Published:Updated:

' காவிரி கொந்தளிப்பில், கட்சி விழா தேவைதானா? ' -அதிர வைத்த அ.தி.மு.க கொண்டாட்டம்

' காவிரி கொந்தளிப்பில், கட்சி விழா தேவைதானா? ' -அதிர வைத்த அ.தி.மு.க கொண்டாட்டம்
' காவிரி கொந்தளிப்பில், கட்சி விழா தேவைதானா? ' -அதிர வைத்த அ.தி.மு.க கொண்டாட்டம்

மிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதைக் கண்டித்து, கன்னட அமைப்புகளின் போராட்டம் வலுத்து வரும் வேளையில், ' காவிரி துக்கம் தீராதநிலையில், கட்சி விழா என்ற பெயரில் பிரமாண்டக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க' எனக் கொதிக்கின்றன அரசியல் கட்சிகள். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில், த.மா.கா, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 91,308 பேர் இணைந்தனர். ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் திரண்டதால், ராயப்பேட்டை சாலைகளைக் கடக்க முடியவில்லை. முதல்வர் வரும் வழியில் அனைத்து ரோடுகளும் பிளாக் செய்யப்பட்டுவிட்டன. காவல்துறை அதிகாரிகளோ, ' அரைமணி நேரத்தில் முதல்வர் கிளம்பிவிடுவார். கொஞ்சம் பொறுத்திருங்கள்' என சமாதானம் செய்தனர். " காவிரி பிரச்னையில் இரண்டு மாநிலங்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது, பிரமாண்ட விழா தேவைதானா? ராயப்பேட்டை, அண்ணா சாலை என எந்தப் பக்கமும் நகர முடியவில்லை. ஒரு லட்சம் பேருக்கும் மேல் திரள்வார்கள் என்பதை அறிந்து, தீவுத்திடலில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கலாம்" என ஆதங்கப்பட்டனர் பொதுமக்கள். 

இதுகுறித்து நம்மிடம் பேசினார் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதரணி. " இன்றைக்கு காலையில் இருந்தே ராயப்பேட்டையைக் கடக்க முடியவில்லை. ஏதோ அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போல் இருக்கிறது. விசாரித்தால், அ.தி.மு.கவில் ஒரு லட்சம் பேர் இணைகிறார்கள் என்று சொன்னார்கள். காவிரி பிரச்னையால் இரண்டு மாநிலங்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. எப்போது என்ன நடக்கும் எனத் தெரியாத சூழ்நிலையில், கர்நாடகாவில் தமிழக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவற்றைத் தணிப்பதற்கு என்ன மாதிரியான முயற்சிகளை முதல்வர் எடுத்துக் கொண்டிருக்கிறார்? வெறும் கடிதத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், பிரதமரை நேரில் சந்தித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 

சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் வராமல் காலம் தாழ்த்தியதால், விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்குக்கூட அரசு முயற்சி எடுக்கவில்லை. இப்படியொரு துயரமான சூழலில், வாழை தோரணம், கொடிகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பிரமாண்டமாக கட்சி விழாவை நடத்துகிறது அ.தி.மு.க. இதனால், விவசாயிகள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். தேர்தல் பிரசாரம் போகும் இடங்களில்கூட, துக்க வீடு தென்பட்டாலே மைக்கில் பேசுவதை தவிர்த்துவிடுவோம். காவிரி விவகாரத்தால் தமிழ்நாடே துக்கவீடாக மாறிப் போயிருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் முதல்வர் கவலைப்பட்டதாகத் தெரியில்லை" என்றார் கொந்தளிப்போடு. 

-ஆ.விஜயானந்த் 

படம்: ஆ.முத்துக்குமார்