Published:Updated:

அ.தி.மு.க. அரசியல் பயிற்சி களம்...! 91,308 பேர் இணைப்பு விழாவில் ஜெ. பேச்சு

அ.தி.மு.க. அரசியல் பயிற்சி களம்...! 91,308 பேர் இணைப்பு விழாவில் ஜெ. பேச்சு
அ.தி.மு.க. அரசியல் பயிற்சி களம்...! 91,308 பேர் இணைப்பு விழாவில் ஜெ. பேச்சு

உங்கள் அனைவருக்கும் அதிமுக அரசியல் பயிற்சி களமாக அமையும். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பேசினார்.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 91,308 பேர், தங்களது கட்சிகளை விட்டு விலகி அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது.  அ.தி.மு.க. பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய ஜெயலலிதா, "தமிழகத்தில் அம்மா உணவகத்தைப் போல மற்ற மாநிலங்களிலும் தொடங்க முன்வந்துள்ளனர். வெளிநாட்டவரும் அம்மா உணவகங்களைப்  பார்வையிட்டு தங்கள் நாட்டிலும் தொடங்க உள்ளனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும். மக்களுக்காகவே வாழும் நான் மேலும் ஏராளமான மக்கள் நலப்பணிகளை நிறைவேற்ற உள்ளேன். அதிமுகவுக்கு நிகரான இயக்கம் வேறு எதுவும் இல்லை, வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்" என்றார்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் மகன் ரமேஷ், தமாகாவின் தொட்டியம் ராஜசேகரன், காங்கிரசின் திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அதிமுகவில் இணைந்து கொண்டனர். 

இந்த விழாவில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, காமராஜ், கருப்பண்ணன், செல்லூர் ராஜூ, வீரமணி, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், மாபா கே.பாண்டியராஜன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மதுசூதனன், கலைராஜன், ராஜன் செல்லப்பா, அருண்மொழிதேவன், ராமலிங்கம், பாலகங்கா, கலைச்செல்வன், வேணுகோபால், ரத்தினவேல், செந்தில்நாதன், தன்சிங் ஆகியோர் தலைமையில் வந்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

அதிமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாருபாலா தொண்டமான், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவோம். பெண்களின் பணி மகத்தானது, அதன் அடிப்படையில் அதிமுகவில் இணைந்துள்ளேன்" என்றார்.