Published:Updated:

எங்கள் மீது மத்திய அரசு உளவியல் போர்: முதல்வரிடம் உதயகுமார் புகார்

Vikatan Correspondent
எங்கள் மீது மத்திய அரசு உளவியல் போர்: முதல்வரிடம் உதயகுமார் புகார்
எங்கள் மீது மத்திய அரசு உளவியல் போர்: முதல்வரிடம் உதயகுமார் புகார்
எங்கள் மீது மத்திய அரசு உளவியல் போர்: முதல்வரிடம் உதயகுமார் புகார்

சென்னை: தங்கள் மீது மத்திய அரசு உளவியல் போர் தொடுத்துள்ளதாக, முதல்வர் ஜெயலலிதாவிடம் உதயகுமார் தலைமையிலான கூடங்குளம் போராட்டக்குழு புகார் கூறியது.

சென்னை - தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 4 பேர் இன்று பிற்பகல் சந்தித்துப் பேசினர்.

சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் உதயகுமார் கூறியது:

கூடங்குளம் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட இனியன் குழு, அணு மின் நிலையத்தை 2 மணி நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு, எங்கள் நிபுணர்களையும், மக்களையும் சந்திக்காமல் ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது பற்றிய அதிருப்தியை முதல்வரிடம் தெரிவித்தோம்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அடுத்த கட்டப் பணிகள் பற்றி திட்டமிடுவதற்கு, அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் மேற்கொண்ட நடவடிக்கைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம்.

எங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் வருகிறது என்றெல்லாம் கூறி, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவருடைய தூண்டுதலும் இன்றி, எங்கள் வாழ்க்கையின் பாதுகாப்புக்காக, வாழும் உரிமைக்காக மக்களாகிய நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், மத்திய அரசு தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி, எங்கள் மீது உளவியல் போரை நடத்தி வருகிறது. இதுபற்றி முதல்வரிடம் விரிவாக எடுத்துக் கூறினோம்.

மக்களாகிய எங்களுக்கு பண வெறியோ, பதவி வெறியோ இல்லை; அரசியலில் வருவதற்காக நாங்கள் போராடவில்லை என்று அவரிடம் எடுத்துக் கூறினோம்.

எங்களுக்கு வெளிநாட்டில் இருந்தோ, தொண்டு நிறுவனங்களிடம் இருந்தோ நிதி வரவில்லை என்பதை முதல்வரிடம் விளக்கினோம். போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்களின் சொத்து விவரங்களைக் கூட அவரது கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய எங்களது கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை முதல்வரிடம் தந்தோம். அதை வாங்கியவர், நிதானமாகப் படித்துப் பார்ப்பதாகச் சொன்னார்.

கூடங்குளம் பகுதியை நேரடியாக பார்வையிட வேண்டும் என்று முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதற்கு அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

இனியன் குழுவின் அறிக்கை பற்றியெல்லாம் எங்களிடம் முதல்வர் விவாதிக்கவில்லை.

சாதாரண, சாமானிய மக்களுக்கானதே தனது அரசு என்று முதல்வர் ஏற்கெனவே சொல்லியிருந்தார். அதை நாங்கள் நம்புகிறோம். அதனால், எங்களது பிரச்னையை முழுமையாக அவரிடம் தெரிவித்திருக்கிறோம்.

கூடங்குளம் பிரச்னையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படதாக வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என நம்புகிறோம். அந்த முடிவைப் பொறுத்துதான், அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி கூற முடியும்," என்றார் உதயகுமார்.

முன்னதாக,. கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்த இனியன் தலைமையிலான மாநில அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று வழங்கியது குறிப்பிடத்தக்கது.