Published:Updated:

பழைய பன்னீர்செல்வமாக ஃபார்முக்கு திரும்பிய விஜயகாந்த்!  -தே.மு.தி.கவின் 'கலவர' மாற்றங்கள்

பழைய பன்னீர்செல்வமாக ஃபார்முக்கு திரும்பிய விஜயகாந்த்!  -தே.மு.தி.கவின் 'கலவர' மாற்றங்கள்
பழைய பன்னீர்செல்வமாக ஃபார்முக்கு திரும்பிய விஜயகாந்த்!  -தே.மு.தி.கவின் 'கலவர' மாற்றங்கள்

தே.மு.தி.கவின் 12-வது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. " நிர்வாகிகள் மாற்றம், தொண்டர்கள் சந்திப்பு என பழைய கேப்டனைப் பார்க்கிறோம்" என்கின்றனர் கட்சி நிர்வாகிகள். 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டது தே.மு.தி.க. கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவியது மட்டுமல்லாமல், உளுந்தூர்பேட்டையில் டெபாசிட்டை இழந்தார் விஜயகாந்த். ' தி.மு.க அணியில் பங்கு பெறாமல் போனதே, தோல்விக்குக் காரணம்' என நிர்வாகிகள் தெரிவித்ததையும், அமைதியாகக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, தே.மு.தி.கவின் முன்னணி நிர்வாகிகளான பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகிய இருவரும், மாநிலம் முழுவதும் சென்று நிர்வாகிகளை சந்தித்து வந்தனர். மாற்றுக் கட்சிகளுக்கு சென்றுவிடாமல், அவர்களை சமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கினர். இது ஓரளவுக்குப் பலன் அளித்தாலும், தொண்டர்களிடம் இன்னமும் அதிருப்தி நீடிக்கிறது. 

இந்நிலையில், தே.மு.தி.கவின் 12-வது ஆண்டு விழாவையொட்டி, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று கொடியேற்றினார் விஜயகாந்த். சிரித்த முகத்துடன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் கட்சி நிர்வாகி ஒருவர். " தேர்தல் தோல்விக்கான காரணங்களை பல கட்டங்களாக ஆராய்ந்துவிட்டோம். கூட்டணி குழப்பத்திற்கு முழுக் காரணமே அவருடைய மைத்துனர் சுதீஷ்தான் என்பதை உணர்ந்து கொண்டார். ' குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் காரணமாகவே, முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சியில் ஐக்கியமாகிவிட்டனர்' என்பதை மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டார். இதையொட்டி, குடும்பத்திற்குள் வாக்குவாதமும் ஏற்பட்டது. ' இனி கேப்டன் டி.வியை மட்டும் பாருங்கள்'  என சுதீஷிடம் உறுதியாகக் கூறிவிட்டார் கேப்டன். 'இளைஞரணி பொறுப்பில் மட்டும் அவர் செயல்படுவார். முக்கிய முடிவுகளை கேப்டனே எடுப்பார்' என நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது" என்றவர், 

" அதேபோல், கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கு தன்னுடைய பி.ஏ பார்த்தசாரதியும் ஒரு காரணம் என்று, அவரையும் நீக்கிவிட்டார் கேப்டன். விருகம்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதி மட்டுமே, அவரோடு வலம் வருகிறார். கேப்டனின் உடல்நிலையில் முன்பைவிட, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது. தொண்டையில் ஏற்பட்ட பிரச்னையே, வார்த்தை குளறிப் போவதற்குக் காரணமாக இருந்தது. இப்போது அதுவும் சரி செய்யப்பட்டுவிட்டது. தினமும் யோகா, உடற்பயிற்சி என பழைய நிலைக்குத் திரும்பிவிட்டார். வழக்கத்தைவிட, அதிக உற்சாகத்தை அவரிடம் பார்க்க முடிகிறது.

கடந்த வாரம் எங்களிடம் பேசியவர், ' தமிழன் என்று சொல் படத்தின், பத்து நாள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. அது முடிந்ததும் தினமும் கட்சிக்காரர்களை சந்திக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் நாம் போட்டியிடாமல் இருப்பதே நல்லது. ஆளுங்கட்சியின் வன்முறையைத் தாண்டி, படுதோல்வி அடைந்துவிட்டால் கட்சி நிர்வாகிகள் சோர்ந்து போய்விடுவார்கள். சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவெடுப்போம். இனி தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்ப முடிவெடுப்போம்' என உறுதியாகத் தெரிவித்தார். எங்களுடன் பேசிய ஒரு மணி நேரமும், சிரிப்பு, கிண்டல், கேலி, அரசியல் நையாண்டி என பழைய ஃபார்மில் இருந்தார். தொண்டர்களை ஊக்கப்படுத்த இந்த உற்சாகமே போதும்" என்றார் நெகிழ்ச்சியோடு. 

-ஆ.விஜயானந்த்