Published:Updated:

ஜெ. விடுத்த சவாலை திமுக ஏற்கும்: ஸ்டாலின்

Vikatan Correspondent
ஜெ. விடுத்த சவாலை திமுக ஏற்கும்: ஸ்டாலின்
ஜெ. விடுத்த சவாலை திமுக ஏற்கும்: ஸ்டாலின்
ஜெ. விடுத்த சவாலை திமுக ஏற்கும்: ஸ்டாலின்

சங்கரன்கோவில்: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விடுத்த சவாலை ஏற்று, சங்கரன்கோவில் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

திமுக தென்மண்டல அமைப்புச் செயலரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தலைமை வகித்த இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஸ்டாலின் பேசுகையில், "சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஆட்சிமாற்றத்துக்கான தேர்தல் அல்ல. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் தவற்றை திருத்திக் கொள்வதற்கான தேர்தல்.

கருணாநிதி தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்து எத்தனையோ சாதனைகளைச் செய்துள்ளார். கடந்த முறை முதல்வராக இருந்தபோது யாராலும் செய்ய முடியாத சாதனைகளைச் செய்துள்ளார். இருப்பினும் தேர்தலில் தோல்வியைத் தழுவினோம்.

ஒரு மாற்றம் வேண்டும் என்று, ஆட்சிமாற்றத்தை மக்கள் ஏற்படுத்தினார்கள். ஆனால், மக்களுக்கு தற்போது ஏமாற்றமே வந்து சேர்ந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றாமல், நமது ஆட்சியில் செய்த திட்டங்களை மறைக்கிறார்கள், ஒழிக்கிறார்கள். இதுதான் இந்த அரசின் சாதனை.

மின்வெட்டு நமது ஆட்சியிலும் இருந்தது. ஆனால், முறையாக அறிவிப்பு செய்து குறைந்த அளவே மின்வெட்டை அமல்படுத்தினோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டே இருக்காது என்றார் ஜெயலலிதா. ஆட்சிப் பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகிவிட்டன. மின்வெட்டு சரி செய்யப்பட்டதா? முன்பிருந்ததைவிட தற்போது மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

சட்டப்பேரவையில் ஜனநாயக முறையில் பணியாற்ற முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.

பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்தியுள்ள நிலையிலும், மின்சார கட்டணத்தை உயர்த்தவுள்ள போதிலும், 'சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம். எதிர்த்துப் போட்டியிடுவோர் டெபாசிட் இழப்பார்கள்' என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் சவால் விடுத்தார்.

இது எதிர்க்கட்சித் தலைவருக்கு விடுக்கப்பட்ட சவால் அல்ல. நமக்கு விடுக்கப்பட்ட சவாலாக ஏற்று, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கப் பாடுபட வேண்டும்," என்றார் ஸ்டாலின்.