Published:Updated:

வெள்ள ஆபத்து அடையாற்றில் மீன் அங்காடியா? மேயர் துரைசாமி கிளப்பும் சர்ச்சை!

 வெள்ள ஆபத்து அடையாற்றில் மீன் அங்காடியா? மேயர் துரைசாமி கிளப்பும் சர்ச்சை!
வெள்ள ஆபத்து அடையாற்றில் மீன் அங்காடியா? மேயர் துரைசாமி கிளப்பும் சர்ச்சை!

ழைவெள்ள ஆபத்து அதிகம் இருக்கும் அடையாற்றின் மீது ஆந்திர மீனவர்களுக்காக பெரிய அளவில் நவீன மீன் அங்காடி அமைக்க சென்னை மேயர் துரித நடவடிக்கை எடுத்துவருகிறார் என்றும்,அதனால் சென்னையில் உள்ள 16 மீனவ கிராம மக்கள் மிச்ச சொச்சம் இருக்கும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கவேண்டிய அவலம் ஏற்படவுள்ளது என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியின் கடைசி மாதந்திரக் கூட்டம் நடந்தது.அதில் புதியதாக சென்னை மாநகரில் 88 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதில் ஒன்றுதான் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடையாற்று கரையோரப்பகுதியில் 2 ஏக்கருக்கு மேலான இடத்தில் மீன் அங்காடி அமைக்கும் திட்டம். இதில் 68 கடைகள் அமையவுள்ளன. அந்தக் கடைகளைப் பெற கோடிகளில் வருமானவரி கட்டும் கோடீஸ்வர மீனவர்களால் முடியும்,அதுவும் ஆந்திர மீனவர்களாக இருக்க வேண்டும் என்றும் கொந்தளிக்கின்றனர் சென்னைவாழ் மீனவர்கள்.

இது தொடர்பாகப் பேசிய தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் கு.பாரதி கூறுகையில்," சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை,வானகரம் இங்கெல்லாம் மீனவர்கள் தாமாகவே மீன்களைக் கொண்டு வந்து பல ஆண்டுகளாக  மீன்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இதெல்லாம் பூந்தமல்லி,தாம்பரம் போன்ற பிறபகுதி சிறு மீன் வியாபரிகளுக்கு உதவியாக இருக்கும்.இதெல்லாம் தனியார் அடிப்படையில் நடப்பது. ஆனால் இந்த நிலையில்  சென்னையின் உட்பகுதியான அடையார் கோட்டூர்புரம் பகுதியில் இந்த நவீன மீன் அங்காடி கொண்டுவருவது சென்னை வாழ் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கும்.ஏன் எனில் இந்த அங்காடியில் விற்கப்படவுள்ள மீன்கள்  ஆந்திர மாநில மீன்கள்.சென்னையில் மீன் பிடி தொழில் இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால் ஆதி காலம் தொட்டே இங்கு மீன்பிடி தொழில் இருக்கிறது.சென்னையை ஒட்டிய கடல்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள்தான் இதுவரை நகரில் அதிகம் விற்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது அதற்கு ஆபத்து வரும் நோக்கில்  சென்னை மாநகராட்சி நடந்து கொள்கிறது.

இதற்காக மேயர் துரைசாமி மிகவும் வேகமாகச் செயல்பட்டு வருகிறார்.அடையார் மீன் அங்காடியில் அனுமதி வாங்கி கடை நடத்த  ஒரு கோடி ரூபாய் டர்ன் ஓவர் இருக்கணும்.ஏழுவருஷம் ஐ.டி. கட்டியிருக்கவேண்டும்.10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யணும். இது எப்படி சாமானிய மீனவன் கட்டமுடியும்.ஒருலட்சம் ரூபாய் வரையில் மட்டுமே செலவு செய்து கடைகள் நடத்த சென்னை மீனவர்களால்  முடியும். இவர்களுக்கு மாநகராட்சி கடைகள் வைக்க  உதவாமல் கோடிகளில் செலவு செய்யும் ஆந்திர மீனவர்களுக்கு உதவுகிறது.ஆனால் நாங்கள் தொடர்ந்து  இவர்களுக்கே ஓட்டுப் போட்டு வருகிறோம்.எங்களைக் காப்பார்கள் என்றுதான் நம்புகிறோம். ஆனால் அது நம்பவில்லை.

சென்னையின்  திருவான்மியூர் முதல் காசிமேடு வரை உள்ள மீனவர்கள் பைபர் படகுகள் மட்டுமே வைத்துத் தொழில் செய்துவருகின்றனர்.இவர்களின் மொத்த முதலீடே ஒவ்வொரு மீனவருக்கும் சுமார் ரூ.5 லட்சம்தான். உதாரணத்திற்கு நொச்சிக்குப்பம்  பகுதியில் மொத்தம் 130 படகுகள் இருக்கின்றன. சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு இருக்கும்.மொத்தமுள்ள 16 மீனவ கிராமங்களிலும் பலகோடி ரூபாய் அளவுக்கு மீனவர்கள் தாமாகவே கடன் வாங்கியும் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.இதையெல்லாம் குறித்து அரசுக்கு
எந்த அறிதலும் இல்லை.அவர்களுக்கு எப்போதெல்லாம் ஈடுசெய்ய முடியாத இழப்புகள் வரும் என்பதைக் குறித்த சரியான புரிதலும் இல்லை.

மொத்தம் அமையவுள்ள 68 புதிய கடைகளுக்கும் நூறுக்கும் மேற்பட்ட லாரிகளில் ஆந்திர மீன்கள் கொண்டுவரப்படும். அப்போ சென்னைக் கடலில் பிடிக்கப்படும் மீன்களை எங்கே கொண்டு விற்பது என்பது தெரியவில்லை. ஆந்திர மீனவர்களுக்கு இவ்ளோ அக்கறை எடுத்து மேயர் செயல்படவேண்டிய அவசியம் இல்லை. அதனால் இதற்காக மிகப் பெரும் அளவில் மீனவர்கள் போராட முடிவெடுத்துள்ளோம்.

அடையார் கழிமுகப் பகுதி கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தில் வருகிற பகுதி. இதை மாநகராட்சி மதிக்கவேண்டும். ஆனால் இதை இப்போது சென்னை மாநகராட்சி மதிக்காமல் மீறுகிறது.இதற்காக சுற்றுச் சூழல் துறையில்கூட  அனுமதி வாங்கவில்லை.ஆனால் அதற்குள்ளாக வரும் மார்ச் மாதம் இது திறக்கப்படும் என்று மேயர் தெரிவிக்கிறார். இது எப்படி என்பதுதான் புரியவில்லை.இது குறித்து மேயரிடம் கேட்டால்,கடைகள் கட்டவில்லை.அங்கே 'செட்' போடுகிறோம் என்கிறார். மற்றதை நேரில் பேசிக்கலாம். உங்களுக்கு ஒரு கடை எடுத்துக்கோங்க என்று பதில் அளிக்கிறார். மேயர் அதிகாரத்தை வெளிப்படையாக துஷ்பிரயோகம் செய்கிறார். ஒட்டுமொத்த மீனவர்களும் இவருக்குத்தான் ஓட்டுப் போட்டோம்.ஆனால் அவர் செய்யும் திட்டங்கள் மீனவர்களுக்காக இல்லை.

நிச்சயம் இந்த திட்டத்திற்கு சென்னை மீனவர்களின் எதிர்ப்பு வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக எதிரொலிக்கும். கண்டிப்பாக எங்கள் ஓட்டு இவர் சார்ந்தவர்களுக்கு இல்லை.மேலும் சுற்றுச் சூழல்துறையில் புகார் தெரிவித்துள்ளோம். கார்ப்பரேஷன் கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம்.முதல்வருக்கு, மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளோம்.மீன்வளத்துறை கமிஷனருக்கும் புகார் தெரிவித்துள்ளோம். இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் மிகப்பெரும் அளவில் போராட்டம் நடத்துவோம்" என்கிறார் கொதிப்பாக.

என்னதான் நடக்கிறது என்று மாநகர மேயர் சைதை துரைசாமியிடம் தொடர்புகொண்டு கேட்டோம். அவர் அளித்த பதிலில், "இந்த விஷயத்தைப் பொறுத்தவரை சென்னை மீனவர்களைத் தவிர வேறு யாரும் இந்த அங்காடியில் கடைபெற கலந்துகொள்ளக் கூடாது என்று விளம்பரத்திலேயே போட்டு இருக்கிறோம்.இப்படி இருக்கையில் புகார் அளித்தவர்கள் உள்நோக்கம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.சென்னையில் 3 தனியார் மீன் மார்க்கெட் வைத்துள்ளார்கள். அவர்கள் பாதிப்படைவார்கள் என்பதற்காக இதை இழுக்கிறார்கள். வேறு ஒன்றும் கிடையாது.

இந்தப் புதிய மார்க்கெட்டின் நோக்கமே சென்னை மீனவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது. இந்த டெண்டரில் வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அப்படி இருக்கையில் எப்படி ஆந்திர மீனவர்கள் வருவார்கள்.கண்டிஷனே இப்படி இருக்கையில் அவர்கள் எந்த அடிப்படையில்  கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. சென்னை மீனவர்களுக்கே என்று இருக்கவும்தானே 120 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.இதில் எப்படி ஆந்திர மீனவர்கள் நுழைய முடியும்.நன்மை அடையமுடியும்.இதில், செய்திகள் வெளியில் வந்ததால் அதைத் தங்களுக்குச் சாதகமாக சிலர் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள் என்றே எண்ண தோன்றுகிறது.  இதன் பின்னணியில் ஒரு நல்ல விஷயம் நடந்துவிட கூடாது என்று நினைத்து எதோ சில சக்திகள் வேலை செய்கிறது." என்று கூறினார் உறுதியாக. 


- சி.தேவராஜன்.