Published:Updated:

காவிரி வன்முறையால் பெங்களூரு இழந்தது என்ன ?

காவிரி வன்முறையால் பெங்களூரு இழந்தது என்ன ?
காவிரி வன்முறையால் பெங்களூரு இழந்தது என்ன ?

டந்த வாரத்தில் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரைத் திறந்துவிடச் சொல்லி, கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதிகம் எல்லாம் இல்லை, தற்போது கர்நாடக தேக்கி வைத்திருக்கும் காவிரி நீரில் கால் பங்கு தான். ஆனால், அதைக்கூடக் கொடுக்க மனமில்லாத கர்நாடக அரசு மிகவும் யோசித்தது. அப்போது, ஆரம்பித்தது இந்த வன்முறை. முதலில் தமிழர்களுக்கு எதிராகக் கோஷம் போடுவது, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது என்று சிறிய அளவில் ஆரம்பித்த வன்முறை, ஒருகட்டத்தில் தமிழர்களை மிரட்டுவது, அவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்குவது போன்ற வெறியாட்டங்களுக்கு வழிவகுத்தது.


சாலையில் செல்லும் வாகனங்களை அடிப்பது, தீயிட்டுக் கொளுத்துவது, தமிழர்களை அடிப்பது என்று எகிற ஆரம்பித்த கிரைம் ரிப்போர்ட் ஒருகட்டத்தில் அதிகமாகி... தமிழர்களுக்குச் சொந்தமான 96-க்கும் மேற்பட்ட வாகனங்களைக் கொளுத்தி இருக்கிறார்கள். ஆனால், இதை பெங்களூருவில் இருக்கும் அனைத்து கன்னடர்களும் செய்யவில்லை. குறிப்பாக சில அமைப்புகள் மட்டுமே செய்துவருகின்றன. தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பது மட்டுமே இவர்களது குறிக்கோள் இல்லை.

இந்தத் தாக்குதல்களை அப்பட்டமான இனவெறி என்றுதான் சொல்ல வேண்டும். நதிநீர் என்பது தேசிய உடைமை. அதற்கு யாரும் உரிமைகோர முடியாது. ஆனால், அதை நம்முடைய மத்திய அரசுக்கு அதை வெளிப்படையாகச் சொல்ல வாய் வராது. நம்முடைய தண்ணீரைக் கேட்டால், நமக்கும் திக்கென்று... இருக்கும்தான். இருந்தாலும், அதற்கு விவசாயிகள்தானே போராட வேண்டும். ஆனால், கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூருவில் வாகனங்களையும், கடைகளையும் அடித்துக்கொண்டிருக்கும் கும்பல் விவசாயிகள் இல்லை. அவர்களுக்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது. இத்தனை நாட்களாகத் தமிழர்கள் மீது இருந்த கோபம் பொங்கி வெளியே வருகிறது. இதனால் தமிழகத்துக்குத்தான் பாதிப்பு. ஆனால், கர்நாடகாவுக்கு இந்த வன்முறையால் எவ்வுளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது தெரியுமா?

ஒருகாலத்தில், சாஃப்ட்வேர் என்றாலே அது பெங்களூருதான். அதற்குக் காரணம், அங்கு நிலவிய தட்பவெட்ப நிலை. அதனால்தான் வெளிநாடுகளில் இருந்த சாஃப்ட்வேர் கம்பெனிகள் பெங்களூரு நோக்கிப் படையெடுத்தன. அப்படி வெளிநாடுகளில் இருந்துவந்த சாம்சங், ஆரக்கிள், அமேசான் போன்ற நிறுவனங்களோடு இந்திய நிறுவனங்களான ஃபிளிப்கார்ட், ஓலா போன்றவையும் பெங்களூருவில் கடைபோட ஆரம்பித்தன. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத கர்நாடக அரசு, ஆனந்த அதிர்ச்சியில் எல்லா நிறுவனங்களுக்கும் பெங்களூருவில் ‘மட்டும்’ இடம்கொடுக்க ஆரம்பித்தது. இதன்மூலம் இந்தியாவின் சிலிக்கான் வேலி, ஐ.டி.ஹப் என்று பெங்களூருவை அழைக்க ஆரம்பித்தனர். கூட்டம் குவிய ஆரம்பித்தது. 

இன்று அந்த நிலை அப்படியே தலைகீழ். எந்தத் தட்பவெட்ப நிலை காரணமாக நிறுவனங்கள் வர ஆரம்பித்ததோ... அந்தச் சூழ்நிலை அங்கு மாறியது. வாகனங்கள் அதிகரித்ததால் போக்குவரத்துப் பிரச்னை பெரிதானது. ஒப்பீட்டளவில் தமிழ்நாடு முழுமையாக வளர்ந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. சென்னைக்கு அடுத்து சொல்லிக்கொள்ளும்படியாக கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்கள் வளர்ந்துவந்தாலும், கர்நாடகாவில் பெங்களூரு மட்டும்தான் ஹைடெக் வளர்ச்சி பெற்ற நகரம். மற்றவை இன்னமும் வளர்ச்சியின் வாசலைக்கூட தொடாதவை.

தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நிறுவனங்கள் எல்லாம் ஹைதராபாத்தையும், புனேவையும் தேடிப்போகின்றன. இதற்கு கர்நாடக அரசின் முறையற்ற நிர்வாகமும், முன்கூட்டியே திட்டமிடாத நகர்ப்புற வளர்ச்சியும்தான். ஆனால், இப்போது இது நமக்குப் பேசுபொருள் அல்ல; இந்த நிலையில்தான் இந்தக் கலவரம் அந்த மாநகரத்தை முடக்கிப்போட்டிருக்கிறது. 

செப்டம்பர் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் நீரைத் திறந்துவிட உத்தரவு வந்தபோது சிறிய அளவில் ஆரம்பித்த கலவரம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடவில்லை என்றாலும், ஓர் அதிர்வை உண்டாக்கியது. அடுத்து செப்டம்பர் 5-ம் தேதி வந்த நீதிமன்ற உத்தரவால் கொஞ்சம் கொதிப்படையத் தொடங்கியது பெங்களூரு. அப்போது ஐ.டி நிறுவனங்களின் பங்குகள் சரியத் தொடங்கின.
 
கன்னடர்களின் ஆற்றாமை, இனவன்முறையாக வெளியே வர ஆரம்பித்தது. கடந்த திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் 12,000 கன அடி நீரை வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தபோது இனவெறியால் கலவரபூமியானது பெங்களூரு. இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் முழுமையாக முடங்கின. இதன்மூலம் ரூ.22,000 கோடியில் இருந்து ரூ.25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு(அசோசெம்) தெரிவித்து உள்ளது. இது இன்னமும் அதிகரிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். சில முக்கியமான நிறுவனங்கள் இடம்பெயர்வது பற்றி யோசிக்கத்தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். 


அதுபோல தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, மஞ்சள், தானியங்கள், இரும்புக் கம்பிகள், தளவாடப் பொருட்கள், ஆடைகள் எனப் பல பொருட்கள் டன் கணக்கில் கர்நாடகாவுக்குச் செல்கின்றன. இங்குள்ள சரக்கு லாரிகளை புக்கிங் செய்து, அங்கு சரக்குகளை எடுத்துச் செல்கின்றனர். 30 ஆயிரம் லாரிகள் இதில் ஈடுபட்டு வந்தன. தற்போது தமிழர்களுக்கு எதிரான வன்முறையால் லாரி உரிமையாளர்கள் புக்கிங்கை நிறுத்தி இருக்கிறார்கள். இதனால் தினசரி ரூ.1000 கோடி அளவிலான வர்த்தகம் அங்கு முடங்கும். ஏற்கெனவே, அமெரிக்க அரசுகூட ‘கர்நாடகாவுக்கு இப்போது செல்லவேண்டாம்’ என்று தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. சிலிக்கான் வேலி என்கிற பெயரை தற்போது இழந்திருக்கிறது பெங்களூரு. அந்த நகரத்தை அச்சத்தோடு உற்று நோக்க ஆரம்பித்து இருக்கிறது உலகம். தொடரும் வன்முறைகளை கர்நாடக அரசு விரைவில் கட்டுக்குள் கொண்டுவராமல் விட்டுவிட்டால், பற்றி எரியும் நெருப்பில் வீழ்ந்து போக வேண்டியது தான்.


அங்கு போராடும் கன்னடர்கள் எதிர்வினையை யோசிக்காமல் வெறுப்பை உமிழ்ந்துவருகிறார்கள். அவர்களுடைய குறிக்கோள் என்ன என்பது தெரியவில்லை. அங்கு எரிந்துகொண்டிருப்பது தமிழர்களின் வாகனங்கள் மட்டுமல்ல; கன்னடர்களின் மானமும் தான். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். உயரமான மரத்தினுடைய கிளை நுனியில் அமர்ந்துகொண்டு அவர்கள் மரத்தை வெட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு இப்போது புரியாது. காரணம் அவர்களை ஆட்கொண்டு இருப்பது வெறி!


- சமரன்