாதிகளின் தொடர்பு இல்லை என்று ஆட்டோ சங்கர் சொல்கிறார். என்றாலும் அவருக்கு ஏதேனும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதால், சங்கருக்குக் கொடுக்கப்படும் உணவு வகைகளை அதிகாரிகள் சாப்பிட்டுப் பார்த்த பிறகே வழங்குகிறார்கள்.

- வி.குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism